‘பகல் கனவு’: பள்ளிகளுக்கான இலக்கியம்!

ஜி ஜூபாய் பதேக்கா: குஜராத் மாநிலத்தின் சிறந்த ஆசிரியரும் கல்வியாளரும் ஆவார் (1885-1939). அவர் எழுதிய திவசப்னா என்ற நூல் 1931 இல் தான் பகல் கனவாக நம் கைகளுக்குக் கிடைத்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தின் கல்வியாளர் திரு காசிநாத் திரிவேதியும் இதே காலகட்டத்தில் இந்தியில் வெளியிட முயற்சித்தாராம்.

காந்திஜி, தாகூர், ஜிஜூ பாய் போன்ற மனிதர்களது வழியில் நெடும் போராட்டத்தை நடத்தினால்தான் கல்வியில் மாற்றம் செய்யவேண்டும் என்ற கனவை நனவாக்க முடியும் என்ற ஆழமான கருத்தை விதைத்து ஆரம்பிக்கிறது நூல்.

ஏனெனில் இவர்கள் மூவரது கல்விமுறையும் குழந்தைகளுக்கு சுதந்திரமும் தற்சார்பும் கொண்ட சூழலை வலியுறுத்துகிறது.

இதில் 1920 – இல் பால மந்திர் அமைத்ததன் மூலம் இந்தக் கருத்துகளுக்கு ஜிஜூ பாய் வடிவம் கொடுத்துள்ளார் என அறியமுடிகிறது.

ஒரு நாட்டின் விடுதலைக்குக் கல்வி அவசியம். இன்று கல்விதான் அன்றாட பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அப்படிப்பட்ட கல்வி இன்று புத்துயிர் பெற்றுள்ளதா அல்லது பழமை வாதத்தில் ஊறிப் போய் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா என்று நம்மை உணர வைக்கும் ஒரு புத்தகம் தான் இது.

கல்வியில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு ஆசிரியர் நினைத்தால் எத்தகைய மாற்றங்களையும் உருவாக்கலாம் என்பதை இடித்துரைக்கும் ஒரு கருவிதான் ‘பகல் கனவு’.

ஆங்கிலேயர் ஆட்சியையும் மெக்காலே கல்வியையும் இன்றும் குறை கூறும் சமூகம், நமது குழலுக்கு ஏற்ப ஏன் அதை மாற்றியமைக்கமுடியாது. அவை வெறும் சோம்பேறித் தனம் என்பதையும் அடையாளம் காட்டுகிறது.

பாரம்பரியக் கற்பித்தல் முறைகளையும் பிற்போக்குச் சிந்தனைகளையும் விமர்சித்து உண்மையான கல்வி எது, அதை எப்படி மாணவர்களின் தேடலுக்குத் தக்கவாறு எடுத்துச்செல்ல வேண்டும் என்று கூற்றுகளாக இல்லாமல் செயல்பாடுகளால் சொல்லித்தரும் ஒரு புத்தகம்தான் ‘பகல் கனவு’.

லட்சுமி ராம் என்பவர் தனது கற்பித்தல் முறைகளை பரிசோதித்துப் பார்க்க மாணவர்களைக் கேட்டு கல்வி அதிகாரியிடம் வேண்டுகோள் வைக்க, ஒரு பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவர்களை பரிசோதனைக்காகத் தருகிறார்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள், பெற்றோர்கள் என எவருமே லட்சுமிராமின் போதனாமுறைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

புறம் பேசி, குறை கூறி எள்ளி நகையாடி எதிர்மறையாகவே தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்துகின்றனர்.

லட்சுமிராமோ, தனது விடாப்பிடி முயற்சியாலும் ஆர்வத்தாலும் உழைப்பாலும் மாணவர்களிடையே நடத்தை மாற்றங்களை மெதுமெதுவாக உருவாக்கி இறுதியில் வெற்றி காண்பதே இந்த கதை.

ஒரு ஆசிரியராக மாணவரை அணுகக் கையாளும் உத்திகள், சந்திக்கும் களப் பிரச்சனைகள் என மிகப்பெரிய மாற்றத்திற்கான களம் விரிகிறது.

மெளன விளையாட்டு, கதை சொல்லுதல், மாதிரி வாசிப்பு, உரத்த வாசிப்பு, நாடகம் நடித்தல், ஓவியம் வரைதல், நூலகம் அமைத்தல் என தனது பரிசோதனை வகுப்பை மாதிரிப் பள்ளியாக மாற்றுகிறார் லட்சுமி ராம்.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு சிந்தித்து கதையாக எழுதிய ஜிஜூபாய் பதேக்கா மிகச் சிறந்த கல்வியாளராகத் தான் திகழ்கிறார்.

பள்ளிகளுக்கான இலக்கியமாக இந்த நூலைப் பார்க்கமுடிகிறது. அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றவர்களும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நூல்.

****

நூல்: பகல் கனவு!
ஆசிரியர் : ஜிஜூ பாய் பதேக்கா
குஜராத்தி மூலம்: Divaswapna 1932

தமிழில் : டாக்டர் சங்கர ராஜூலு
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

நன்றி: கல்வியாளர் உமா

You might also like