அடுத்த போப் யார், எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

திருத்தந்தை, பாப்பரசர், பாப்பிறை, போப்பாண்டவர்.

உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக இருக்கும் போப்புக்கு இப்படி பல பெயர்கள் உள்ளன.

பொதுவாக போப் ஒருவர் மறைந்துவிட்டால் போப்பாண்டவரின் தலைமையகமான வாடிகன் தொடங்கி உலகம் முழுக்க அதிர்ச்சி கலந்த சோகம் ஏற்படும். அதேவேளையில் ஒரு மெல்லிய பரபரப்பும் உருவாகும்.

அடுத்த போப் யார்? அவரது பெயர் என்னவாக இருக்கும்? இதுபற்றி புனித மலாக்கி என்ன சொல்லியிருக்கிறார் என்பது தொடர்பான பரபரப்பு அது.

யார் அந்த புனித மலாக்கி? அவர் என்ன சொல்லியிருக்கிறார்?

புனித மலாக்கி அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். 12ஆம் நூற்றாண்டில் அர்மாக் பகுதியின் பேராயராக (ஆர்ச் பிஷப்பாக) இருந்தவர். தெய்வ அருள் காரணமாக மலாக்கி திருக்காட்சி கண்டு, அதன்மூலம், அடுத்தடுத்து வரப்போகும் 112 போப்களின் பெயர்களை அந்த காலத்திலேயே ஒரு பட்டியலாகத் தொகுத்து விட்டார்.

ஆம். கிட்டத்தட்ட 900 ஆண்டு பழமையான பட்டியல் அது. போப் இரண்டாம் செலஸ்டின் என்பவரில் இருந்து தொடங்குகிறது அந்தப் பட்டியல்.

இந்தப் பட்டியலில் உள்ள பெயர்களின் படிதான் அடுத்தடுத்து போப்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியம்.

புனித மலாக்கி அவரது பட்டியலில் குறிப்பிட்டிருந்த முதல் 74 போப்களின் பெயர்கள் மிகத் துல்லியமாகத் தெளிவாக இருந்தன.

ஆனால், போகப்போக அந்தப் பட்டியலில் இருந்த பெயர்கள் நேரடியாக ஒரு போப்பின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக குறியீடு போல குறிப்பிட ஆரம்பித்தன.

(நாஸ்டிரடாமஸ், பாபா வாங்கா போன்ற தீர்க்கதரிசிகள் அவர்களது தீர்க்கதரிசனங்களில் தெள்ளத்தெளிவாக எதையும் கூற மாட்டார்கள். அப்படிக்கூறினால் அதைப் பயன்படுத்தி பிற்காலத்து நபர்கள் பிழைப்பு நடத்த ஆரம்பித்து விடுவார்கள்.

புனித மலாக்கியும் இதே நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். அவரும் ஒருகட்டத்தில் மறைமுகமாகவே வருங்கால போப்களின் பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.)

97ஆவது போப்பாண்டரின் பெயரை, ‘பேராசை கொண்ட கழுகு’ (Rapacious Eagle) என மலாக்கி குறிப்பிட்டிருந்தார். 97ஆவது போப்பாண்டவராக வந்தவர் ஏழாம் பயஸ்.

அவரது காலத்தில் மன்னர் நெப்போலியன், வாடிகனுக்குச் சொந்தமான நிலப்பரப்புகளை சூறையாடினார். நெப்போலியனின் சின்னம் கழுகு!

ஆகவே பேராசை கொண்ட கழுகின் காலத்தில் வந்த போப்பாண்டவராக ஆனார் ஏழாம் பயஸ்.

104ஆவது போப்புக்கான பெயரை ‘மதஅழிவு’ என்று மலாக்கி குறிப்பிட்டார்.

பதினைந்தாம் பெனடிக் போப்பான அந்த காலகட்டத்தில் முதல் உலகப்போர், ரஷியப் புரட்சி போன்றவை ஏற்பட்டு பல தேவாலயங்கள் குண்டுவீச்சில் சிதைக்கப்பட்டன. ஆகவே மத அழிவு என்பது 104ஆவது போப்புக்குப் பொருந்திப்போனது.

108ஆவது போப்பின் பெயரை ‘பூக்களின் பூ’ என்று மலாக்கி குறிப்பிட்டிருந்தார். 108ஆவது போப்பாக வந்தவர் ஆறாம் பால் (பவுல்). இவரது குடும்பச் சின்னம் பிரான்ஸ் நாட்டின் அரச சின்னமான லில்லிப்பூ. (Fleur-De-Lis)

109ஆவது போப்பை ‘பாதி நிலா’ என்று மலாக்கி சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார். முதலாம் ஜான் பால் 109ஆவது போப்பாக பதவியேற்ற ஒரு மாதத்தில் இறந்தபோதுதான் இந்தப் பெயருக்கான அர்த்தம் புரிந்தது!

