நூல் அறிமுகம் : உயிருக்கு நேர்.
* “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!” என்றார் பாவேந்தர். அந்தப் பாடலில் இருந்து நேராக இந்த நூலின் தலைப்பு வந்தது ‘உயிருக்கு நேர்!’.
* தமிழகத்தில் ஏறக்குறைய நூறாண்டுகளாக நடந்து வரும் மொழி காக்கும் போராட்டம், போராளிகள், போராட்ட காரணங்கள், அதன் விளைவுகள் பற்றிய வரலாற்றுச் செய்திகளின் தொகுப்பாக, தகவல் களஞ்சியமாக,
பாதுகாக்க வேண்டிய ஆவணமாக, எல்லாம் அடங்கிய ஒரே நூலாக தோழர் எழுத்தாளர் மணாவின் உழைப்பாலும், உறுதியாலும் அர்ப்பணிப்பு குணத்தாலும் வெளி வந்துள்ள சிறந்த நூல் இது ஒன்றே !
* மொழியை நேசித்த வரலாற்றை, மொழிக்காக உயிர் நீத்தவர்களின் விவரங்களை, மொழிப் போராட்டத்தில் சிறை சென்றவர்களை, போராட்டத்தில் பங்காற்றிய மாணவ தலைவர்களின் தகவல்களை சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் மணா !
* இந்தி மொழி ஆதிக்கத்தின் வரலாற்றைப் பற்றி எழுதும் ஆசிரியர் மணா, இந்திக்கு ஆதரவு தெரிவித்த முதல் தேசியத் தலைவர் பாலகங்காதர திலகர். இவர் 1905ல் பனாரசில் நடந்த தேவநாகரி பிரச்சார சபை மாநாட்டில், “உங்களுக்கு தேசம் தேவையாயின் அதை நிர்பந்திப்பதற்கு ஒரு பொது மொழி அனைவருக்கும் தேவை. அதனால் தேவநாகரி எழுத்தை (இந்தி) நாம் பொது மொழியாகப் பயன்படுத்த வேண்டும்” என்பதை குறிப்பிட்டுள்ளார். அந்த வழியில் தான் பின்னர் இந்துத்துவா சக்திகளும் பின் தொடர்கின்றனர்.
* இந்தி எதிர்ப்பு மொழிப் போராட்டத்தை ஆறு காலக் கட்டங்களாக பிரித்து அதன் அடிப்படையில் அந்த போராட்டத்தின் தன்மையையும் வரலாற்றையும் நமக்கு புரிய வைத்துள்ளார் ஆசிரியர் மணா.
இந்த நூலில் பல தகவல்கள் கொட்டிக் கிடப்பதால் நூல் அறிமுகவுரையில் கணிசமான அளவு தகவல்களை தர முயன்று, இதிலும் அந்த காலக்கட்டம் அடிப்படையில் அவற்றை வழங்குகிறேன் !
* முதல் காலக்கட்டம் – (1930 – 40) :
1937ம் ஆண்டு ராஜாஜி சென்னை மாகாண தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். அவர் தட்சிண பாரத இந்தி பிரச்சார சபை நிகழ்ச்சியில் பேசும் போது, “இந்தி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும்” என்றார்.
அதன்படி சென்னை மாகாண அரசு 21.04.1938 அன்று, சென்னை மாகாண 125 பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் இந்தி கட்டாயப் படுத்துவதாக அரசு ஆணை வெளியிட்டது !
* தமிழகம் எங்கும் இந்திக்கு எதிராக குரல் எழுந்தது. பெரியார், அண்ணா, மறைமலையடிகள், திருவிக, கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழறிஞர்கள் இந்தியை எதிர்த்துக் குரல் கொடுத்தனர்.
போராட்டங்கள் கிளம்பியது. மாநாடுகள் நடந்தன. ஊர்வலங்கள் சென்றன. பலர் சிறைச்சாலைக்கு சென்றனர்.
* இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி சிறைக்குச் சென்ற போராளிகள் பலரில் – சிறைத் தண்டனையிலிருந்த போது, தன்னுடைய உடல் நிலை, குடும்ப நிலையைக் கருதாமல், மன்னிப்பு கேட்க மறுத்து, இறந்தாலும் இறப்பனே தவிர மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று கூறி, 15.01.1939 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் மறைந்த போராளிதான் எல். நடராஜன். இவர் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் பலி !
