ஒரு கோடு கிழித்தால், அதனை விடப் பெரியதாகக் கோடு இட வேண்டும் என்கிற மனப்பான்மை எல்லா இடங்களிலும் உண்டு; அப்படியிருக்க, திரைத்துறை மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? அந்த வகையில், ‘வன்முறை’ தெறிக்கிற படங்களை ‘பான் இந்தியா’ படங்களாக உயர்த்திப் பிடிக்கிற கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. அந்த ஒரு அம்சத்தினால் மட்டுமே பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்திட முடியும் என்ற நம்பிக்கைக்கான உதாரணங்களாக மார்கோ உள்ளிட்ட சில படங்கள் கைகாட்டப்படுகின்றன.
அப்படியொரு சூழலில் தான் வன்முறை, குரூரம், கொடூரம் நிறைந்த கதை மாந்தர்களைக் கொண்ட ‘ஹிட்’ சீரிஸில் மூன்றாவது பாகம் வெளியாகியிருக்கிறது. முதலிரண்டு பாகங்களைத் தந்த இயக்குனர் சைலேஷ் கொலானுவே இதையும் இயக்கியிருக்கிறார். முதலிரண்டு படங்களைத் தயாரித்த நானியே இதைத் தயாரித்திருப்பதோடு நாயகனாகவும் தோன்றியிருக்கிறார்.
சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிற இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி, சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், கோமாலி பிரசாத், ரவீந்திரா விஜய், பிரதீக் பப்பர், டிஸ்கா சோப்ரா ஆகியோரோடு இதில் அடிவி சேஷ், கார்த்தி ஆகியோர் இதில் கௌரவ தோற்றத்தில் வந்து போயிருக்கின்றனர். ஆம், இந்த படத்தில் நம்மூர் கார்த்தியும் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கிறார்.
‘ஹிட்’ படத்தின் முதலிரண்டு பாகங்கள் வன்முறையில் தோய்த்தெடுக்கப்பட்ட கதைகளைக் கொண்டிருந்தது. இப்படத்தின் திரைக்கதையாக்கமாவது அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டிருக்கிறதா?
‘ஹிட்’ அடிக்கிற கதையா?!
மிகக்கொடூரமான முறையில் நிகழ்த்தப்படுகிற, சிறிதளவும் தடயங்களே தென்படாத கொலை வழக்குகள் குறித்து புலனாய்வு செய்கிற, காவல் துறையைச் சேர்ந்த ஹிட் (HIT – Homocide Intervention Team) குழுவில் ஒருவராக இருக்கிறார் போலீஸ் அதிகாரி அர்ஜுன் சர்க்கார் (நானி). அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதில் இருந்து இத்திரைக்கதை தொடங்குகிறது.
சிறையில் அர்ஜுன் சர்க்காரைக் கொல்ல, அவரால் தண்டனை அனுபவிக்கிற சில கைதிகள் முயற்சிக்கின்றனர். அவர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்றுகிறார் இன்னொரு கைதியான சாமுவேல் (ரவீந்திரா விஜய்).
சாமுவேலிடம் தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறார் அர்ஜுன்.
ஹிட் குழுவில் அங்கம் வகிக்கும் அர்ஜுன், கொடூரமான முறையில் ஒரு நபரைக் கொல்கிறார். இன்னொரு நபரைக் கொல்ல முற்படும்போது அவருடன் வேலை செய்கிற பெண் அதிகாரி வர்ஷா (கோமலி பிரசாத்) அவரைத் தடுக்க முயற்சிக்கிறார். அதையும் மீறி அந்த நபரைக் கொல்கிறார் அர்ஜுன். அதனை வீடியோவாக பதிவு செய்து ‘அப்லோட்’ செய்யப் போவதாகவும் கூறுகிறார்.
அதற்கான அர்த்தம் புரியாமல் வர்ஷா குழம்புகிறார்.
அப்போது, காஷ்மீரில் உள்ள ‘ஹிட்’ குழுவில் பணியாற்றியபோது இதே பாணியில் கொலை செய்த நபரைத் தான் பிடித்ததாகக் கூறுகிறார் அர்ஜுன். அதே பாணியில் பீகாரிலும் ஒரு நபர் கொலை செய்திருக்கிறார். அவர்கள் இருவரையும் ‘சிடிகே’ (CTK) எனும் வார்த்தையே பிணைக்கிறது.
அவர்கள் இருவரையும் விசாரணை செய்கிற அர்ஜுன், அந்த ‘சிடிகே’வின் அர்த்தம் கண்டறிகிறார். Capture, Torture, Kill என்பதே அதன் விளக்கம்.
அப்பாவி மனிதர்களைப் பிடித்து, சித்திரவதை செய்து, அவர்களது உடல் பாகங்களைத் தனியே எடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பிவிட்டு, பிறகு அந்த வீடியோவை ‘அப்லோட்’ செய்பவர்கள் சிடிகே குழுவில் உறுப்பினர் ஆவார்கள்.
