காஷ்மீர் ரோஜாவில் பயங்கரவாத முள்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அதிரடியாக ஊடுருவி தாக்குதல் நடத்துவது புதிதல்ல என்றாலும், தற்போது நடந்திருக்கிற பயங்கரவாதத் தாக்குதல் அதிர்ச்சிகரமானது.

இதற்கு முன்பு நடந்த பல தாக்குதல்கள் இந்திய ராணுவத்தையோ, காஷ்மீர் அரசுக்கு சொந்தமானவற்றையோ மையப்படுத்தி நடத்த தாக்குதல்களாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன.

அப்படி நடந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகள் உடனே பொறுப்பேற்றிருக்கின்றன.

அதாவது, அதிரடியான நிகழ்வுகளை நிகழ்த்தி தங்களது இயக்கத்தின் இருப்பை வெளி உலகிற்கு வெளிப்படுத்தி தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதுதான் பெரும்பாலும் தாக்குதல்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.

தற்போது, காஷ்மீரின் மிகவும் பசுமையான பகுதியான மினி சுவிட்சர்லாந்த் என்று அழைக்கப்படும் அளவிற்கு முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான பஹல்காம் என்ற இடத்தில் அதுவும், கோடை விடுமுறை ஆரம்பித்து சுற்றுலா பயணிகள் பலரும் அதிக எண்ணிக்கையில் வரக்கூடிய நேரத்தில், இந்தத் தாக்குதல், திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

இயற்கை எழிலை அங்கு சென்றிருந்த சுற்றுலாப் பயணிகள் ரசித்துக் கொண்டிருந்த போது துப்பாக்கியுடன் அவர்களைச் சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களில் இதுவரை 28 பேர் வரை இறந்திருக்கிறார்கள். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

உயிரிழந்தவர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்களும் அடக்கம். சிலரது பெயரைக் கேட்டுவிட்டு அதற்குப் பிறகு அவர்கள் சுடப்பட்டதாகவும், நேரடியாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். 

காஷ்மீர் அரசு இச்சம்பவம் நிகழ்ந்த பிறகு உரிய நடவடிக்கைகளுக்கு ஆயத்தமான நிலையில், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவும் இங்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருக்கிறார்.

அதற்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயங்கரவாத அமைப்பு இச்செயலை செய்திருப்பதாகவும் ஒரு செய்தி கசிந்திருக்கிறது.

பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பி இருக்கிற மாநிலமான காஷ்மீரில் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீது இத்தகைய தாக்குதலை நிகழ்த்தினால், அது காஷ்மீருக்குச் செல்ல விரும்பும் மற்ற மாநில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் எத்தகைய அதிர்வை ஏற்படுத்தும் அவர்களின் வருகையே கேள்விக் குறியாக்கும் என்பதெல்லாம் இத்தகைய தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாத அமைப்புகளுக்குத் தெரியாதா?

ஆக, இத்தகைய உயிரிழப்புகளின் மூலம் அந்த பயங்கரவாதிகள் காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல, காஷ்மீருக்கு வர விரும்பும் எத்தகைய சுற்றுலாப் பயணியிடமும் உளவியல் சார்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுதான் இந்த நிகழ்வுக்குப் பின்னிருக்கிற அசலான பயங்கரம்.

இயற்கை அழகுக்காக காஷ்மீரை ரோஜாவுடன் ஒப்பிடுவார்கள். அத்தகைய ரோஜாவின் அழகை நம்பி வந்தவர்களுக்கு எப்படிப்பட்ட பயங்கரவாத முள் குத்தியிருக்கிறது!.

– எஸ். டேவிட்

You might also like