நதிமூலம் – பிரபலமான பலரின் பால்ய எழுச்சியான மூலத்தைத் தேடிச் சென்று பதிவு செய்யும் தொடரை 20 ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் வார இதழில் எழுதத் துவங்கியபோது அதற்குப் பரவலான வரவேற்பு கிடைத்தது.
கலைஞரின் நதிமூலத்திற்காக திருக்குவளை, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நதிமூலத்திற்காக மதுரை, பாரதிராஜாவின் நதிமூலத்திற்காக தேனி, அல்லி நகரம் என்று பல்வேறு இடங்களுக்குப் பயணப்பட்டதைப் போலவே கவிப்பேரரசு வைரமுத்துவின் நதிமூலத்தைத் தேடி அவரது சொந்த ஊரான வடுகபட்டிக்குச் சென்றிருந்தேன்.
ஆண்டுகள் பல கழிந்தாலும் இன்னும் வடுகபட்டியில் அன்று காட்டப்பட்ட, ஒரு கனிந்த உபசரிப்பை மறக்க முடியவில்லை.
அந்த கிராமத்திற்கு போனதுமே உருவத்தில் வைரமுத்துவின் சாயலில் இருந்த அவருடைய இளைய சதோதரர் சுந்தரமூர்த்தி இருசக்கர வாகனத்தில் வடுகபட்டியின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார்.
தங்களது தாயாரையும் தந்தையையும் அறிமுகப்படுத்தினார். கவிஞருக்கு மிக நெருக்கமான நண்பர்களை அறிமுகப்படுத்தினார்.
கவிஞரின் பாடலில் இடம்பெற்ற வராகநதிக்கு அழைத்துச் சென்றார். வடுகபட்டிக்குத் தன்னால் இயன்ற கொடையாக அவர் உருவாக்கிக் கொடுத்த நூலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
கவிஞரிடம் அந்த இளம் வயதில் இருந்த ஒரு எழுச்சியான வேகத்தை அந்த ஊரில் இருந்த பலரும் நேசத்துடன் பகிர்ந்து கொண்டார்கள்.
பிறகு சென்னைக்கு வந்து, கவிஞரை அவரது வீட்டில் சந்தித்தபோது அவருடைய சொந்த ஊரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அந்தக் கவிஞரின் நதிமூலம் பத்திரிகையில் வெளிவந்தபோது தனி கவனம் பெற்று உரிய வரவேற்பையும் பெற்றது.
கால இடைவெளி இருந்தாலும் கவிஞரின் வாழ்வின் பால்யம் சார்ந்த ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் அந்தக் கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு…
****
“கறுப்பா இருந்தாலும் முகலட்சணமா துறுதுறுப்பா இருக்கானே.”
– உருண்ட விழியும் நேரான மூக்குடனும் இருந்த அந்த நான்கு வயதுப் பையனின் மேல் விழுந்த ஊராரின் விமர்சனம் இது.
அந்தச் சிறுவனுக்கு, நான்கு வயதிலேயே ஒரு கனமான அனுபவம்.
வைகை அணை கட்டுவதற்காக அரசு காலி பண்ணச் சொன்ன சில கிராமங்களுள் அவனது கிராமமான மேட்டூரும் ஒன்று.
கையில் கிடைத்த கொஞ்சநஞ்ச தொகையுடன், அப்பா ராமசாமித்தேவர் முன்னால் போக பின்னால் அம்மா அங்கம்மாளின் கைவிரலைப் பிடித்தபடி அந்தச் சிறுவன் வெளியேற அவன் பிறந்த கிராமம் வைகை நீரில் மூழ்கிப் போனது.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவனது பெற்றோர்களுக்குக் குலதெய்வம் திருமங்கலம் அருகிலிருக்கிற வைரவசாமி. அந்த ஞாபகத்தில் அவர்கள் அவனுக்கு வைத்திருந்த பெயர் வைரமுத்து.
தாமரைக்குளம் என்கிற கிராமத்தில் ஒரு வருடம் பையனைப் படிக்க வைத்து வடுகபட்டிக்குக் குடியேறியது வைரமுத்துவின் குடும்பம். அங்கு முதலாம் வகுப்பு. ஊரிலிருந்த அதே வறட்சி அவனது குடும்பத்திலும்.