அவ்வாறு உறுப்பினர்கள் ஆகிறவர்கள் ஆண்டுக்கொரு முறை ஒரு இடத்தில் சந்திப்பார்கள். அந்த சந்திப்பு நடக்கிற இடத்திற்குப் போகத் திட்டமிட்டே, தொடக்கத்தில் இரண்டு கொலைகளைச் செய்திருக்கிறார் அர்ஜுன்.
இப்போது கதை தெரிந்திருக்குமே..? அந்த ‘சிடிகே’ கும்பல் எங்கே ஒன்றுகூடுகின்றனர் என்பதை அறிந்து, அவர்களை அழித்தொழிக்கிற வேலையை அவர் செய்வார் என்பதை சினிமா பார்க்கிற வழக்கம் உள்ள எவரும் சொல்லிவிடுவர். காரணம், இதில் அர்ஜுன் தான் நாயகன்.
குரூரமும் கொடூரமும் நிறைந்த சில மனிதர்கள். அவர்களை விடக் கொடூரமாகச் சிந்தித்து கொல்லத் துடிக்கிற நாயகன். இதுவே இப்படம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக விளக்கிவிடும். ‘இதுதான் ஹிட் அடிக்கிற கதையா’ என்பது ரசிகர்களுக்கே வெளிச்சம்.
கரப்பான்பூச்சிகளைக் கொல்ல ஹிட் எனும் பெயரிலான ஒரு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவார்கள் சிலர். என்னைப் பொறுத்தவரை, இந்தப் படத்தில் நாயக பாத்திரம் முதல் அவரை எதிர்த்து நிற்கிற பாத்திரங்கள் அனைத்தும், எதிரே நிற்பவரைக் கரப்பான் பூச்சிகள் போன்றே ‘ட்ரீட்’ செய்கிற ‘ஹிட்’ தயாரிப்புகளாக இருக்கின்றன.
’எனக்கு அது உவப்பானது தான்’ என்பவர்கள் மட்டுமே ‘ஹிட் 3’யைப் பார்க்கலாம். மீறிப் பார்த்துவிட்டு நான்கைந்து நாட்களாக வாந்தியும் பேதியுமாகக் கிடந்தால் கம்பெனி பொறுப்பல்ல..!
ரசிக்கலாமா..?!
’நான் இங்க வந்ததுல இருந்து உன்னால இங்க ஸ்டாண்ட் பண்ண முடியாதுன்னு சொல்றதை கேட்டுகிட்டுதான் இருக்கேன்’ என்று தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சிலருக்கு நானி பேசுகிற ‘பஞ்ச்’ வசனம் இதிலுண்டு. மற்றபடி ‘வி’, ‘ஜெண்டில்மேன்’ படங்களில் வருவது போன்று இதிலும் கொஞ்சம் கொடூரமான ஆக்ஷன் ஹீரோ பாத்திரம். அதனைச் சர்வசாதாரணமாகத் திரையில் பிரதிபலித்திருக்கிறார். என்ன, பார்க்கிற நமக்குதான் ஸ்கூல்பேக்கோடு திரிகிற குழந்தை கையில் கூரிய வாளைத் தந்தாற் போலிருக்கிறது.
ஸ்ரீநிதி ஷெட்டி இதில் நாயகி. அவரது பாத்திரம் வருமிடங்களைத் திரைக்கதையில் ஓரளவுக்குப் பொருத்தமான இடங்களில் செருகியிருக்கிறார் இயக்குனர். கேஜிஎஃப், கோப்ராவில் பார்த்தது போலவே இதிலும் அவர் நடித்திருக்கிறார்.
இதில் வில்லனாக வருகிறார் பிரதீக் பப்பர். இரண்டாம் பாதியில் கணிசமான காட்சிகளில் வந்தாலும் அவருக்கு இத்திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறதா என்றால், ’ப்ச்’ என்று உதட்டைப் பிதுக்க வேண்டியிருக்கிறது.
இது போக இப்படத்தில் சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், கோமலி பிரசாத் ரவீந்திரா விஜய், சைத்து ஜோனலகடா உடன் ‘ஐ லவ் இந்தியா’ நாயகி டிஸ்கா சோப்ராவும் இதில் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஹிட் இரண்டாம் பாகத்தின் நாயகனான அடிவி சேஷ் இதன் கிளைமேக்ஸில் தோன்றுகிறார். ஜெயிலர் படம் பார்த்த எபெக்டில் அக்காட்சிகள் இருக்கின்றன.
