இந்தியாவிலிருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தமிழர்கள் மூன்று பேர் உட்பட பலர் காயமடைந்த நிலையில், தற்போது அங்குள்ள மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, பிரதமர் மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சார்க் விசா திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதி இல்லை எனவும் கடந்த காலங்களில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட சார்க் விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன எனவும்

சார்க் விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதோடு, அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாகக் கூறிய அவர், பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது எனவும்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும்

பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து சார்க் விசாவின் கீழ் இந்தியா வந்திருந்த பாகிஸ்தானியர்கள், அட்டாரி – வாகா எல்லை வழியாக, அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

You might also like