முழங்காலைத் தொடும் சட்டையுடன் பள்ளிக்குப் போகும் அவனுக்குப் பள்ளிச் சூழ்நிலை, அதன் முன்னிருந்த பரந்த மைதானம், அங்கே கொடுக்கப்படும் பவுடர் பால், காதில் விழுந்த பாடச் சத்தம் எல்லாமே பிடித்திருந்தது.
காலையில் வயற்காட்டில் வேலை செய்யும் தகப்பனாருக்குச் சாப்பாடு தூக்குவாளியைத் தூக்கிக்கொண்டு தலையில் சும்மாடுச் சாக்கு போட்டபடி ஓடிக் கொடுத்துவிட்டுப் பள்ளிக்கு மூச்சிரைக்க ஓடி வருவான். பள்ளிக்கூடம் மேல் அப்படியொரு பிடிப்பு!
“வீட்டிலே வைரமுத்துதான் தலைப்பிள்ளை. இவனுக்கு அடுத்து விஜயா, சுந்தரமூர்த்தி, பாண்டியன்னு மூணு பிள்ளைகள். சின்ன வயசிலிருந்தே படிப்பு மேலே ஆசை வைரமுத்துவுக்கு.
எந்த வம்பு தும்புக்கும் போறதில்லை. எப்பப் பார்த்தாலும் ஏதாவது கரட்டு மேட்டுக்குப் போய் படிச்சுக்கிட்டிருப்பான்…” நினைவு கூர்ந்து சொல்கிறார் வைரமுத்துவின் தாயான அங்கம்மாள்.
விவசாயக் குடும்பத்தில் படிப்பை மட்டும் கவனித்தபடி இருந்துவிட முடியுமா என்ன? இளம் வயதிலேயே விவசாய வேலை செய்யப் போனான். மாடு மேய்க்கவும் போனான்.
மாடு மேய்க்கும்போது கூட தூரத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க இன்னொரு எல்லையில் சற்று கவனத்துடன் உட்கார்ந்து புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தான் சிறுவனான வைரமுத்து.
கண்கள் புத்தகத்தில் மேல் ஊற, அவனது கால் விரலிடுக்கில் மாட்டின் கயிறு. அந்த அளவுக்கு அவனுக்குப் படிப்பதில் வெறிவரக் காரணம் வடுகபட்டியில் இருந்த நூலகமும், அதன் நூலகரான தாயுமானவரும்.
கல்கி, அகிலன், ஜெயகாந்தன், டால்ஸ்டாய், கார்க்கி இப்படிப் பலரும் அறிமுகமானார்கள்.
புத்தகத்தில் ஆர்வத்துடன் இருந்த அவனது மனதுக்கு அப்போது நெருக்கமாக இருந்து தூண்டினவர்கள் கண்ணதாசனும், சுரதாவும். அந்த இளம் மனதில் தடம் பதித்த வரிகள் “சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா”.
“எங்க ஊர்லே அப்போ டெண்ட் கொட்டகை தான். அண்ணனுக்கு அப்பவே நல்ல வசனமோ, பாட்டோ இருக்கிற படம்னா ரொம்பவும் பிடிக்கும். திரும்பித் திரும்பிப் பார்ப்பார்.
நாடோடி மன்னன், பராசக்தி, அரசிளங்குமரி படத்தையெல்லாம் பல முறை விரும்பிப் பார்த்திருக்கிறார். பராசக்தி வசனத்தைக் குரலில் ஏற்ற இறக்கத்தோடு மனப்பாடமா அப்படியே ஒப்பிப்பார்.
சாணித்தாளில் அப்போ வெளியான பராசக்தி வசனப் புத்தகத்தைப் பாடப் புத்தகங்களுக்கிடையில் வைச்சிருப்பார்.
சினிமா, இலக்கியப் புத்தகங்கள் மேலே ஆர்வம் இருந்தாலும் அவர் படிப்பிலே இருக்கிற கவனத்தை விட்டுடலே. எப்பவும் முதல் ரகமா இருப்பார்.
