ஜெ.கே. எனும் ஞானச் செருக்குருவம்!

கவிதை:

ஞானச் செருக்குருவம்.
மோனத்திருந்த ஞானி!
கட்டுடைத்துப் பாய்ந்த
கருத்துப் பேரருவி! யாம்
யார்க்கும் குடியல்லோம்
எனும் அஞ்சாத கம்பீரம்!

மரபுச் சிறையுடைத்த
மாளாத தாளாண்மை!
கற்புக் கதவுடைத்த
காட்டாற்றுக் கதை வெள்ளம்.
உறவாக உலகணைத்த
ஓங்கி வளர் ஆலமரம்!

மேடைதனில் நின்றால்,
மேனியெலாம் புல்லரிக்கும்!
பேச ஆரம்பித்தால்,
பின் எவர் வாய் திறப்பார்?
மோதும் இடிபோல,
முழக்கம் செவி பிளக்கும்!

சம்பிரதாயம் எல்லாம்
சற்றே அடங்கி நிற்கும்!
நெற்றிப் பொட்டினிலே,
நீள் ஆணி அறைந்தது போல்
சுற்றி வளைக்காமல்,
சொறிந்து கொடுக்காமல்,
பற்றி இழுக்கும் சொற்சாட்டை
சொடுக்குகின்ற கயிற்றசைவில்,
பம்பரமாய் ‘அவை’ சுற்றும்!

சபை நடுவே, புகைநடுவே
சரித்திரத்தின் பொருள் புரியும்.
தத்துவத்தின் தரம் விரியும்.
பாரதியின் மணம் கமழும்.

அக்னிக் குஞ்சங்கே
அட்டகாசமாய் ஒலிக்கும்.
மவுன மொழி நடனமிடும்.
மந்திரமாய்ச் சொல் ஒலிக்கும்.
வெறித்த பார்வை
விண் திறக்கும்.

கங்கா நீரில் அக்னிப்பிரவேசம் செய்வாள்.
சாரங்கன் வயலினில்
சங்கீத மழை பொழிவான்.
சித்தாளின் இடுப்பசைவில்
சினிமாவின் முகம் கிழியும்.
யாருக்காகவோ ஜோசப்
குமுறி அழுதிருப்பான்‌.

எழுதுகோல் தலை வணங்கும்.
எழுதாத பொருள் விரியும்.
அரசியலும், இலக்கியமும்
அருகமர்ந்து வாய்ப் பிளக்கும்.
ஊருக்கு நூறு பேர் போதும்
உலகைப் புரட்டிடவென
உப்பான மனிதர்கள்
உயிர்பெற்று எழுவார்கள்!

ஆயிரம் ஆண்டுக்கொருமுறை
வள்ளுவன் பின்
கம்பன் எனத்
தமிழ் அதிசயம் நிகழ்த்தும்.
வரம் கொடுக்கும்.
வாராது வந்து உதிக்கும்.
அதுபோல் மண் வந்த
ஞானச் செருக்குருவம்.
மோனத்திருந்த ஞானி!

– உஸ்மான் அலி

You might also like