110ஆவது போப்பை ‘சூரியனின் தொழிலாளி’ என்று மலாக்கி கூறியிருந்தார். போப் இரண்டாம் ஜான் பால், கிழக்கு ஐரோப்பிய நாடான போலந்தைச் சேர்ந்தவர்.

சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதுடன், போலந்து அப்போது பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) நாடாக தொழிலாளர்களின் நாடாக இருந்ததால் மலாக்கியின் இந்த அருள்வாக்கும் பலித்து விட்டது.

அடுத்ததாக 111ஆவது போப். மஞ்சள் மகிமை என்பது போல ‘ஆலிவ் மகிமை’ என்று இந்த போப்பை மலாக்கி குறிப்பிட்டிருந்தார். ஆலிவ் என்பது ஒலிவமரம். யூத மக்களின் பைபிள் கால குறியீடு ஆலிவ் கொத்து.

அதுபோல கத்தோலிக்க சபைகளில் ஒன்றான பெனடிக்கன் சபையை ஒலிவேத்தியன் சபை என்றும் அழைப்பார்கள்.

அந்த சபையைச் சேர்ந்த பதினாறாம் பெனடிக்ட் என்பவர் போப்பாக மாறி அத்தனைப் பேரையும் ஆச்சரியத்தில் அமிழ்த்தினார்.

சரி. இறுதிக்கட்டத்துக்கு வருவோம்.

புனித மலாக்கி அடுத்து வரப்போகும் 112 போப்களின் பெயர்களை பட்டியலிட்டு இருந்தார். அந்த பட்டியலில் இறுதியாக 112ஆவதாக இருக்கும் பெயர் பெட்ரஸ் ரோமனஸ். அதாவது ரோமாபுரியைச் சேர்ந்த பீட்டர் என்பது இதற்கு அர்த்தம்.

உலகின் முதல் போப்பாக இருந்தவர் இயேசு கிறிஸ்துவின் முதன்மைச் சீடரான புனித இராயப்பர்.

பேதுரு, பெட்ரோ, பீட்டர் என பலமொழிகளில் பலவாறாக அழைக்கப்பட்ட புனித இராயப்பர், ரோம் நகரில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரே முதல் போப்பாக கருதப்படுகிறார்.

உலகின் முதல் போப்பின் பெயர் பீட்டர் என்பதுபோல, இறுதி போப்பின் பெயரும் பீட்டர் என மலாக்கி குறிப்பிட்டிருப்பதால் அது அழிவின் அறிகுறி என்று பலரும் அச்சப்பட ஆரம்பித்தார்கள்.

‘யுக முடிவு வரப்போகிறது. ஏழு குன்றுகளின் மீதுள்ள ரோம் நகரம் அழியப்போகிறது. மூன்றாம் உலகப்போர் மூளப்போகிறது’ என பலவகையான பயம் ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்துவ மக்களிடம் அப்போது எழுந்தது.

ஆனால், நல்லவேளையாக 112ஆவது போப்பாக பீட்டர் என்ற பெயருள்ள யாரும் வரவில்லை. அதற்குப் பதிலாக வந்தவர் தற்போது காலமான போப் பிரான்சிஸ்.

ஆர்ஜெண்டினா நாட்டவரான போப் பிரான்சிசின் இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக் லியோ. போப்பாக பதவியேற்றபிறகுதான் அவர் பிரான்சிஸ் எனப் பெயர் மாற்றப்பட்டார்.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ்சுக்கும், பீட்டர் என்ற பெயருக்கும் ஏதாவது மறைமுகத் தொடர்பு இருக்கிறதா என இன்னும் கூட பலர் ஆராய்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையே, புனித மலாக்கியின் பட்டியலைத் தாண்டி 113ஆவது போப்பாக (போப்களின் வரிசையில் 267ஆவது போப்பாக) வரப்போகிறவரின் பெயர் ஒருவேளை பீட்டர் என்று இருந்து விட்டால் என்ன ஆகும் என்ற பயம் கத்தோலிக்கக் கிறிஸ்துவ மக்களிடம் உள்ளது. அவரே கடைசி போப்பாக இருப்பாரோ, உலகம் அழிந்துவிடுமோ என்ற பயம் கலந்த பரபரப்பு நிலவுகிறது.

‘புனித மலாக்கி அவரால் முடிந்த அளவுக்கு, அடுத்து வரும் 112 போப்களின் பெயர்ப் பட்டியலை அந்தகாலத்தில் தொகுத்திருக்கிறார்.

அந்தப் பட்டியல் அதோடு முடிந்து விடும் என்று அர்த்தமில்லை. அதற்குப்பிறகும் போப்கள் தொடர்வார்கள்’ என்ற நம்பிக்கையும் இன்னொரு பக்கம் இருக்கிறது.

புதிதாக வரப்போகிற போப்பின் பெயர் என்ன? உலகமே இப்போது ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பது இதைத்தான்.

நன்றி: தாய்த் தமிழ் நாளிதழ், மோகன ரூபன் முகநூல் பதிவு 

You might also like