படிச்சு என்ன தொழிலுக்குப் போகப் போறேன்னு பலரும் கேட்கறப்போ… ‘காலேஜ் வாத்தியாராகப் போறேன்’னு தான் சொல்வார்” என்கிறார் வைரமுத்துவின் தம்பியான சுந்தரமூர்த்தி.
வீட்டுச் சூழ்நிலை ஏழ்மையாக இருந்தாலும், அதற்காகவே விவசாய வேலைகள் நிர்ப்பந்தமாகத் திணிக்கப்பட்டாலும் அதற்கும் மேலாகத் ‘தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும்; மற்றவர்கள் கவனத்தில் நாம் உயர வேண்டும்’ என்பதில் ஈடுபாடு அதிகமாகி படித்ததை உன்னிப்பாக மூளையில் பதிய வைத்துக்கொண்டான்.
லேசான வெண்கலம் அதிர்ந்த மாதிரி இருந்த தனது குரலைத் திருத்தித் தெளிவான தமிழில் பேச முயற்சி செய்தான்.
நூலகத்தில் பல புத்தகங்களை அலசியதால் மனதுக்குள் வந்து விழும் அடுத்தடுத்த வாக்கியங்களைக் கொஞ்சம் சீர் செய்து தொகுத்து பேசிப் பழகினான்.
“அட… நம்ம கூட இருக்கிறவன் என்னமாய்ப் பேசுறான்” என்று கேட்கிறவர்கள் சற்று அண்ணாந்து பார்த்தார்கள். ஒரு பேச்சாளன் உருவாகிவிட்டான்.
அதற்குத் தோதாக பள்ளியில் தலைமையாசிரியர் அவனிடம் கொடுத்த வேலையில் மிகவும் இஷ்டம். பள்ளிக்கூடப் பிரார்த்தனை நேரத்தில் தினமும் அன்றைய தினசரியின் முக்கியச் செய்திகளை வாசிக்க வேண்டும்.
அதற்காக சீக்கிரமே எழுந்து கிணற்றில் மூழ்கி எழுந்து, தலை துவட்டினபடி ஒரு ஓட்டம் ஓடி, நூலகம் முன் காலை எட்டு மணிக்குக் காத்துக் கிடந்து தினப்பத்திரிகை வந்து விழுந்ததும் உள்ளூர்ச் செய்தி முதல் உலகச் செய்தி வரை ஆராய்ந்து குறித்து அன்றைக்கே செய்தி வாசிப்பாளராக செய்திகளை வாசித்தது அவனுக்குப் பிடித்த அனுபவம்.
“வைரமுத்து வடுகபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது நான் தலைமை ஆசிரியர். பள்ளியில் ஒவ்வொரு வருஷமும் எவ்வளவோ மாணவர்கள் படித்துவிட்டுப் போனாலும் சில மாணவர்கள் மட்டும் தங்களுடைய தனித்திறமையால் தனித்து நம் கவனத்தில் படுவார்கள்.
அப்படி என் கவனத்தில் பட்ட மாணவன் வைரமுத்து. சராசரியை விட உயர்ந்த மாணவராக இருந்தாலும் பேச்சில் அப்போதே விசேஷ ஈடுபாடு.
தானாகவே பேசப்போகும் விஷயங்களைத் தயாரித்துக் கொள்வார். அவரைப் பல பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்பிப் பரிசும் வாங்கியிருக்கிறார்.
அண்ணாவோட புத்தகங்களைச் சின்ன வயசிலேயே ஆசையாய்ப் படிச்சுக்கிட்டிருப்பார்.
வசதிக் குறைவே ஒழிய, சுறுசுறுப்பிலும், பேச்சுத் தெளிவிலும் தனியாகத் தெரிவார்.
69-ல் நான் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போகிறபோது ஒரு கவிதையை எழுதிக் கொண்டு வாசித்தபோது அவருக்கு வயது பதினாறு” – சொல்கிறார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான, அறுபத்தைந்து வயதைக் கடந்தவரான எம்.ஆர். விஸ்வேஸ்வரன்.
