இயக்குநர் ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர். திரைக்கதை ஆக்கத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் பல மொழிகளில் வெளியான திரைப்படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
அறுபதுகள், எழுபதுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று நான்கு மொழிகளில் மாறி மாறித் திரைப்படங்களைத் தந்து வந்தவர், எண்பதுகளில் இன்னும் வேகவேகமாகப் பணியாற்றினார்.
ஆனால், அப்படங்கள் முன்னர் கண்ட வெற்றிகளை அவருக்குத் தரவில்லை. ஆயினும், ‘கரண்ட் ட்ரெண்ட்’டுக்கு தக்கபடி தன் படைப்புகளைத் தந்தே ஆக வேண்டுமென்ற உத்வேகத்தோடு தனது தனித்துவமான பார்வையும் சேர்ந்திருக்க வேண்டுமென்று மெனக்கெட்டார்.
அப்படி அவர் தந்த படங்களில் ஒன்று ‘யாரோ எழுதிய கவிதை’.
சிவகுமார், ஜெயஸ்ரீ, ராஜேஷ், தேங்காய் சீனிவாசன், கோவை சரளா, சார்லி, சங்கரன், விஜயசந்திரிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பை ஆர்.பாஸ்கரன் கையாண்டிருந்தார்.
இப்படம் 1986, மே 1ஆம் தேதியன்று வெளியானது. இதே நாளில் ஸ்ரீதர் இயக்கத்தில் கமல், அம்பிகா நடித்த ‘நானும் ஒரு தொழிலாளி’யும் வந்தது.
இதே ஆண்டில் அர்ஜுன், சாதனா நடித்த ‘குளிர்கால மேகங்கள்’ என்றொரு படத்தையும் தந்தார் ஸ்ரீதர்.
இதுவே அந்நாட்களில் அவர் எத்தனை துடிப்போடு இயங்கி வந்தார் என்பதைச் சொல்லிடும்.
முக்கோணக் காதல்!
ஒரு விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த ஒரு பெண் தன் நினைவை இழக்கிறார். அவருக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர், மெல்ல அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். அப்பெண்ணும் காதலிக்கிறார். ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர்.
அப்போதும், அப்பெண்ணின் கடந்த காலம் நினைவுக்கு வந்தாக வேண்டுமென்பதில் அந்த மருத்துவர் உறுதியாக இருக்கிறார்.
அதற்காகச் சில மனோதத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கையில், இன்னொருவரின் மனைவியாகத் தான் வாழ்ந்ததை நினைவுகூர்கிறார் அப்பெண். அதேநேரத்தில், அவரது கணவரை நேரில் சந்திக்கிறார் அந்த மருத்துவர்.
உண்மை தெரிந்தபிறகு, அந்த மருத்துவரால் அப்பெண் உடனான காதலைத் தொடர முடிந்ததா? அப்பெண்ணின் கணவர் எப்படிப்பட்ட மனநிலையில் வாழ்கிறார்? இறுதியில் அந்த பெண் யாரைத் தனது துணையாக ஏற்றார் என்று சொல்வதோடு முடிவடைந்திருந்தது ‘யா.எ.க.’ திரைப்படம்.
தான் முதன்முறையாக இயக்கிய ‘கல்யாணப்பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ முதல் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ உட்படப் பல படங்களில் ‘முக்கோணக் காதல்’ கதையைத் திறம்படக் கையாண்டவர் ஸ்ரீதர்.
இதிலும் அப்படியொரு கதையையே அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.
கிட்டத்தட்ட இதே தொனியில் ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படம் அமைந்திருக்கும்.
அதில், நாயகி பிரகதியைக் கல்லூரிப் பெண்ணாகவும், சுரேஷின் காதலியாகவும் படைத்திருந்தார் இயக்குநர் கே.பாக்யராஜ்.
விபத்துக்குள்ளான பிரகதியைக் காப்பாற்றி அடைக்கலம் தந்து, பின்னர் அவரை விரும்புகிற பாத்திரத்தில் பாக்யராஜ் தோன்றியிருந்தார்.
