சாய் பல்லவி: நடிகைகளுக்கான விதிமுறைகளை உடைத்தவர்!

தமிழ் சினிமா ரசிகர்கள் மொழி, வட்டார, பிராந்திய வேறுபாடுகள் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. வெளி மாநிலங்களைச் சேர்ந்த வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டி ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றுள்ளனர்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் இங்கு சோடைபோனதில்லை.

ஆனால், தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தமிழரான சாய் பல்லவி தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் புகழை அடைந்தது ‘பிரேமம்’ என்னும் மலையாளப் படம் வழியாகத்தான்.

‘பிரேமம்’ படத்தின் மலர் டீச்சராக தென்னிந்திய நெஞ்சங்களைக் குறிப்பாக தமிழ் ரசிகர்களைக் கொள்ளைகொண்ட சாய் பல்லவியின் பிறந்த நாள் இன்று (மே – 9).

மனதைக் கவர்ந்த மலர் டீச்சர்

நீலகிரி மாவட்டத்தில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்தவரான சாய் பல்லவி, மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்.

ஆனால் மருத்துவராகப் பதிவு செய்துகொள்ளாமல் தன் தாய்வழியாக நடனம் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தொலைக்காட்சி நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

‘கஸ்தூரிமான்’, ‘தாம்தூம்’ திரைப்படங்களில் பெயரிடப்படாத வேடங்களில் தலைகாட்டியவர் 2015-ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ மலையாளப் படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.

தமிழகத்தில் அந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மலர் டீச்சர் கதாபாத்திரமும் சாய் பல்லவியும் தமிழ் ரசிகர்களின் கனவு தேவதைகள் ஆனார்கள்.

நடிப்பிலும் நடனத்திலும் பாராட்டுகளைக் குவித்தவர்

இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிப் படங்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார் சாய் பல்லவி.

தமிழில் ‘மாரி 2’ படத்தில் ‘ரவுடி பேபி’ பாடலில் தனுஷை விஞ்சிய அவரது குத்தாட்டம் மலர் டீச்சரின் மென்மைக்கு நேரெதிரான அதிரடி ஆட்டத்திலும் அவரால் பட்டையைக் கிளப்ப முடியும் என்று நிரூபித்தது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் மனைவியாக ‘என்ஜிகே’ படத்திலும் நடித்தார். ‘ஷ்யாம் சிங்கராய் என்ற தெலுங்கு படத்தில் அவரது நடிப்பும் நடனமும் வெகுவாகப் பாராட்டப் பெற்றது. கார்கி படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பெண்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அழகின் விதிகளை உடைத்தவர்

தமிழ் சினிமாவில் வெற்றிபெறும் கதாநாயகிகளுக்கு முக லட்சணம் சார்ந்த சில எழுதப்படாத விதிகள் உள்ளன.

ஒரு சிறு புள்ளிகூட இல்லாத வழவழப்பான முகப் பொலிவு என்பது அவற்றில் ஒன்று. ஆனால் நம் பக்கத்துவீட்டுப் பெண்களைப் போன்ற பருக்கள் நிரம்பிய முகத்துடன் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும் சாய் பல்லவி அந்த விதியை உடைத்திருக்கிறார்.

பருக்களுடன் இருக்கும் முகமே அவருடைய தனிச் சிறப்புகளில் ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதைவிட முக்கியமாக நடிகைகள் என்றால் சிவப்பு நிறத் தோலுடன் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியும் தமிழ் சினிமாவில் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

இதற்கு விதிவிலக்காக வெற்றிபெற்ற மாநிற, கறுப்பு நிற அழகிகளும்கூட செயற்கையான வசதிகள் மூலம் தம்மை சிவப்பாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பை வெளிப்படுத்தாதவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் ஒருவர் சாய் பல்லவி.

சிவப்பழகு க்ரீம்களுக்கான விளம்பரங்களில் நடிப்பதற்கான ஆஃபரை மறுத்தவர் அத்தகைய க்ரீம்களால் அழகு கூடும் என்று தான் நம்பவில்லை என்பதை அதற்குக் காரணமாகக் கூறினார்.

இதன் மூலம் அவருடைய தன்னம்பிக்கையும் அழகு, நிறம் குறித்த மேம்பட்ட பார்வையும் வெளிப்பட்டன. இதன் மூலம் அவர் மீதான மரியாதை அதிகரித்தது.

தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கு சாய் பல்லவி மேலும் பல வெற்றிகளைக் குவித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

எஸ்.கோபாலகிருஷ்ணன்

– நன்றி: இந்து தமிழ் திசை இதழ்

#பிரேமம் #மலர்டீச்சர் #சாய்பல்லவி #என்ஜிகே #சூர்யா #மாரி 2 #ரவுடிபேபி #premam #malarteacher #saipallavi #ngk #surya #mari #rowdybaby

You might also like