வடுகபட்டியில் வறண்டு கிடக்கிற கரடு மேடுகளுக்கிடையில் இருந்த வைரமுத்துவின் வீட்டில் வெகு காலமாக மின்சார வெளிச்சம் கூட வராத நிலை. லாந்தர் விளக்குதான். காலை ஐந்து மணிக்கு எழுந்து மாலை ஏழு மணி வரைக்கும் மட்டுமே புத்தகம் படிப்பு எல்லாம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்திருந்த நேரம். பள்ளிக்கூட மாணவனாக இருந்த போதே போராட்டத்தில் இறங்கின வைரமுத்தையும், இன்னும் சிலரையும் மொத்தமாக கைது செய்து பெரியகுளத்திற்குக் கூட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள்.
போனதும் அங்கே உள்ள மைதானத்தைச் சில சுற்றுகள் சுற்றச் சொல்லிவிட்டுத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
அப்போது வடுகபட்டிச் சுற்று வட்டார மேடைகளில் நாவலர் நெடுஞ்செழியன், பெரியார், கலைஞர், அண்ணா குரல்களில் வைரமுத்து மாறிமாறிப் பேசுவதும் பிரசித்தமாக இருந்தது.
திராவிட இயக்கத்தின் பாதிப்பு கடவுள், நம்பிக்கை, கிராமியச் சடங்குகளுடன் இருந்த குடும்பத்திலிருந்த இளைஞனான வைரமுத்துவை மாற்ற, சொந்தக்காரர்களிடையே கொஞ்ச காலத்திற்குப் புதிராகத் தெரிய ஆரம்பித்தார்.
அப்போதைய வைரமுத்துவுக்கு இருந்த ஒரே உந்துதல் நா. பார்த்தசாரதியின் ‘பொன்விலங்கு’ நாவலில் வரும் சத்தியமூர்த்தி என்கிற கதாபாத்திரம் மாதிரி நாமும் ஒரு நாள் கல்லூரிப் பேராசியராகிக் கலைச் சேவை செய்ய வேண்டும்.
கவிதை எழுதுவதில் இவருக்கு இருந்த ஈடுபாடு ஒன்பதாவது வகுப்புப் படிக்கும்போதே துவங்கிவிட்டது.
அப்போதே மரபுக் கவிதைகளைப் பிழையில்லாமல் எழுதுவார். அவருக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்து உதவியவர் இங்கிருந்த ஆசிரியரான உத்தமன்.
வடுகபட்டியில் இயற்கைச் சூழ்நிலையுடன் இருக்கிற சந்தடி இல்லாத இடங்களுக்குப் போய் உட்கார்ந்து யோசிப்பது, கவிதை எழுதுவது இவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய பல கவிதைகளுக்கான மூலம் இந்தக் கிராமச் சூழல்தான்.
வைரமுத்துவின் பெற்றோர்கள் படிக்க உதவியிருக்கலாம். அவருடைய நண்பர்கள் சிலச்சில உதவிகளைச் செய்திருக்கலாம். இருந்தாலும் வைரமுத்துவின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் அவருடைய ஓய்வில்லாத சொந்த முயற்சி தான்” என்கிறார் வைரமுத்துவுடன் சிறுவயதிலிருந்து பழகி வருபவரான தலைமை ஆசிரியர் புவனேந்திரன்.
பள்ளி இறுதித் தேர்வு எழுதும்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுச் சோர்ந்திருந்தாலும், ஆச்சர்யப்படும்படியான தேர்வு முடிவு.
அதிலும் தமிழில் கூடுதலான மதிப்பெண் எடுத்ததற்காக விசேஷமான வெள்ளிக் கோப்பை.
சொந்தக்காரர்கள் உதவியுடன் சென்னைக்கு வந்து பி.யு.சி படிக்கச் சேர்ந்தது பச்சையப்பன் கல்லூரியில். தமிழில் பட்டப் படிப்பும் இங்கேயே.
சென்னை வந்ததும் பலதரப்பட்ட வாய்ப்புகள். கவிஞராகிவிடலாம் என்பதை உணர வைத்தன சில அனுபவங்கள். 70-ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது நடந்த கவியரங்கத்தில் கலந்து கொண்டவர்களிலேயே வயது குறைந்திருந்தவர் வைரமுத்து.