எஸ்.பி.ஜனநாதனின் ‘இயற்கை’ திரைப்படத்தில் நாயகி குட்டி ராதிகா தன்னை விட்டுச் சென்ற காதலன் அருண்குமாரை மறக்க முடியாமல் தவிப்பார்.
ஆனால், ஷாமின் வருகை அதனைச் செய்யும். இறுதியில் ஷாம் – குட்டி ராதிகா திருமணம் நடக்கவிருக்கிற நேரத்தில் நெடுங்காலம் கழித்து மீண்டும் அருண்குமார் குட்டி ராதிகாவைச் சந்திப்பதாக அப்படத்தின் இறுதிக்காட்சி இருக்கும்.
இப்படிப் பல படங்கள் இதே வகையறாவில் ‘முக்கோணக் காதல்’ கதைகளைக் கையாண்டிருக்கின்றன.
இந்த படத்தில் நாயகி ஜெயஸ்ரீ நாயகன் சிவகுமாரை மனதார காதலிப்பதாகக் காட்டியிருப்பார் ஸ்ரீதர். ஆனால், அவரை விட்டுவிட்டு கணவரான ராஜேஷ் உடன் செல்வதாக முடிவு அமைந்திருக்கும். அது ரசிகர்களிடம் எடுபடவில்லை.
எழுத்தாளர், பத்திரிகையாளர் வாஸந்தி எழுதிய ‘ஜனனம்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம். டைட்டில் கார்டில் அதனைக் குறிப்பிட்டிருந்தார் ஸ்ரீதர்.
ராஜேஷின் வாதம்!
ஸ்ரீதர் இயக்கிய ‘ஆலய தீபம்’ படத்தில் முதன்முறையாக அவருடன் இணைந்து பணியாற்றினார் நடிகர் ராஜேஷ்.
திரையாளுமைகள் பலரைக் கண்டு வியக்கிற சுபாவம் கொண்ட அவருக்கு ஸ்ரீதர் படங்கள் என்றால் உயிர்.
அதுவும் ‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘காதலிக்க நேரமில்லை’ படங்கள் எல்லாம் பொக்கிஷம்.
அப்படிப்பட்டவர் இயக்குநர் ஸ்ரீதரை நேரில் கண்டபோது பல விஷயங்களைப் பேசியதாக, ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணனிடம் தெரிவித்திருந்தார்.
யாரோ எழுதிய கவிதை படத்தின் கதையைத் தயாரிப்பாளர் நஞ்சப்பன் அலுவலகத்தில் வைத்து கேட்டதாகவும், அப்போதே அந்தக் கதை பிடிக்கவில்லை என்று ஸ்ரீதரிடம் நேராகத் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார் ராஜேஷ்.
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை சுனில் தத், நர்கீஸ் உடன் தன்னை வைத்து எடுக்குமாறு ராஜ்கபூர் கூறியபோது, அதனை மறுதலித்தவர் இயக்குநர் ஸ்ரீதர். அதேபோல, நடிகர் திலீப்குமார் தன்னோடு பணியாற்ற முன்வந்ததையும் ஏற்க மறுத்திருக்கிறார்.
அதற்கு, இயக்குனர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர் தலையிடுவார் என்பதை நேரில் ஒருமுறை கண்ட அனுபவம்.
அதனை ராஜேஷிடம் குறிப்பிட்டிருக்கிற ஸ்ரீதர், அவை இரண்டும் தான் தவறவிட்டவை’ என்று ‘யாரோ எழுதிய கவிதை’ கதை விவாதத்தின்போது ராஜேஷிடம் கூறியிருக்கிறார்.
அத்தனை தகவல்களையும் பகிர்ந்த இயக்குனர் ஸ்ரீதர், ராஜேஷ் சொன்ன திருத்தங்களை ஏற்கவில்லை.
‘ஒரு திரைப்படமாக உருவாகிறபோது தனது திறமை ராஜேஷின் சந்தேகங்களை முழுமையாக அகற்றும்’ என்று அவர் திடமாக நம்பியிருக்கிறார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை என்பதைப் படத்தின் ‘ரிசல்ட்’ நிரூபித்தது.
