வித்தியாசமான ஓவியங்கள்: மதுரை ஓவியரின் புது முயற்சி!

மதுரையைச் சேர்ந்த ஓவியர் எம்.ஏ.தங்கராஜு பாண்டியன்  தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தாவரவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்ட  இவர், வித்தியாசமான முயற்சியாக, முன்பு போல் மக்கள் அனைவரும் தபால் அட்டையை உபயோகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்  108 அஞ்சல் அட்டையில் 108 சிவதாண்டவங்களை வரைந்துள்ளார்.

இதை வரைய ஒரு மாதம் கால அவகாசம் எடுத்துக் கொண்ட ஓவியர் எம்.ஏ.தங்கராஜு பாண்டியன் கலர் பென்சில் மற்றும் அக்ரலிக் வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளார்.

இதேபோல், ரங்கோலி மற்றும் கார்ட்டூன் ஓவியங்கள், அரச இலைகளில் ஓவியம், தேங்காய் சிரட்டைகளில் ஓவியம் உள்ளிட்ட பலவிதமான ஓவியங்களையும் வரைந்துள்ளார்.

மேலும் சோப் கார்விங் முறையிலும் ஓவியங்களை வடித்துள்ளார். ஏற்கனவே இந்திய தபால் அட்டைகளில் 64 திருவிளையாடல்கள் படங்களை வரைந்துள்ளார்.

தனது ஓவியம் குறித்து பேசிய அவர், “சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஓவியத்தின் மேல் கொண்ட ஈடுபாடு காரணமாக அம்புலி மாமா போன்ற கதை புத்தகங்களிலும் நாவல்களிலும் இடம்பெற்றிருந்த பிரபல ஓவியர்களுடைய படங்களை வரைந்து பழகினேன். பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக இதுபோன்று இன்னும் வித்தியாசமாக பல ஓவியங்களை வரைய தொடர்ந்து முயற்சி எடுப்பேன்” என்று உற்சாகமாகக் கூறுகிறார். ஓவியரின் முயற்சிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

 

 

     

You might also like