கல்லூரியில் படிக்கும்போது வைரமுத்துவின் கவிதையை முதன் முதலில் அச்சேற்றிய பத்திரிகை ‘தேன்மழை’. கவிதைத் தலைப்பு ‘இளநெஞ்சின் ஏக்கம்.’
சென்னைக்கு வந்ததிலிருந்தே வைரமுத்து பார்க்க விரும்பின நபர் கவிஞர் கண்ணதாசன்.
அவருடனான முதல் சந்திப்பு சுமுகமாக இல்லாத நிலையில் சில கவியரங்குகளுக்குப் பிறகு அவருக்கு அறிமுகமாகி, பத்தொன்பது வயதில் ‘வைகறை மேகங்கள்’ என்கிற தனது முதல் தொகுதிக்காக கண்ணதாசனிடம் முன்னுரை கேட்டபோது, “நல்ல எதிர்காலம் உண்டு” என்று வாழ்த்தி இருக்கிறார்.
இதைவிட ஒரு உறவையே ஏற்படுத்திக்கொடுக்க ஆயத்தமாகி வந்திருந்தது இன்னொரு வாழ்த்து.
பச்சையப்பன் கல்லூரியில் கட்டபொம்மன் பற்றி ஒரு கவியரங்கம் நடந்தபோது அதில் வைரமுத்து வாசித்த கவிதைக்கு வந்த வாழ்த்து தான் அது. வாழ்த்தியவர் அவரது திருமதியாகியிருக்கிற பொன்மணி.
“வடுகபட்டிச் சூழலில் பிறந்த வைரமுத்துவை ஒரு நல்ல விதை என்று உணர்ந்து அதன் வளர்ச்சிற்கேற்ற சூழ்நிலையை அவரது பெற்றோர் உருவாக்கவில்லை. பல சிரமங்களுக்கிடையில், வீட்டில் இருந்த ஏழ்மையான நிலைக்கிடையில் அவராகவே தன்னை வளர்த்துக் கொண்டார்.
அப்போது பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் துணைத் தலைவராக இருந்த முருகேசன் அவர்களின் மகளான பொன்மணியைத் திருமணம் செய்ய முடிவெடுத்த போது இவரது வீட்டிலும் கடுமையான எதிர்ப்பு. ஜாதிப் பிரச்சினை குறுக்கே நின்றது.
இதையே “யாவர்களும் ஒன்றாகப் போவதாலே தேவர்களும் இல்லை, உடையார்களும் இல்லை மாதே” என்று ஒரு கவிதையில் எழுதினார்.
சென்னையில் வாலாஜா சாலையில் வாடகை வீட்டில் இருந்த வைரமுத்துவுக்கும் பொன்மணிக்கும் திருமணம் ரிஜிஸ்தர் ஆபிஸில் எளிமையாக நடந்தபோது உடனிருந்தவர் என்னைப் போன்ற சிலர் மட்டும்தான்.
திருவல்லிக்கேணியில் சின்னதாக ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்கள். யாரையும் எப்போதும் சார்ந்திருக்கக் கூடாது.
சுயமாக இருக்கணும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை வைரமுத்துவுக்கு உண்டு என்பதையே அவரது திருமணமும், அவரது வளர்ச்சியும் காட்டுகிறது” என்று பல சம்பவங்களைக் கோர்வையாகச் சொல்கிறார் வைரமுத்துவுக்கு இளவயதிலிருந்த நெருக்கமானவரான வடுகபட்டியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான சின்னராசு.
படித்து முடித்த கையோடு அப்போது வைரமுத்து பணியாற்றியது ஆட்சி மொழி ஆணையத்தில். சட்டத்தைத் தமிழில் மொழிபெயர்க்கிற வேலை. அதிலிருந்தபடியே திரைப்படத்துறைக்கான முயற்சியிலிருந்தபோது ஓவியர் உபால்டு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திய நபர் பாரதிராஜா.
சில நிமிடச் சந்திப்புதான், கையில் கொண்டு போயிருந்த தனது ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ தொகுப்பை அவரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார் வைரமுத்து.
