‘ஹீமோபிலியா தினம்’ அறிவது அவசியம்!

ஏப்ரல் – 17: உலக ஹீமோபிலியா தினம்

உலகில் எல்லா உயிரினங்களும் சுகவீனங்களை, உடல் பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. இது காலம்காலமாக நிகழ்வது.

ஆனால், அவை மரபணுரீதியாகத் தொடரும்போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சிகிச்சைகளை, மருந்துகளைக் கண்டறிவது அவசியமாகிறது.

மனிதர்கள் தொடங்கி விலங்குகள், இதர உயிரினங்களில் இருக்கிற நோய் குறைபாட்டைக் கண்டறிந்து தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

அந்த வகையில், மனித உடலுக்கு ஊறு ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தீர்ப்பதற்காகப் பல நூறு ஆண்டுகளாகத் தீர்வுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

கால ஓட்டத்தில் அவற்றில் சில நம் கைகளுக்குக் கிடைக்காமல் நழுவினாலும், நவீன மருத்துவ உலகம் ஆராய்ச்சி அறிவின் மூலம் புதிய தீர்வுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், மரபணுரீதியாக மனிதர்களைப் பாதிக்கிற ‘ஹீமோபிலியா’ எனும் நோயைத் தீர்க்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது.

’ஹீமோபிலியா’ என்றால்…

ஹீமோ (hemo) எனும் ஆங்கில வார்த்தையானது ‘haîma’ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து உருவானது. இதற்கு ‘ரத்தம்’ என்று பொருள்.

காயப்படுதல் உள்ளிட்ட சில காரணங்களால் நம் உடலில் உள்ள ரத்தம் வெளியேறும்போது என்னவாகும்?

சிறிய அளவில் ரத்தம் வெளியேறும்போது, சில நொடிகள் அல்லது நிமிடங்களில் அதன் வெளியேற்றம் நின்றுபோகும். காரணம், ரத்தம் கட்டியாக உறைவதுதான்.

அப்படி ரத்தம் உறைவதைச் செயல்படுத்துகிற சில காரணிகள் அதில் நிறைந்திருக்கின்றன. அவற்றில் சில பாதிப்புக்குள்ளாகும்போது, அந்த உறைதல் பணி தடைபடும். ரத்தப்போக்கு தொடரும். இதையே ‘ஹீமோபிலியா’ என்கின்றனர்.

சில தமிழ் திரைப்படங்களில் நாயகன், நாயகி உள்ளிட்ட சில பிரதான பாத்திரங்கள் ரத்தப் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாவதாகக் காட்டுகிற வழக்கம் இருந்தது.

அந்த வகையில், ’ஈட்டி’ படத்தில் நாயகன் அதர்வாவுக்கு குறிப்பிட்ட வகை ‘ஹீமோபிலியா’ பாதிப்பு இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும்.

ரத்த உறைதல் காரணிகளில் 8 மற்றும் 9ன் குறைபாடு காரணமாக முறையே ‘ஹீமோபிலியா ஏ’ மற்றும் ‘ஹீமோபிலியா பி’ பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இது போக வான் விலப்ரெண்ட் பாதிப்பும் சிலரைப் பாதிக்கிறது. இந்தியாவில் சுமார் 1,36,000 பேர் ஹீமோபிலியா ஏ பாதிப்பினால் அவதிப்படுவதாகச் சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

பொதுவாக, இது மரபணுரீதியாகவே ஒரு நபரை வந்தடைகிறது.

மிக அரிதாக, வெளிப்புறச் சூழலாம் மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாகவும் இது போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

அதிகளவில் ஆண்களையே இது பாதிக்கிறது.

இதன் காரணமாக எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மூட்டுவலி, வீக்கம், உடலினுள் ரத்தப்போக்கு போன்றவையும் ஏற்படுகின்றன.

இவற்றின் பின்விளைவுகள் கடுமையாக இருக்குமென்பதால் முன்கூட்டியே இப்பிரச்சனையைக் கண்டறிந்து உரிம முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

தடுப்பு நடவடிக்கை!

‘வருமுன் காப்போம்’ என்பதுவே ‘ஹீமோபிலியா’ பாதிப்புக்குள்ளானவர்களுக்கான முதல் சிகிச்சையாகக் கருதப்படுகிறது.

காயம் ஏற்படாமல் கவனத்துடன் தன்னைத்தானே ஒருவர் காத்துக்கொள்வது மட்டுமே இந்நோய் பாதிப்பைத் தடுப்பதற்கான பிரதான வழி.

குறிப்பாகப் பயணத்தின்போது, விளையாடும்போது, தினசரிச் செயல்பாடுகளின்போது காயப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து, இந்நோய்க்குக் காரணமான ரத்த உறைதல் காரணிகள் 8, 9 ஆகியவற்றை உட்செலுத்திக் கொள்வது தகுந்த பயனைக் கொடுக்கும்.

இது போக ரத்தத்தில் உள்ள ரத்தத்தட்டுகள் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படும்படியான மருந்துகளான ஆஸ்ப்ரின், நப்ராக்ஸன் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், காலையில் எழுந்து பல் தேய்ப்பதில் தொடங்கி இரவில் உறக்கத்தின்போது புரண்டு படுப்பது வரை கவனத்துடன் செயல்பட வேண்டும்.

உள்ளுறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்படுவதைத் தடுக்கவும் உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

உலகம் முழுக்கச் சுமார் 75 சதவிகிதம் பேர் ஹீமோபிலியா பாதிப்பினைக் கண்டறியாமல், உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் வாழ்கின்றனர் என்கிறது உலக ஹீமோபிலியா கூட்டமைப்பு.

இந்நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ஆம் தேதியன்று ‘உலக ஹீமோபிலியா தினம்’ கடைப்பிடிக்கப்படுவதன் பின்னணியில் இது உள்ளது.

இந்த அமைப்பை நிறுவி, ஹீமோபிலியா பாதிப்பைச் சரியான முறையில் மக்கள் எதிர்கொண்டு நல்வாழ்வு வாழ வேண்டுமென்று பாடுபட்ட ஃபிராங் ஸ்னபல் பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

1989ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படும் இத்தினத்தையொட்டி சில கருப்பொருளும் கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘பெண்கள் மற்றும் சிறுமியரின் ரத்தப்போக்கைத் தடுப்பதோடு அனைவருக்குமான நோய் சிகிச்சை’ என்பது முன்வைக்கப்பட்டுள்ளது.

அவசரகதியான தினசரிச் செயல்பாடுகளைக் கொண்ட வாழ்க்கை முறை, சுற்றுப்புறத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் காரணிகள்,

பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பிரச்சனைகளைக் கடந்து ஆரோக்கியத்தைப் பராமரிப்பது கேள்விக்குறியாகிவரும் நிலையில்,

நம் உடலில் நிறைந்திருக்கும் ரத்தத்தின் இயல்பு பற்றியும், அதிலுள்ள நிறை குறைகள் குறித்தும் அறிந்துகொள்வதற்கான விழிப்புணர்வைப் பெற ‘உலக ஹீமோபிலியா தினம்’ ஒரு உந்துசக்தியாக விளங்குகிறது.

– மாபா

You might also like