இப்படத்தின் நடிகர் நடிகையர் தேர்வும் இதன் தோல்விக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.
தேங்காய் சீனிவாசன், விஜயசந்திரிகா, கோவை சரளா தோன்றுகிற முதல் காட்சியே அதற்கொரு உதாரணமாக இருக்கும்.
அக்காட்சியில் அவர்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருந்தாலும், அவசர கதியில் அவர்கள் வசனம் பேசுவதாக நமக்குத் தெரியும். அந்த ‘நிதானமின்மை’ படத்தின் ஒழுங்கைப் பாதித்திருந்தது.
அதேநேரத்தில், ஸ்ரீதர் படங்களில் பாடல்கள் சட்டென்று வசீகரிக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணமாகத் திகழ்கிறது இப்படம்.
புதிய இசையமைப்பாளர்!
‘யாரோ எழுதிய கவிதை’ படத்திற்கு ஆனந்தா ஷங்கர் இசையமைத்திருந்தார். இவர் பிரபல நடன தம்பதி உதய் ஷங்கர் – அமலாவின் மகன். இசைக்கலைஞர் பண்டிட் ரவிஷங்கர் இவரது சித்தப்பா.

கலப்பு இசையின் வழியே மேற்கத்திய இசை வடிவத்தோடு பாரம்பரிய இந்திய இசை மரபைப் பிணைக்கிற முயற்சிகளை மேற்கொண்டவர் ஆனந்தா ஷங்கர்.
இந்தியா ரிமெம்பர்ஸ் எல்விஸ், எ மியூசிகல் டிஸ்கவரி ஆஃப் இந்தியா உட்படச் சில இசை ஆல்பங்களை உருவாக்கியிருக்கிறார்.
இவரது ஆல்பத்தில் ‘யாரோ எழுதிய கவிதை’யும் ஒன்று என்பது தமிழ் திரையுலகுக்குப் பெருமை.
இப்படத்தின் விளம்பரங்களில் இவரது பெயர் ஆனந்த ஷங்கர் என்றே இடம்பெற்றிருக்கிறது. சர்வதேச அளவில் இசைக்கச்சேரிகள் புரிவதில் ஈடுபட்ட ஒருவரை எவ்வாறு தமிழ் திரையுலகுக்கு ஸ்ரீதர் இழுத்து வந்தார் என்பது ரசிகர்கள் அறியாத ஒரு புதிர்.
’பருவம் கனிந்து வந்த பாவை வருக’ பாடல் இப்படத்தை ரசிகர்களுக்கு நினைவூட்டுவதாக உள்ளது. ’நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான்’ பாடல் வித்தியாசமான அனுபவத்தைத் தரும். இவ்விரண்டையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.
’ஆஹா ஆயிரம் சுகம்’, ’யார் போகும் வழியில் விழியே போகிறாய்’, ’இதயம் முழுதும்’ பாடல்களை கவிஞர் மு.மேத்தா எழுதியிருந்தார்.
இப்பாடல்கள் அனைத்துமே இனிமையான நினைவுகளை ரசிகர்களிடத்தில் பொதித்து வைத்திருக்கின்றன. இவற்றை கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம் இருவரும் பாடியிருந்தனர்.
வங்காள இயக்குனர் மிருணாள் சென் இயக்கிய கல்கத்தா 71, கோரஸ், படாடிக் படங்களுக்கு ஆனந்தா ஷங்கர் இசையமைத்திருக்கிறார்.
அதைத் தவிர வேறு இந்தியப் படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறாரா என்று தெரியவில்லை.
இயக்குனர் ஸ்ரீதர் தனது வாழ்நாளில் 52 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதில் ‘யாரோ எழுதிய கவிதை’யும் ஒன்று.
எப்போதும் போல, இப்படமும் யாரோ சில ரசிகர்களின் மனதுக்கு மிக நெருக்கமான படைப்பாக இருக்கும்.
அதற்கு ஆனந்தா ஷங்கரின் பாடல்களும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். அந்த எண்ணத்தை வலுப்படுத்துகின்றன அவை தரும் சுவையனுபவம்!
– மாபா