பாரதிய பாஷா பரிஷத் விருது: தமிழில் ஏற்புரை வழங்கினேன்!

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக கொல்கத்தா சென்றுவந்த அனுபவத்தைத் தனது இணையதளத்தில் எழுதியுள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அந்தப் பதிவிலிருந்து…

“பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக எனது மனைவியுடன் ஏப்ரல் 30 மாலை கொல்கத்தாவிற்குச் சென்றிருந்தேன். விமான நிலையத்திலிருந்து நான் தங்குவதற்காக அறை ஒதுக்கப்பட்டிருந்த மீரா இன் போவதற்கு ஒன்றரை மணி நேரமானது. கடுமையான வாகன நெருக்கடி.

இதற்கு முன்பாக கொல்கத்தாவிற்கு நான்கு முறை சென்றிருக்கிறேன். அதே குப்பையும் தூசியும் அழுக்கும் படிந்த நிலை. புதிய மேம்பாலங்களைக் காண முடிந்தது. தொண்ணூறுகளில் பார்த்த டிராம்களைக் காணமுடியவில்லை. நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு இடத்தில் மட்டும் பழைய நினைவாக டிராம் இயக்குகிறார்கள் என்றார் காரோட்டி.

மீரா கோவிலின் மாடியை விருந்தினர் அறையாக மாற்றியிருக்கிறார்கள். சின்னஞ்சிறிய அறைகள். அதில் ஒன்றை ஒதுக்கியிருந்தார்கள். கோவிலின் மாடியில் தங்கியிருந்தது புதிய அனுபவம். மாலை முழுவதும் பக்திப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. மறுநாள் காலை ஆறு மணிக்கு நடைப்பயிற்சிக்கு கிளம்பினால் வாசற்கதவைத் திறக்க எவருமில்லை. விடுதிக் காவலர் உறங்கிக் கொண்டிருந்தார். ஏழு மணிக்கு மேல் தான் கதவைத் திறப்பார்கள் என்றார்.

கொல்கத்தாவின் தினசரி வாழ்க்கை மிக மெதுவாக துவங்கக் கூடியது. அதிகாலையில் காபி குடிப்பதற்கு கூட வழியில்லை. சாலையோர தேநீர் கடைகளில் காபி கிடைப்பதில்லை. ஒன்பது மணிக்கு தான் உணவகங்கள் ஆரம்பமாகின்றன. அங்கும் அவல் உப்புமா, பூரி தவிர வேறு எதுவுமில்லை. கொல்கத்தாவின் வெயில் முறுகிய வெல்லப்பாகு போலிருந்தது. நிறைய பூங்காங்கள் உள்ள நகரம். ஆயினும் உஷ்ணம் மிக அதிகமாகவே இருந்தது.

மே 1 மாலை ஷேக்ஸ்பியர் வீதியில் இருந்த பாரதிய பாஷா பரிஷத்திற்குச் சொந்தமான அரங்கில் விழா நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம்.

பிரசிடென்சி பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் அனுராதா லோகியா விருது வழங்கினார். தலைமை உரை, சிறப்புரை, அறிவிப்புகள் என யாவும் பெங்காலி மற்றும் இந்தியில் நடைபெற்றன. எவரும் ஆங்கிலத்தில் பேசவில்லை. எனது ஏற்புரையைத் தமிழில் வழங்கினேன். உரையின் ஆங்கில வடிவத்தை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் அதனை அச்சிட்டுப் பகிரவில்லை. ஏற்புரை என்பதால் மூன்று நிமிஷங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.”

#எழுத்தாளர்எஸ்ராமகிருஷ்ணன் #பாரதியபாஷாபரிஷத்விருது #எஸ்ரா #எஸ்ராமகிருஷ்ணன் #sra #sramakrishnan #bharthiyabashaparisathaward 

You might also like