இயற்கையின் அடிப்படையே இடமிருந்து வலம்தான்!

பூங்காவில் கடிகாரச் சுற்றுத் திசையில் அதாவது வலஞ்சுழியாக நடைப்பயிற்சி செய்பவர்கள்தான் அதிகம். (நடைபயிற்சி நாயகர்களில் பெரும்பான்மையோர் வலஞ்சுழிக்காரர்கள்தான்)

அந்தநேரம் இடஞ்சுழியாக அதாவது எதிர்ச்சுற்று சுற்றி வருபவர்களைப் பார்த்தால் கடுப்பாக இருக்கும்.

‘எல்லோருக்கும் ஒருவழி என்றால் இடும்பனுக்குத் தனிவழி’ என்ற பழமொழி கூட அந்த மைனாரிட்டி மக்களைப் பார்க்கும் போது நினைவுக்கு வரும்.

ஆனால், இடஞ்சுழியாக நடைபயிற்சி செய்வதுதான் சரியாம்.

ஒலிம்பிக் ஓட்டப்போட்டிகளில் பார்த்திருப்பீர்கள். அங்கே ஓவல் என்ற நீள்வட்ட வடிவ ஓடுபாதையில் ஓடும் வீரர்கள், கடிகார சுற்றுக்கு எதிர்ச்சுற்றில் அதாவது இடஞ்சுழியாக ஓடுவதுதான் வழக்கம்.

வலஞ்சுழியாக ஓடுவது வழக்கம் இல்லை.

ஏன்? என்ன காரணம்?

ஒரு நூற்றாண்டுக்கு முன், அதாவது 1896-ம் ஆண்டு நடந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டியான ஏதென்ஸ் ஒலிம்பிக்கில்கூட ஓட்டவீரர்கள் அத்தனைப்பேரும் கடிகார சுற்றுத்திசையில் அதாவது வலஞ்சுழியாகத்தான் ஓடியிருக்கிறார்கள்.

அப்படி ஓடி முடித்தபிறகு பல வீரர்கள், ‘தலை கிறுகிறுன்னு வருதுங்க’ என்று முறைப்பாடு (புகார்) செய்திருக்கிறார்கள். சிலருக்கு உடல்வலி கூட ஏற்பட்டிருக்கிறது.

‘கடிகார சுற்றுத்திசையில் ஏதோ சிக்கல் இருக்கிறது’ என்று தடகள ஏற்பாட்டாளர்களுக்குப் புரிந்துபோக, அதன்பிறகு, 1913-ம் ஆண்டில் இருந்து ஓட்டப்போட்டிகள் வலஞ்சுழியில் இருந்து இடஞ்சுழிக்கு மாற்றப்பட்டு இருக்கின்றன.

அறிவியல் நோக்கில் பார்த்தால் மனித உடலின் ரத்த ஓட்டம் இடஞ்சுழியாகத்தான் சுற்றுகிறதாம். எலக்ட்ரான்கள் அணுவின் கருவை இடஞ்சுழியாகத்தான் சுற்றி வருகின்றனவாம்.

நிலவும்கூட கடிகார சுற்றுக்கு எதிர்ச்சுற்றில் சூரியனைச் சுற்றுகிறது. பூமியும் இதே ஸ்டைலில்தான் சூரியனைச் சுற்றுகிறது.

அவ்வளவு ஏன்? சூரியனும் நமது சூரிய குடும்பத்தைச் சேர்ந்த இதர கோள்களும் கூட, கேலக்சி எனப்படும் நமது விண்மீன் அண்டத்தின் நடுப்பகுதியை மையமாக வைத்து, இடஞ்சுழியாகத்தான் சுற்றி வருகின்றன.

இஸ்லாமியர்கள் கூட மெக்காவில் உள்ள காபாவை கடந்த 1,400 ஆண்டுகளாக கடிகார சுற்றுக்கு எதிர்த்திசையில் அதாவது இடஞ்சுழியாகத்தான் சுற்றிவருகிறார்கள்.

ஆகவே இயற்கையின் அடிப்படையான ஒரு தாளகதி (ரிதம்) கடிகார சுற்றுக்கு எதிர்திசைதான். அதனால்தான் ஒலிம்பிக் வீரர்களும், உலக தடகள ஓட்ட வீரர்களும் கடிகார சுற்றுக்கு எதிர்த்திசையில் ஓடுகிறார்கள்.

இனி பூங்காவில் நடைப்பயிற்சி போகும்போது நீங்கள் ‘இடதுசாரியா’, ‘வலதுசாரியா’ என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

– நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு 

You might also like