மனைவி பொன்மணிக்கு தலைப்பிரசவ நேரத்தில் பாரதிராஜாவிடமிருந்து அழைப்பு. போனார். பாட்டெழுதச் சொன்னார்கள்.
சென்னை அட்லாண்டிக் ஹோட்டல் இளையராஜா ஆர்மோனியத்துடன் ‘தானானே…’ சொல்ல இவர் அதற்கேற்றபடி ‘பொன்மாலைப் பொழுது’ என்று வார்த்தைகளால் நிரப்பினார்.
இளையராஜாவும் பாரதிராஜாவும் பாட்டு முடிந்ததும் பாராட்ட, ‘நிழல்கள்’ படத்தில் 80-ல் வந்த அந்தப்பாட்டு திரையுலகிற்கு ஒரு புதுக்கவிஞனை அறிமுகப்படுத்தியது.
அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஏற்கனவே இருந்த வேலையை விட்டுவிட்டு முழு நேரக் கவிஞனாக முடிந்தது.
“கடந்த பதினெட்டு வருடங்களில் திரையுலகிலும், கவிதை வெளியீட்டிலும் தன்னை ஸ்தாபித்துக்கொண்டாலும் வைரமுத்துவுக்கு அடித்தளமாக இருந்தது வடுகபட்டி, இங்கிருந்த சூழல், இங்கிருந்த இயற்கை சார்ந்த இடங்கள் எல்லாம்தான். தான் உருவான மண் மீது மிகுந்த பாசம் அவருக்கு.
வடுகபட்டியில் உள்ள நூலகம் இல்லாவிட்டால் வைரமுத்துவே இல்லை என்கிற அளவுக்கு நெருக்கம் கொண்டிருந்ததால் ஒரு லட்ச ரூபாய் நிதி கொடுத்து வடுகபட்டியிலேயே நல்ல நூலகக் கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார் அரசு உதவியோடு.
இங்குள்ள வராக நதி அவரது கவிதைகளில் அடிக்கடி தலைகாட்டும். 86-ல் ‘முதல் மரியாதை’ படத்திற்காக இவருக்குத் தேசிய விருது கிடைத்தபோது கிராமத்திற்குத் தாரை தப்பட்டையுடன் இவரை அழைத்து வந்து பெரிய விழா நடத்தினோம். அந்த விழாவில் மிகவும் நெகிழ்ந்து பேசினார்.
சமீபத்தில் பெரியகுளத்தில் ஜாதிக் கலவரம் நடந்தபோதும் அங்கு கூட்டம் ஏற்பாடு பண்ணி ஜாதி வேற்றுமையைக் கண்டித்து உணர்ச்சி வசப்பட்டார்… தனது மண்ணை நேசிப்பதால் தான் இன்றைக்கும் இந்த ஈடுபாடு” – நன்றிப் பெருக்குடன் சொல்கிறார் வைரமுத்துவின் நண்பரான வடுகபட்டியைச் சேர்ந்தவரான டாக்டர் செல்வராஜ்.
பொன்மாலைப் பொழுதில் துவங்கி இதுவரை நான்காயிரத்திற்கு மேற்பட்ட பாடல்கள். மூன்று முறை தேசிய விருது. பல முறை தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள்.
இதுவரை லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கின்ற இவரது 29 புத்தகங்கள் இதெல்லாம் வைரமுத்துவின் அடையாளங்கள்.
மதன் கார்க்கி, கபிலன் என்று இருமகன்களுடன் நாற்பத்தி நான்கு வயதைத் தற்போது கடந்திருக்கிற வைரமுத்து “எனது கிளைகள் எங்கெங்கோ விரிந்திருந்தாலும் ஆணிவேர் இருப்பது இங்கேதான்” என்று குறிப்பிடுவது தான் உருவான கிராமமான வடுகபட்டியை.
கிராமத்து மனுஷராக வடுகபட்டியை விட்டு வெளியேறின வைரமுத்துவின் கனவுகள் இப்போது நிறைவேறியிருக்கிறதா?
“திரைத்துறைக்கு வந்த இந்த பதினேழு ஆண்டுகளில் எவ்வளவு தூரம் என்னைத் தேய்த்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எப்போதும் வாழ்க்கையைப் பாஸிட்டிவ்வாகப் பார்க்கிறவன். சிந்திப்பது, எழுதுவது எல்லாம் பாஸிட்டிவ்வாகத்தான்.
