காஸாவின் கண்ணீர்…!

என்ன நடக்கிறது இங்கே
என் அம்மா எங்கே?

சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன் உன்னை
எனச் சொல்லி அனுப்பிய
இறைவனே நீ எங்கே?

என்ன ஆனது என் தொட்டில்?
எங்கே என் அம்மா உறங்கிய
கட்டில்?

எங்கள் கூட்டைக் கலைத்த
குரங்கு எது?
ஏன் இப்படி உடைத்து எறிந்தது?

தென்றல் தாலாட்டும்
என் உறக்கத்தை ஏன்
இடி இப்படிக் கலைத்தது?

இது இரவா? பகலா?
எனைச் சுற்றி நிற்கும்
இவர்கள் தேவதைகளா?
இல்லை சைத்தான்களா?

ஓராண்டு முடிவதற்குள்
எத்தனை முறை என்னை
அம்மா அணைத்து அழுதாள்,
என் அம்மா!
ஏன் இங்கு வந்து பிறந்தாய்
என அவள் கேட்ட கேள்விக்கு
என்னிடம் பதில் இல்லை.
கேள்வியே புரியவில்லை!

குண்டு மழை பொழியும்போது எனை
ஆரத்தழுவிக் காப்பாற்றிய
என் அப்பாவின் இரத்தம்
உறைந்த உடலின் மீது ஏறி
நின்று கொண்டுதான்
இப்படி விழிக்கிறேன்!

ஏன் விடிந்தது இந்த இரவு?
இது நீ வாக்களித்த பூமி
எனப் பலர் சொன்னார்களே!
அப்பொழுது நீ தானா
குற்றவாளி, கடவுளே!?

பைத்தியக்கார விடுதியா
இந்த பூமி?
பதில் சொல்
எனைப் படைத்த சாமி!

என்ன நடக்கிறது இங்கே
என் அம்மா எங்கே?

  • உஸ்மான்
You might also like