ஒரு திரைப்பட இயக்குநர் என்பது மிகப்பெரிய அடையாளம். அதனை வேண்டி, விரும்பி, ஒவ்வொரு நாளும் பலப்பல கனவுகளோடு பெருநகரங்கள் நோக்கிப் படையெடுப்பவர்கள் எத்தனை பேர்.
கடந்த காலங்களில் அப்படி எத்தனையோ பேர் சென்னைக்குப் பேருந்து ஏறி, ரயில் ஏறி வந்து நின்றிருக்கின்றனர்.
ஏதேதோ வேலைகள் செய்து, இருக்க ஒரு இடம் தேடி, மெதுவாகக் கனவுகளுக்குச் சிறகுகளை வளர்த்து, திரைத்துறையில் மெல்ல ஒரு வாய்ப்பைப் பெற்று,
மேலும் வளர்ந்து இயக்குநர் நாற்காலியில் அமர்வதென்பது குதிரைக்கு முளைக்கிற கொம்புக்காக் காத்திருப்பது போன்றது.
மிகச்சிலர் அந்தக் கொம்பைத் தன் கையால் பற்றி, அந்தக் குதிரையின் மீதேறி வெற்றிப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.
வெகுசிலர் அறிமுக நிலையிலும், சிலர் பாதிப் பயணத்திலும், சிலர் குதிரையைக் கண்ட திருப்தியிலும் தமது கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர்.
அவர்களில் இயக்குநர் ராசு மதுரவனை நாம் எந்த பிரிவிலும் அடக்க முடியாது. காரணம், விழுந்து விழுந்து எழுந்து வெற்றிகளைப் பெற்ற அவர் தமது பயணத்தின் பாதியிலேயே காற்றில் கரைந்து தனது திரைப்பயணத்தை முடித்துக் கொண்டவர்.
முதல் பட வாய்ப்பு..!
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராசு.மதுரவன். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் கருப்பையா.
உசிலம்பட்டியில் பள்ளிப்படிப்பை முடித்து, மதுரை வேளாண் கல்லூரியில் சேர்ந்தவர், திடீரென்று சினிமா கனவுகளைச் சுமந்துகொண்டு சென்னையில் வந்திறங்கினார்.
1987ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநர் ஆகச் சேர்ந்தார். அப்படித்தான் அவரது திரைப்பயணம் தொடங்கியது.
சேர்ந்த புதிதில், ‘கிரிக்கெட் விளையாட வாப்பா’ என்ற மணிவண்ணனிடம் ‘எனக்கு அந்த விளையாட்டு தெரியாதுங்க’ என்றிருக்கிறார்.
‘ஏம்பா படம் எடுக்கறது மட்டும் உன்னோட குலத்தொழிலா, வந்து பந்தை பொறக்கிப் போட்டா அது தானா தெரிஞ்சிரும்பா’ என்றிருக்கிறார் மணிவண்ணன்.
அப்படித்தான் அப்போதிருந்த சுந்தர்.சி, சீமான் உள்ளிட்ட உதவி இயக்குநர் குழாமில் ராசு மதுரவன் ஐக்கியம் ஆகியிருக்கிறார்.
ஏழெட்டு ஆண்டு கால உதவி இயக்குநர் பணி அனுபவத்திற்குப் பிறகு, ஜெயராமை நாயகனாகக் கொண்டு ’மணமகள் தேவை’ என்ற படத்தை உருவாக்க முனைந்திருக்கிறார்.
அது கைகூடாமல் போக, பிறகு அஜித்தைக் கொண்டு ‘நம்ம வீட்டு கல்யாணம்’ என்று அதே கதையை ஆக்க நினைத்திருக்கிறார். அதுவும் ஒரு வடிவத்தைப் பெறுவதற்குள் நின்றுபோனது.
சில காலம் கழித்து, அதே கதைக்கு ஒப்புதல் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி. அப்படித்தான் ‘பூமகள் ஊர்வலம்’ திரைப்படம் தொடங்கியிருக்கிறது.
வித்தியாசமான காதல் கதை!
அந்தக் காலகட்டத்தில் வித்தியாசமான காதல் கதைகள் திரைப்படம் ஆக உதவுபவர் என்ற பெயர் ஆர்.பி.சவுத்ரிக்கு உண்டு.
சொல்லாமலே, நீ வருவாய் என, உன்னைக்கொடு என்னை தருவேன், ஷாஜகான், பூவே உனக்காக, விண்ணுக்கும் மண்ணுக்கும் என்று பல உதாரணங்கள் அதற்குண்டு. அதுவே, இக்கதையை அவர் ஏற்கவும் காரணமானது.
கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெற்றோரை அழைத்துக்கொண்டு பெண் பார்க்க வருகிறார் நாயகன்.
தவறுதலாக ஒரு பெண் வீட்டுக்கு அவர் சென்றுவிட, அதேநேரத்தில் இன்னொரு மாப்பிள்ளை வீட்டாரும் அங்கு வந்துவிட, இருவரையும் ஒரே குடும்பத்தினர் என்று பெண் வீட்டார் நினைத்துவிடுகின்றனர்.
அதன்பிறகு ஒரே பெண்ணை இரண்டு மாப்பிள்ளைகள் சுற்றிச் சுற்றி வருவதை நகைச்சுவையாகக் காட்டும் மீதிப்படம்.
இந்தப் படத்தில் பிரசாந்த், ரம்பா, லிவிங்க்ஸ்டன், மணிவண்ணன், ராதா ரவி, ராஜன் பி தேவ், ராதிகா, நிழல்கள் ரவி, விவேக், வையாபுரி, பொன்வண்ணன், சத்யப்ரியா, அஞ்சு என்று பலர் நடித்திருந்தனர்.
இதன் ஒளிப்பதிவை பிரசாத்தும், படத்தொகுப்பை ஜெய்சங்கரும் கையாண்டிருந்தனர்.
இசையமைப்பாளர் சிவாவின் ‘மலரே ஒரு வார்த்தை’, ‘சின்ன வெண்ணிலவே’, ‘கண்ணை பறிக்கிற’, ‘வாடா நண்பனே’ ஆகிய பாடல்கள் மெல்லிசையாக ரசிகர்களைத் தீண்டின.
இப்பாடல்கள் அனைத்தும் மியூசிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி, இப்படத்திற்கென்று தனிப்பட்ட ரசிகர்களை உண்டாக்கின.
இதில் விவேக் கூட்டணியின் நகைச்சுவையும் ‘ப்ரெஷ்’ஷாக ரசிகர்களை உணர வைத்தது.
மீண்டும் ‘புகழ்’!
‘பூமகள் ஊர்வலம்’ ரசிகர்களிடத்தில் ‘ஓகே’ என்று பெயரைப் பெற்றது. அந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக சூப்பர்ஹிட் படங்களைத் தந்த சூப்பர்குட் பிலிம்ஸில் சுமாரான படமாக அமைந்தது இது.
இரண்டாவது பட வாய்ப்பு அமையாமல் வடிவேலுவின் நகைச்சுவை ட்ராக் எழுதுகிற பணிகளைச் செய்தார் ராசு மதுரவன். சில படங்களின் திரைக்கதை விவாதத்தில் பங்கேற்றிருக்கிறார்.
இடைப்பட்ட காலத்தில் மனதில் சேர்ந்த கதைகளை எல்லாம் முழு ‘ஸ்கிரிப்ட்’களாக தயார் செய்தார். அப்படித்தான் அவரது ‘பாண்டி’ திரைக்கதை திடீரென்று உயிர் பெற்றது.
அதையடுத்து மாயாண்டி குடும்பத்தார் வெளிவந்து ராசு. மதுரவனின் பலம் என்ன என்று திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் ஒருசேரத் தெரிய வைத்தது. பிறகு கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக படங்களைத் தந்தார்.
தொடர்ந்து ஆறேழு படங்கள் இயக்க வேண்டும் என்றிருந்தவர் திடீரென்று உடல்நலக்குறைவால் இறந்து போனார். அப்போது, அவரால் இயக்கப்பட இருந்த நடிகர் நடிகையரும், தொழில்நுட்பக் கலைஞர்களும் திகைத்துப் போனார்கள்.
தொடர்ந்து பல படங்களைத் தந்து தனக்கென்று திரையுலகில் ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்க வேண்டியவர் சட்டென்று தனது திரைப்பயணத்தை நிறுத்திக் கொண்டார். அது ரசிகர்களுக்குப் பேரிழப்பு.
இப்போதும் ‘பூமகள் ஊர்வலம்’ உள்ளிட்ட ராசு மதுரவன் இயக்கிய படங்களைப் பார்க்கையில் காமெடி, செண்டிமெண்ட் காட்சிகளில் அவர் வலுவான காட்சிகளை உருவாக்குபவராக இருந்ததை அறிய முடியும்.
அவற்றை ரசிக்கச் சில ரசிகர்கள் உண்டு என்பதே ’பூமகள் ஊர்வலம்’ படத்தின் வெற்றி.
இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகுகின்றன.
மாபா