யார் யாரையோ இணைப்பது அன்புதான்!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11

 ******

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”

              – செம்புலப் பெயனீரார்.

              – குறுந்தொகை பாடல் 40

பொருள்:

யாய்=என் தாய்; ஞாய் = உன்னுடைய தாய்; நுந்தை = உன்னுடைய தந்தை; புலம் = நிலம்; செம்புலம் = சிவந்த நிலம்; பெயல் = மழை.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ? = என் தாயும் உன் தாயும் யார்?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? = என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்தில் உறவினர்கள்

யானும் நீயும் எவ்வழி அறிதும்? = நீயும் நானும் எந்த வழியில் உறவினர்கள்?

செம்புலப் பெயல் நீர் போல = செம்மண் நிலத்தில் விழுந்த நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. = அன்பு கொண்ட நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தனவே.

செம்புலம் என்பது செம்மண் நிலம். சிலர் செம்மையான நிலம் என்பர். சம நிலம் என்பார் அறிஞர் இராமகி. எனினும் செம்மண் நிலம் என்பதுதான் பாடலுக்குப் பொருந்துகிறது.

மழைநீர் வயலில் பெய்ததும் மண்ணும் மழைநீரும் கலந்து நீருக்கு மண்ணின் நிறமும் சுவையும் மணமும் வந்து விடுகின்றன.

மண்ணும் கடினத்தன்மை மாறி நீருடன் கரைந்து விடுகின்றது. மழை நீரும் மண்ணும் கலந்து விடுவதுபோல் இரண்டு அன்பு உள்ளங்களும் கலந்து விட்டனவாம்.

குலம் முதலிய எவ்வேறுபாடும் பார்க்காத கலப்புத் திருமணம் சங்கக் காலத்தில் இருந்ததற்க எடுத்துக்காட்டாக இதைக் கூறுவர்.

சங்கக்காலம் தொகுக்கப்படுவதற்குப் பல நூறு ஆண்டுகள் முன்னரே இயற்றப்பட்ட பாடல் இது. இயற்றியவர் பெயர் தெரியாமல், இதில் வரும் உவமையை அடிப்படையாகக் கொண்டு செம்புலப்பெயல் நீரார் என்கின்றனர்.

இயற்பெயர் அறியப்படாமல், தாம் படைத்த உவமைகளால் பெயர் பெற்ற புலவர்களுள் ஒருவரானார் இவர்.

இப்பாடல் மக்களைக் கவர்ந்ததுபோல் பாடலாசிரியர்களை மிகவும் கவர்ந்து விட்டது. எனவே, திரைப்படப்பாடல்களில் இக்கருத்தை எதிரொலித்துள்ளனர்.

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

என்றார் கண்ணதாசன். (படம்: வாழ்க்கைப் படகு)

கவிஞர் வைரமுத்து குறுந்தொகைப் பாடலின் பொழிப்புரைபோல் பின்வருமாறு பாடல் எழுதியுள்ளார் (படம்: இருவர்).

யாயும் யாயும் யாராகியரோ
நெஞ்சு நேர்ந்ததென்ன?
யானும் நீயும் எவ்வழியறிதும்
உறவு சேர்ந்ததென்ன?
ஒரேயொரு தீண்டல் செய்தாய்
உயிர்க் கொடி பூத்ததென்ன?
செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன?

இவைபோல் கவிஞர் முத்துலிங்கம்

செந்நில மேட்டில்
தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம்
நீயென் வாழ்க்கையின் தஞ்சம்

என்கிறார் (படம்: வெள்ளை ரோசா)

குறுந்தொகைப் பாடல் முழுமையாக அவ்வாறே ‘சகா’ என்னும் திரைப்படத்தில் சபீர் இசையில் வெளிவந்துள்ளது.

‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் ‘முன்பே வா’ எனத் தொடங்கும் பாடலில் குறுந்தொகை உவமையை,

நீரும் செம்புலச் சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம்
முன்பே வா

எனக் கையாண்டுள்ளார் கவிஞர் வாலி.

கவிஞர் கபிலன்,

ஞாயும் நீயும் யாரோ?
எந்தை நுந்தை யாரோ?
செம்புல நீராய்
ஒன்றாய் கலந்தோமே

என எழுதிய பாடல் ‘சித்திரம் பேசுதடி’ என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

செம்புல நீர் போல்
ஐம்புலன் சேர்க

என்கிறார் பாடலாசிரியர் பா.விசய் (படம் ‘பில்லா’)

அன்பு நெஞ்சங்கள் கலப்பது காதலுக்கு மட்டும்தானா? அண்ணன் தங்கை என்னும் உடன்பிறப்புப் பாசத்திற்கும்தான் என்கிறார் கண்ணதாசன்.

‘தர்மயுத்தம்’ திரைப்படத்தில் ‘ஒரு தங்க ரதத்தில்’  எனத் துவங்கும் பாடலில், இவ்வரிகள் இடம் பெற்றுள்ளன.

செம்மண்ணிலே
தண்ணீரைப் போல்
உண்டான சொந்தமிது

கண்ணதாசன் – அண்ணன் தம்பி இருவர் பாசத்திற்கு, ஆனால் ஒருதாய்மக்கள் என அறியாச் சூழலில் நட்பிற்கு எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு எழுதியுள்ளார்.

யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ

எனப் ‘பட்டாக் கத்தி பைரவன்’ படத்தில் வரும் பாடல் வரிகளே அவை.

அறியா இருவர் காதலால் இணைவதைக் குறிப்பிடும் குறுந்தொகைப் பாடலை எதிரொலிக்கும் மேலும் பல பாடல்களும் உள்ளன.

காலங்காலமாகக் கூறுவதுபோல் சங்கப்புலவர் பொன்னுரைக்கிணங்க யார் யாருக்கோ உரிய
அன்பு நெஞ்சங்கள் இரண்டறக் கலப்பதே இயற்கை!

– இலக்குவனார் திருவள்ளுவன்

You might also like