ஒரு தன்னம்பிக்கையுடன் இந்த ஃபீல்டுக்கு வந்தேன். மூன்று முறை தேசிய விருது வாங்கினாலும் எனது வெற்றி இதுவல்ல.
நான் செய்யும் பணிக்கு இது ஒரு விளைவு. அவ்வளவுதான். தமிழுக்குக் கிடைத்த ஒரு கருவி நான். இதில்தான் எனக்குத் திருப்தி.
இப்போதுகூட நான் கவிஞனா இல்லையா என்பதில் கூடச் சிலருக்குக் கருத்து வேறுபாடிருக்கலாம்.
ஆனால் நான் கவிதை எழுதுகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதில் யாருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது” என்று மென்மையான குரலில் வைரமுத்து சொல்வதுகூட ‘பாஸிட்டிவ்’வாகத்தானிருக்கிறது.
பின்னிணைப்பு : என் மனதில் இருக்கிறது அந்தக் கிராமம்!
வடுகபட்டியைப் பற்றி வைரமுத்துவிடம் பேசும்போது ஒரு தாயைப் போல பரிவுடன் தனது ஊரைப் பற்றிப் பேசுகிறார். வடுகபட்டியை ‘நான் வளர்ந்த நாற்றங்கால்’ என்கிறார்.
“என்னுடைய குடும்ப வாழ்கை வறட்சியான வாழ்க்கை. வறட்சியான பிரதேசத்தில் உழைப்பிற்கேற்றபடியான ஊதியத்தைப் பூமி கொடுக்க முடியவில்லை.
விவசாய வேலைக்கு என்னை வீட்டில் உள்ளவர்கள் திருப்பினாலும் அதில் ஒன்ற முடியவில்லை. காரணம் அதை இழிவாகக் கருதியதால் அல்ல. என் படிப்பு மீதான கவனத்தை அது சிதைத்துவிடுகிறது என்று எண்ணினேன்.
மாடு மேய்க்கும்போது கூட ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பேன். அப்போது ஏதோ கனாக்காரன் என்ற நினைப்பு என் வீட்டில்.
என்னை யாரும் அப்போது புரிந்துகொள்ளவில்லை. நான் கலைஞன் என புரிந்துகொள்ளப்பட்டது பணம் சம்பாதித்த பிறகுதான். அந்த அளவுக்குப் பொருள் வயப்பட்ட வாழ்க்கை.
அப்போது முதலில் நான் ஒரு தாசில்தாராகவாவது வரவேண்டும் என்று நினைத்தார்கள்.
நான் கொஞ்சம் பேச ஆரம்பித்த பிறகு கலெக்டராகக் கூட வரலாம் என்று நினைத்தார்கள்.
படிப்பு வேட்கை, தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற வெறி இவைதான் என்னை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்தியது. அதுதான் என்னை முன்னுக்குக் கொண்டுவந்தது.
இப்போதும் அங்குலம் அங்குலமாக என் மனதில் இருக்கிறது என்னை உருவாக்கிய வடுகபட்டி கிராமம். என்னைச் சுற்றி உள்ள உலகை, இயற்கையை ரசிக்கக் கற்றுக்கொடுத்தது அந்த பூமிதான்.
அம்மாதிரி இயற்கையான ரசிப்புக்கு என்னையறியாமலே நான் ஆளாகி இருந்த காரணத்தால் தான் அப்போது நான் தப்பாகப் புரிந்துகொள்ளப்பட்டேன்.
ஏதோ இவனுக்குக் கர்வம் இருக்கிறது என்கிற தொனியை என்னையறியாமலே மற்றவர்களிடம் ஏற்படுத்தி விட்டேன். இது முன்பு புரியவில்லை. இப்போது புரிகிறது” ஒரு பெருமூச்சுடன் சொல்கிறார் வைரமுத்து.
– மணா எழுதி, ‘வைரமுத்தியம்-2025 பன்னாட்டுக் கருத்தரங்க’த் தொகுப்பில் வெளிவந்த கட்டுரை.