டூரிஸ்ட் பேமிலி – ரசிக்கத்தக்க ‘பீல்குட்’ படமா?

அயோத்தி, கருடன் படங்களுக்குப் பிறகு மேலே உயர்ந்து வருகிறது சசிகுமாரின் ‘கிராஃப்’. அதனால், ’மீண்டும் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி காலம் வந்திடுமா’ என்ற எண்ணம் திரையுலகைச் சேர்ந்தவர்களைத் தொற்றியிருக்கிறது.

இந்தச் சூழலில் ’குட்நைட்’ பட தயாரிப்பு நிறுவனம், அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஷான் ரோல்டன் உள்ளிட்ட வித்தியாசமான நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குழு என்று உருவாகியிருக்கிறது ‘டூரிஸ்ட் பேமிலி’. தொடக்கம் முதலே எதிர்பார்ப்பைக் கிளறிய இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

‘டூரிஸ்ட் பேமிலி’ ரசிக்கத்தக்க ‘பீல்குட்’ படமாக இருக்கிறதா?

‘டூ.பே’ கதை!

கோவிட் – 19 காலகட்டத்திற்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களால் அல்லலுற்று, திருட்டுத்தனமாக ஒரு படகில் ஏறி ராமேஸ்வரம் வந்திறங்குகிறார் தர்மதாஸ் (சசிகுமார்). மனைவி வசந்தி (சிம்ரன்), மகன்கள் நிதுஷன் (மிதுன் ஜெய்சங்கர்), முள்ளி (கமலேஷ்) சகிதம் அவர் வந்திறங்க, அவர்களுக்காகக் கடற்கரையோரம் காத்திருக்கிறார் அவர்களது உறவினர் ஒருவர் (யோகிபாபு).

வந்த இடத்தில் கான்ஸ்டபிள் பைரவன் (ரமேஷ் திலக்) அவர்களைப் பிடிக்கிறார். கைது செய்து அழைத்துச் செல்கையில், சிறுவன் முள்ளி செய்கிற சேட்டைகள் அவர் மனதைச் சட்டென்று பற்றுகிறது. அவர்களைப் பார்த்ததும் ‘தீங்கற்றவர்கள்’ என்று தோன்ற, நடுவழியில் இறக்கி விட்டுவிடுகிறார் பைரவன். உடனிருக்கும் போலீசாரால் அதனை ஏற்க முடிவதில்லை.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வருகிறது தர்மதாஸ் குடும்பம். ‘வந்த இடத்துல வாயை திறந்து சிலோன்ல இருந்து வந்தவங்கன்னு காட்டிடக் கூடாது’ என்பது அந்த உறவினர் சொல்கிற பால பாடம்.

ஆனால், தர்மதாஸ், வசந்தி மற்றும் அவர்களது பிள்ளைகளால் அதனைப் பின்பற்ற முடிவதில்லை. அதனால், அவர்கள் வசிக்கும் கேசவநகர் காலனியில் வசிக்கும் அனைவருக்கும் அவர்களது பின்னணி தெரிய வருகிறது. அதற்குள் அங்கிருப்பவர்களோடு அவர்கள் நன்றாகப் பழகி விடுகின்றனர்.

இந்தச் சூழலில், ராமேஸ்வரத்தில் குப்பைத் தொட்டியில் இருந்த குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்படுகிறது.

சிசிடிவி காட்சிகளில் தர்மதாஸ் குப்பை கொட்டுகிற காட்சி பதிவாகியிருக்கிறது. பைரவனோடு இருக்கிற கான்ஸ்டபிள் ஒருவர், அதனை அவரிடம் காட்டுகிறார்.

‘குண்டுவெடிப்புக்கு அவரே காரணமாக இருப்பார்’ என்று போலீசார் சந்தேகப்பட, பைரவன் அதனை மறுதலிக்கிறார். ஆனாலும் விதி வலியதாகிப் போகிறது.

ஒருநாள் தர்மதாஸ் குடும்பம் பற்றி தனது மேலதிகாரிகளுக்குத் தகவல் சொல்ல வேண்டிய நிலை பைரவனுக்கு நேரிடுகிறது. அதையடுத்து, அவர்களைத் தேட ஆரம்பிக்கின்றனர் போலீசார்.

அதன்பிறகு என்னவானது? அந்த குற்றச்சாட்டை தர்மதாஸ் குடும்பம் எப்படி எதிர்கொண்டது? கேசவநகர் காலனி மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்தார்களா என்று சொல்கிறது படத்தின் மீதி.

மெல்லிய புன்னகை!

