இயக்குநர் ஆர்வி உதயகுமார், ‘பொன்னுமணி’ படத்துக்காக ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தார். சாஃப்ட் முகம், அதேசமயம், நடிக்கக்கூடிய பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
வழக்கமான ஹீரோயின்களை இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தால், அந்த ஹீரோயினின் இமேஜ்தான் இந்தப் படத்துக்கு வரும் என்பதால், புதுமுகமாகவே தேடிக் கொண்டிருந்தார்.
புதுமுகங்கள் தேர்வு
பல புதுமுகங்கள் வந்தாலும், யாரும் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகையில், அட்டைப் படத்தில் சௌந்தர்யாவின் போட்டோ வெளியாகியிருந்தது.
இந்த போட்டோவைப் பார்த்த ஆர்.வி.உதயகுமார், பிஆர்ஓவை அழைத்து, யாரிந்த பெண் என்று விசாரித்தார். அப்போதுதான் கன்னடப் படத்தில் சௌந்தர்யா நடித்திருப்பது டைரக்டருக்கு தெரியவந்தது.
இதையடுத்து பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டார் சௌந்தர்யா. நேரில் பார்த்ததுமே சவுந்தர்யாவை டைரக்டருக்கு பிடித்து போய்விட்டது.
தன்னுடைய படத்தில் நடிக்கிறீர்களா? என்று ஆர்வி உதயகுமார் கேட்டதுமே, தமிழ் தனக்கு தெரியாது என்றாராம் சவுந்தர்யா. அதற்கு டைரக்டர், “பரவாயில்லை , மேனேஜ் செய்து கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.
உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாது
கார்த்திக் அப்போது பிரபலமான ஹீரோ. அனைவருக்கும் தெரிந்த நடிகரும்கூட. அதனால், சௌந்தர்யாவும் உடனே அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
அந்தப் படத்தில், “நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் தெரியுமா?” என்ற பாடலில், “உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாது” என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வரிகள் சௌந்தர்யாவுக்காகவே எழுதப்பட்ட வரிகள் போலவே இருக்கும்.
அதேபோல, கேஎஸ் ரவிக்குமார் தன்னுடைய “படையப்பா” படத்துக்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தபோதும் இப்படித்தான் நடந்தது. சௌந்தர்யாவை படையப்பா படத்தில் நடிக்க வைக்கலாமா? என்று ரஜினிகாந்திடம் கேஎஸ் ரவிக்குமார் கேட்டதுமே, உடனே ஓகே சொல்லிவிட்டார் ரஜினி.
காரணம், சவுந்தர்யாவின் முகம் அப்பாவித்தனமாகவும், அதேசமயம், சாஃப்ட்டாகவும் இருக்கும்.
படையப்பா படத்தில், நீலாம்பரி என்ற பவர்புல் கேரக்டருக்கு எதிராகவும், சாப்ட்டாகவும், அப்பாவியான முகமாகவும் இருக்க வேண்டும் என்பதால், அந்த படத்தில் சௌந்தர்யா நடிக்க வைக்கப்பட்டார்.
விஜயகாந்த்தின் தவசி
சொக்கத்தங்கம் விஜயகாந்த்துடன் தவசி என்ற படத்தில் சௌந்தர்யாவை ஒப்பந்தம் செய்ய முடிவானது.
ஆனால், அந்தப் படத்தில், நடிப்பதற்கு சௌந்தர்யா ஆர்வம் காட்டாமலேயே இருந்தார்.
இதை கவனித்த டைரக்டர் சௌந்தர்யாவிடம் சென்று, “இந்தப் படத்தில் நடிக்க என்ன தயக்கம்? ஏன் நடிக்க யோசிக்கிறீங்க?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு செளந்தர்யா, “விஜயகாந்த் முரட்டுத்தனமாக காணப்படுகிறார்.
செட்டில் சரியாக நடிக்காவிட்டால், கன்னத்தில் அறைந்துவிடுவார் என்று பலரும் சொல்கிறார்களே?” என்று கேட்டுள்ளார்.
இதைக்கேட்டதும் டைரக்டர், “அய்யய்யோ, விஜயகாந்த் அப்படிப்பட்டவர் இல்லை. யாரோ உங்களிடம் தப்பா சொல்லி இருக்காங்க.
மூன்று நாட்கள் ஷூட்டிங்கில் வந்து உட்காருங்க. நடிக்க வேணாம். அதற்கு பிறகு, உங்களுக்கு விருப்பமிருந்தால் விஜயகாந்த்துடன் நடிக்கலாம்” என்றார்.
அதன்படியே சௌந்தர்யாவும், 3 நாளும் சும்மாவே ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போதுதான், விஜயகாந்த்தின் எளிமை, அனைவரிடமும் பழகுவதை பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டார்.
உடனே விஜயகாந்திடம் நேரடியாக சென்று, “இவ்வளவு நல்லவராக இருக்கீங்க, உங்களை போய் ஏன் தப்பா சொல்றாங்க? உங்களை தப்பா நினைச்சிட்டேன், ஸாரி சார்” என்று சொல்லி மறுநாளே விஜயகாந்த்துடன் நடித்துள்ளார்.
பாக்யராஜ் டைரக்ஷனில் சொக்கத்தங்கம் படத்திலும் விஜயகாந்த்துடன் இன்னொரு படம் நடித்தார்.
சினிமாவில் மிகக்குறுகிய காலகட்டத்திலேயே பிரபலமானவர் சௌந்தர்யா.
அதேபோல, குறுகிய காலகட்டத்திலேயே மரணமடைந்துவிட்டார்.
சௌந்தர்யாவின் ஹோம்லி முகம், அவரது லுக், ஸ்மைல் இன்னமும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.