இப்படம் தரும் இன்னொரு ஆச்சர்யம் கார்த்தியின் இருப்பு. இவர்தான் ‘ஹிட் 4’இல் நடிக்கப் போகிறாராம். வீரப்பன் என்ற பெயரில் அவரது பாத்திரம் கடைசியாகக் காட்டப்படுகிறது. ‘நேனு பைலிங்குவல்ரா’ என்றவாறே ‘அலட்டலான’ உடல்மொழியுடன் வருகிறார். ஆக, ‘ஹிட்’ சீரிஸில் கொஞ்சம் காமெடியான நாயகனைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.
இப்படியொன்று துளிர் விடுகிறது என்றால், இப்படம் எப்படியிருக்கிறது? அப்படியொன்று துளிர்க்க இடமில்லாத பச்சையற்ற பிரதேசம் போலப் படம் நெடுக எங்கும் ரத்தக்களரியாக இருக்கிறது.
சானு ஜான் வர்கீஸ் இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாம்பலும் கருமையும் நிறைந்த பிரதேசங்களைக் காட்டும்போதும், கண்களுக்கு குளிர்ச்சியாக பிரேம்களை வடிக்க மெனக்கெட்டிருக்கிறார்.
துருப்பிடித்த இரும்பு கலத்திற்குள் நுழைந்த உணர்வைத் திரையில் தர மெனக்கெட்டிருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஸ்ரீநாகேந்திர தண்டலா.
பிளாஷ்பேக்கில் தொடங்கினாலும், டைட்டில் கார்டுக்கு பிறகு மீண்டும் இன்னொரு பிளாஷ்பேக்கை கொணர்கிற திரைக்கதை ரசிகர்களைக் குழப்பாத வகையில் காட்சிகளை அடுக்கியிருக்கிறார் கார்த்திகா ஸ்ரீனிவாஸ். ஆனாலும் ஆங்காங்கே வருகிற ‘வாய்ஸ் ஓவர்’ நம்மை ‘ஜெர்க்’ ஆக்குகிறது.
‘டெக்னோ’ இசையால் காட்சிகளின் பிரமாண்டத்தை, அவை உருவாக்குகிற தாக்கத்தைப் பெரிதாக்க முயற்சித்திருகிறார் பின்னணி இசை நல்கியிருக்கும் மிக்கி ஜே மேயர்.
இது போக ஒலி வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல நுட்பங்கள் இதில் சிரத்தையுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.
அவை எவ்வளவு சிறப்பாக அமைந்தபோதும், திரைக்கதையின் நோக்கம் என்னவோ நம்முள் இருக்கிற ‘வெறி கொண்ட வேங்கையை’ உசுப்புவதாக இருக்கிறது. அதற்கேற்ற நியாயமான காரணங்கள் ஏதுமற்ற அடிப்படைக் கதை அமைந்திருப்பது இப்படத்தின் பலவீனங்களில் ஒன்று.
ஆனால், ரசிகர்கள் அதனை யோசிக்காத அளவுக்குக் காட்சிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த வாடையைப் பாவ விட்டு, சிவப்பு வண்ணத்தைத் திரையில் நிறைத்து, படம் பார்க்கிற நாம் மனதளவில் அதனை நிறைக்கிற அளவுக்கு அதனுள் ஊற வைக்கிறது அந்த வன்முறை சித்தரிப்பு.
‘இதுதான் இன்றைய ரசனை’ என்றால் அதனை ஏற்க முடியாது.
இது போன்று வன்முறையை நிரப்பிய படங்கள் உலகெங்கும் வெளியாகத்தான் செய்கின்றன. ஆனால், அதனைப் பார்ப்பதற்கென்று குறிப்பிட்ட ரசிகர்கள் உண்டு.
ஆனால், அதையே ‘பாப்புலர்’ ஆக்குகிற இந்த ‘பான் இந்தியா’ ட்ரெண்ட்தான் நம்மை கவலை கொள்ளச் செய்கிறது. அதன் பின்னிருப்பவர்கள் ‘இதுதான் வியாபாரம்’ என்கின்றனர். ‘ஹிட் 3’யும் அதிலொன்று.
நானி போன்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கிற நாயகன் ஒருவரது படங்களில் இது போன்ற வன்முறை சித்தரிப்பைப் புகுத்துவதும், பெருவாரியான மக்கள் அதனைப் பார்ப்பதும் நிச்சயம் ஏற்புடையதல்ல. இப்படங்களை அப்படியொரு ‘ஸ்கேலில்’ உருவாக்குவதும் சரியான முடிவல்ல.
மற்றபடி, வீடியோ கேமில் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு எதிர்ப்படுகிறவரை கொல்கிற மனோபாவத்திற்குத் தக்கவாறு ஒரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ வேண்டும் என்பவர்களுக்கு ஏற்றதுதான் ‘ஹிட் 3’. அவ்வாறான எதிர்பார்ப்பு கொண்டவர்கள் பெரிதாக ஏமாற அளவுக்கு ’ஹிட் 3’ உள்ளடக்கத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் சைலேஷ் கொலானு. இதனை ரசிக்கலாமா, வேண்டாமா என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்