தொடக்க காட்சியிலேயே தானொரு நடுத்தர வயது மனிதன் என்பதை நமக்கு உணர்த்தி விடுகிறார் சசிகுமார். அதனால், அதன்பிறகு அப்பாத்திரமாகவே நமக்கு நோக்கத் தோன்றுகிறது. இதுபோன்ற பாத்திரங்கள் தான் அவரது நடிப்பின் பாலம்.

போலவே, சிம்ரனும் தனது வயதுக்கேற்ற பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். அவரது நடிப்பு பற்றி தனியே விளக்கத் தேவையில்லை. காட்சிகளுக்குத் தகுந்தவாறு தோன்றியிருக்கிறார். அதுவும், ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலின் முன்னே வரும் இசைத்துணுக்கு ஒரு ஆட்டம் போடுகிறார் பாருங்கள். அது ‘ஆஹா.. அடடா..’ ரகம்.

ஆடிய கால்களுக்குள் என்றும் அந்த ‘ரிதம்’ ஒளிந்திருக்கும் என்பது இதுதானோ?!

யோகிபாபு இதில் சொல்கிற ‘ஒன்லைனர்’களுக்கு அவரே சிரித்துவிடலாம். அந்தளவுக்கு ‘தரமான சம்பவம்’ செய்திருக்கிறார். ஆனால், மிகச்சிறிய அளவிலேயே வந்து போயிருக்கிறார்.

சசி – சிம்ரன் பிள்ளைகளாக வரும் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் இருவருமே நம்மைச் சட்டென்று ஈர்க்கின்றனர்.

‘ஆவேஷம்’ படத்தில் மூன்று இளைஞர்களில் ஒருவராக வந்தவரா இவர்’ என்று கேட்கும் அளவுக்கு இதில் இளைத்து வந்திருக்கிறார் மிதுன். பின்பாதியில் இரண்டாம் முறையாக காதலை உணர்கிற தருணத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் நட்சத்திரம் சந்தேகமே இல்லாமல் கமலேஷ் தான். ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைப்பவர், ‘மம்பட்டியான்’ பாடலுக்கு ‘ரீல்ஸ்’ பாணியில் நடனமாடும்போது ‘கலக்கிட்டாப்ல பையன்’ என்று சொல்ல வைக்கிறார்.

இதுபோக எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி, இளங்கோ குமரவேல் என்று பலர் இதிலிருக்கின்றனர்.

பக்ஸ் மகளாக வரும் யோகலட்சுமி, ‘யார் இவர்’ என்று கேட்கும் அளவுக்குத் தோன்றியிருக்கிறார். அவரது தாயாக வருபவர், ஏற்கனவே ‘லவ் டுடே’வில் கலக்கியவர். இதிலும் நல்ல பாத்திரத்தைப் பெற்றிருக்கிறார்.

அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆக நடித்தவர் ‘சூது கவ்வும்’ யோக் ஜேப்பியை நினைவுபடுத்தியிருக்கிறார்.

இது போக சசிகுமார் வசிக்கும் காலனியில் வசிப்பவர்களாகச் சில பாத்திரங்கள் வந்து போகின்றன. அவற்றை ஒன்றிணைப்பதாக, எந்நேரமும் குடித்துவிட்டு வாந்தி எடுக்கிற ஒரு இளைஞன் பாத்திரம் வருகிறது. அதில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நடித்திருக்கிறார்.

அப்பாத்திரங்கள் ஆங்காங்கே வந்து போனாலும், பின்பாதியை உயிர்ப்புமிக்கதாக மாற்றியிருக்கின்றன. கிளைமேக்ஸில் அவர்கள் நடித்திருக்கிற விதம் வெகு இயல்பான மனிதர்களைக் காட்டுகிறது. ஆனால், அதன் வழியே நம்மைப் பற்றுகிற உணர்வு ‘இதுவும் கமர்ஷியல் படத்தின் ஒரு அங்கம்தான்’ என்று உணர்த்துகிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் விஸ்வநாதன் கையாண்டிருக்கிறார். பெரும்பாலான பிரேம்கள் பளிச்சென்று இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

படத்தொகுப்பு செய்த பரத் விக்ரமன், தேவையில்லாத காட்சிகள் என்று எந்தையும் படத்தில் செருகவில்லை.

இதில் கலை இயக்குனராக ராஜ் கமல் பணியாற்றியிருக்கிறார். நடுத்தர வர்க்க குடும்பத்தினர் எப்படி ஒரு வீட்டில் இருப்பார்களோ, அதனைத் திரையில் காட்ட உதவியிருக்கிறார்.

இப்படத்தின் டிஐ, ஒலி வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ் பணிகள் அற்புதமான பங்களிப்பை இப்படத்திற்குத் தந்திருக்கின்றன.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடல்களை ‘மெலடி’ ஆக்கி நம்மை உருக வைத்திருக்கிறார். இரண்டு பாடல்களில் மோகன் ராஜனின் வரிகள் நம்மைக் கலங்க வைக்கின்றன.