* இந்திப் போராட்டத்தில் இரண்டாவது பலி – 06.03.1939 அன்று சிறையிலிருந்த போராளி தாளமுத்து மரணமடைந்தார். சென்னை மூலகொத்தளம் சுடுகாட்டில் போராளி நடராஜனின் சமாதி அருகிலேயே தாளமுத்துவையும் அடக்கம் செய்தார்கள். (இந்த இரண்டு போராளிகளின் நினைவாகத்தான் சென்னையில் ‘தாளமுத்து-நடராசன் மாளிகை’ என்ற அரசுக் கட்டிடம் உள்ளது)
* நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் ராஜாஜியின் காங்கிரஸ் அரசு 30.10.1939 அன்று பதவி விலகியது. சென்னை மாகாண அரசு கட்டாய இந்தி திட்டத்தை 21.02.1940 அன்று திரும்பப் பெற்றது !
* இரண்டாவது காலக் கட்டம் – (1940 – 50) :
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, ஓமந்தூரார். பி. ராமசாமி ரெட்டி முதல் அமைச்சராக இருந்த போது மீண்டும் இந்தியை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்தை 20.06.1948 அன்று சென்னை மாகாண அரசு கொண்டு வந்தது !
* இதற்கு எதிராக பெரியார் சென்னையில் 01.07.1948 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில், “இந்தியை எதிர்த்தே தீர வேண்டும். அதை ஒழித்தே தீர வேண்டும்.
எனக்கு வயது 70 ஆகிவிட்டது. அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியது சுடுகாட்டில் தான். அதற்குள் ஒரு கை பார்த்து விடத்தான் போகிறேன்!” என்று ஆவேசமாக முழங்கினார்.
அதைத் தொடர்ந்து போராட்டங்களும் கைதுகளும் தொடர்ந்து நடைபெற்றன.
* இறுதியாக வேறு வழியில்லாமல் சென்னை மாகாண அரசு 1950ம் ஆண்டு இந்தி கட்டாயப் பாடத் திட்டத்தை கைவிட்டது !
* மூன்றாவது காலக்கட்டம் – (1950 – 60) :
இந்த காலக் கட்டத்தில் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக தீவிரமான போராட்டங்களில் திமுக இறங்க ஆரம்பித்தது.
டால்மியாபுரத்திற்கு ‘கல்லக்குடி’ என்று பெயர் மாற்றக்கோரி 1953ம் ஆண்டு திமுகவின் கலைஞர் கருணாநிதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது !
* ரயில் நிலையத்திலுள்ள பெயர் பலகைகளில் இந்திப் பெயர்களை அழிக்கும் போராட்டம் 1952ம் ஆண்டு துவங்கியது.
பெரியார் திருச்சி ரயில் நிலையத்திலும், அண்ணா ஈரோட்டிலும், நெடுஞ்செழியன் மதுரையிலும், கலைஞர் திருச்சி அஞ்சலகத்திலும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டார்கள்.
* இந்த போராட்டங்களின் இறுதியில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, 07.08.1959ம் நாள் நாடாளுமன்றத்தில், “எவ்வளவு காலத்திற்கு மக்கள் விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் இருக்க வேண்டும். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசாத மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!” என்ற உறுதி மொழியைத் தந்தார் !
* நான்காவது காலக் கட்டம் – (1960 – 66) :
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உச்ச கட்டம் நடந்த ஆண்டுகள் இது !
இந்திய உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி 1963ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதா – ‘1965 ஜனவரி 26 முதல் இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும்’ என்ற பெரிய அணுகுண்டைப் போட்டார்.
அதனால் 1963ம் ஆண்டே தமிழகத்தில் சட்ட எரிப்பு போராட்டங்கள் ஆரம்பித்தன.
* தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி விட்டனர். பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். முதல் நாள் போராட்டம் தீவிரமடைந்ததைக் கண்டு, திமுக மாணவர் தலைவர்களை அழைத்த அண்ணா, போராட்டத்தை நிறுத்தி விடும்படியும், இனியும் தொடர்ந்தால் மோசமாகி விடும் என்றாராம். ஆனாலும் போராட்டத்தை மற்ற அமைப்புகளின் மாணவத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.
* போராட்டம் வலுவானது. இராணுவம் வந்தது. வன்முறை வெடித்தது. பல இடங்களில் ஊரடங்கு. 1000க்கும் அதிகமாக மாணவர்கள் கைது.
தினமும் பல ஊர்களில் பெரிய கண்டன ஊர்வலங்கள்.
இந்திக்கு எதிராக கொடும்பாவிகள் எரிப்பு! துப்பாக்கி சூடு! தீக்குளிப்புகள்!
* சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இராசேந்திரன் என்ற மாணவர் பலி ! தீக்குளித்து தியாகம் செய்த போராளிகளின் பட்டியல் இதோ :
திருச்சி சின்னச்சாமி.
சென்னை சிவலிங்கம்.
சென்னை அரங்கநாதன்.
திருச்சி வீரப்பன்.
கோவை முத்து.
மாயூரம் சாரங்கபாணி.
திருச்சி முத்துவும்
விராலிமலை சண்முகமும் நஞ்சுண்டு மாண்டனர்.
இந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு உட்பட 158 பேர்கள் மாண்டதாக ஆசிரியர் மணா தெளிவாக குறிப்பிட்டுள்ளார் !
* ஐந்தாவது காலக் கட்டம் – (1967 – 70) :
1967ல் அண்ணா தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் ஏற்கனவே வாக்குறுதி தமிழர்களுக்கு தந்தது போல, 23.01.1968 அன்று சட்டமன்றத்தில் தமிழகத்தில் இருமொழி திட்டத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது அண்ணாவின் பெரிய சாதனையாக இன்றும் பேசப்படுகிறது.
* இதுமட்டுமின்றி, ஆறாவது காலகட்டமாக – 1985ல் நவோதயா பள்ளிகளை திறக்க முயற்சித்து அதன் மூலம் இந்தியை மீண்டும் கொண்டு வர முயன்றதையும் அதை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததையும் விவரித்துள்ளார்.
(இதன் தொடர்ச்சியாக இன்றைய காலக் கட்டத்தில் ஒன்றிய அரசு புதிதாக தேசிய கல்வி கொள்கை (NCP) மூலம் மீண்டும் மும்மொழிக் கொள்கையை திணிப்பதின் பின்னணியும் இந்தி திணிப்பு தான் என்பதையும் நினைவில் கொள்ளவும்)
* நூலின் சரிபாதியாக – மொழிப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தமிழறிஞர்களின் நேர்காணல்கள் | மொழிப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் – நினைவுகள் | நூல்கள் மற்றும் பத்திரிகைகளில் இருந்து சில பக்கங்கள் என நிறைய ஆவணங்களை சிறப்பாக தந்துள்ளார்!
* ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு போராட்டத்தின் – அதன் ஆரம்பம் முதல் இன்று வரை தகவல்களை சேகரித்து அவைகளை காலக் கட்டங்களாகப் பிரித்து விவரித்த பாங்கு மிகவும் சிறப்பானது.
ஒரு ஆய்வாளருக்குத் தேவையான அத்தனை ஆவணங்களும் தரப்பட்டுள்ளது.
இந்த நூலை இவ்வளவு தகவல்களோடு நமக்கு தந்த தோழர், எழுத்தாளர் மணா தமிழ் சமூகத்தால் என்றும் நினைவில் வைக்கத் தக்கவர்.
அவரது கரங்களைப் பற்றி வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்!
வாழ்த்துகள் மணா !
நூலை கட்டாயம் வாங்கிப் படித்து உண்மைகளைத் தெரிந்து கொள்வோம் !
பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்,
********
நூல்: உயிருக்கு நேர் – தமிழ் மொழிப் போர் பின்புலத்துடன்!
தொகுப்பும் ஆக்கமும்: மணா
முதல் பதிப்பு: 2013
பக்கங்கள்: 532
விலை: ரூ.900/-