என்னை வியக்கச் செய்த சிறுவன். நண்பரின் மகன் திருமண விழாவில் இவரை சந்தித்தேன். என்னைப் பார்த்துக்கொண்டே நின்றவனை அழைத்து முதலில் நானாகத்தான் அவனிடம் பேசினேன்.
நான் வருவேன் என்று இவனின் உறவினர்கள் என் போட்டோவையும் ஓவியங்களையும் முன்னாடியே காட்டி இருக்கிறார்கள். எனக்காக காத்திருப்பதாகவும் சொன்னார்கள். என்னை பார்த்தவுடன் பேசுவதற்கு தயங்கி நின்றான்.
பின்னர் அவனது உறவினர்கள் சொன்னதும், அவனை அழைத்து உனக்கு டிராயிங் எல்லாம் போடுவியா, ஓவியங்கள் பிடிக்குமா என்று கேட்ட மறுகணமே இல்லை என தலையாட்டினான்.
ஒருவேளை நான் பேசிய ஹிந்தி அவனுக்கு புரியவில்லையோ என்று மீண்டும் தெளிவாக கேட்டேன். மீண்டும் அவன் இல்லவே இல்லை என மறுத்துவிட்டான்.
அப்புறம் எதுக்கு நீ என்னை பாக்குறதுக்கு காத்திருந்தேன்னு உன் உறவினர்கள் சொல்றாங்க என்று கேட்டேன்?
அதற்கு அவன் சொன்ன பதில், “நானும் கலைஞன் நீங்களும் கலைஞன் அதனால் தான் பார்க்க காத்திருந்தேன்” என்றான்!
நீ கலைஞனா அப்படி நீ என்ன பண்ற… கேட்டு முடித்தவுடன் சிரித்துவிட்டு ஓடிவிட்டான்.
பின்னர், விசாரித்தால் இவன் தபேலா வாசிப்பில் பல அவார்டுகள் வாங்கி இருக்கிறான் என்று உறவினர்கள் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் தபேலாவை வாசித்தும் காட்டினான்.
இப்போது நீங்கள் எனக்கு ஒரு கிப்ட் தாருங்கள் என்று கேட்டான். என்ன கிப்ட் வேண்டும் என்று கேட்டேன். அவனை ஓவியமாக வரையச் சொன்னான்.
இந்தப் பட்டாசு இந்த போடு போடுதே நாம் விட்டுத்தான் பிடிக்கவேண்டும். நாமளும் உடனே வரைந்துகொடுக்கக்கூடாது என்ற முடிவு எடுத்தேன்.
அடுத்த முறை வரைந்து தருகிறேன் என்று சொன்னதும் முகம் வாடிவிட்டது. சிறிதுநேரம் கழித்து எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது மெதுவாக வந்து என் மடியில் உட்கார்ந்துகொணடான்.
காதோரம் மெதுவாக எப்பதான் வரைந்து தரப்போறீங்க என்றான். அவனை வரையத்தான் என் மனசு ஏங்கியது. இருந்தாலும்….
வா என்னுடன் ஒரு போட்டோ எடுத்துக்கோ உனக்கு வரைந்து வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன் என்று சொன்னேன்.
உடனே வந்து கட்டி அணைத்துக்கொண்டார். அப்போது எடுத்த போட்டோதான் இது. இந்த புகைப்படத்தை கூட நான் அவனிடம் காட்டவில்லை.
அந்தச் சிறுவனின் முகம் எனக்கு இப்போது ஓவியமாகத்தான் இருக்கிறது. அவன் ரசிகன் தான். அவன் ஓவியம் பிடிக்காது என்று சொல்லவில்லை. தெரியாது என்று தான் சொன்னான்.
தன்னை ஒரு ஓவியம் வரைந்த தரவேண்டும் என்றால் அவன் ஓவியத்தை ரசிக்கிறான் என்றுதானே அர்த்தம்.
ஆனால் அந்தச் சிறுவன் திறமைக்காரன். தெளிவான மனநிலையில் உள்ளவன். மிகப்பெரிய ஆளாய் கண்டிப்பாக வருவான்.
கலைகள் வேறு வேறு வடிவங்களாக இருந்தாலும், அனைவரும் கலைஞர்கள்தான் என்பதை இந்த சின்ன வயசில் புரிந்துகொண்டானே. அப்போதே தெரிகிறது அவன் வாழ்க்கை பிரகாசம் என்று. அங்கு நான் அவனுக்கு ரசிகனாக மாறிவிட்டேன்.
நன்றி: பேஸ்புக் பதிவு