பின்னணி இசையைப் பொறுத்தவரை, அடுத்தடுத்து சிரிக்கவும் அழவும் வைக்கிற வித்தை ஷான் ரோல்டனுக்கு கைவந்திருக்கிறது.

இந்த படத்தை எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இது இவரது அறிமுகப்படம்.

மிக எளிமையானதொரு கதை. அதனைச் சுவை படச் சொல்லக் கூடிய காட்சிகள். தெளிவான பாத்திர வார்ப்பு. ஆங்காங்கே நகைச்சுவை மற்றும் உணர்ச்சிவசப்பட வைக்கிற சோகத் தருணங்கள் என்று கனகச்சிதமான ‘பேக்கேஜ்’ஆக திரைக்கதையை ஆக்கியிருக்கிறார்.

ராதாமோகனின் ‘மொழி’, ‘அபியும் நானும்’ படங்களில் எத்தகைய ’திரைக்கதை ட்ரீட்மெண்ட்’ கண்டோமோ, அவற்றோடு ஒப்பிடுகிற வகையிலான ஒரு கதை சொல்லலை இதில் கையாண்டிருக்கிறார் அபிஷன் ஜீவிந்த்.

சிலருக்கு அது ‘பலவீனமாக’த் தெரியலாம்.

ஏனென்றால், இப்படத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து ஒரு குடும்பம் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வருவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. போர்க்காலத்தில் பல கொடுமைகளில் இருந்து தப்பிக்கும் நோக்கில் அகதிகளாகப் பலர் அங்கிருந்து வந்ததை அறிந்தவர்களுக்கு இக்காரணம் ’ஏற்றுக்கொள்ள முடியாததாக’த் தெரியும்.

போலவே, இதில் சசிகுமார் பாத்திரம் சென்னை வாழ் மக்களோடு பழகவும் ஒன்றவும் இக்கதையில் பெரிதாகக் கஷ்டப்படவில்லை. இயக்குனர் அது தேவையில்லை என்று புறக்கணித்திருக்கிறார். சிலருக்கு அதனை ஏற்க முடியாது போகலாம்.

‘இலங்கைத் தமிழர்கள்’ பேசுகிற வட்டார வழக்கைக் கண்டதும், ‘நீங்க கேரளாவா’ என்று கேட்பவர்கள் இப்போதும் உண்டு. அதனைக் கிண்டலடித்திருக்கிறார் இயக்குனர். ஆனால், அவர்களைப் புறக்கணிக்கிற தொனியை வெளிப்படுத்துபவர்களைப் பற்றி, அந்த வலியைப் பற்றி பேசவில்லை. அதுவும் தேவையில்லை என்று அவர் கருதியிருக்கலாம்.

முழுக்க வடக்கு இலங்கை தமிழர்கள் பேசுகிற வசனங்களை வைக்காமல், ‘புரிய வேண்டும் என்பதற்காகச் சில கடின பிரயோகங்களைத் தவிர்த்திருக்கிறோம்’ என்று முன்னெச்சரிக்கையாக ஒரு ‘கார்டு’ம் டைட்டிலில் வந்துவிடுகிறது.

இப்படி இயக்குனர் கையாண்ட சில முடிவுகள், ‘டூரிஸ்ட் பேமிலி’யின் கதையைக் கனமற்றதாகத் தோன்றச் செய்கிறது. ஆனால், அவற்றை மறக்கிற அளவுக்குத் திரைக்கதை இதில் அமைந்திருக்கிறது.

இதிலும் பலவீனங்களைக் கண்டறிய முடியும் என்பதே உண்மை. அதனை மீறி, ’தியேட்டரில் இப்படத்தை ரசிக்கலாம்’ என்று சொல்கிற அளவுக்குச் சுமார் பத்து காட்சிகளாவது ‘ப்ரெஷ்’ அனுபவத்தைத் தருகின்றன.

தேர்ந்த நடிப்பும், வித்தியாசமான கூட்டணியும், சிரத்தையோடு கூடிய நல்லுழைப்பும் அதனைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.

சில படங்கள் ‘மிக மெலிதான’ கதையம்சத்துடன், திரையில் படம் ஓடுகிற நேரம் தெரியாத அளவுக்குச் சுவையான காட்சியாக்கத்துடன், சிறப்பான கலைஞர்களின் பங்களிப்புடன் நம்மை வசீகரிக்கும். ‘டூரிஸ்ட் பேமிலி’ அப்படியொரு வரிசையில் சேர்ந்திருக்கிறது.

இதற்கு மேல், ‘இது பீல்குட் படமா’ என்று ரசிகர்கள்தான் பார்த்து, ரசித்து, பதிலைச் சொல்ல வேண்டும்..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like