உலக நாடக தினத்தையொட்டி சென்னை அழ்வார்ப்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில், நாடகத் திருநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
‘தெருக்கூத்து முதல் நாடகம் வரை’ என்ற தலைப்பில் நிகழ்ந்த நாடக அரங்கேற்றம் கோமல் தியேட்டர் சார்பில் நிகழ்த்தப்பட்டது.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து வந்த அனைத்து நாடகக் குழுக்களும் ஒருங்கிணைந்து இந்த நாடக நிகழ்வை அரங்கேற்றியது அற்புதமான ஒன்றாக இருந்தது.
நாடகக் கலைஞர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் கோமல் தியேட்டரின் தலைவரான தாரிணி கோமல், இந்த நாடக நிகழ்வை அற்புதமாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தினார்.
கோமல் சுவாமிநாதனின் மகளான இவர், நாடகத்துறையில் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
தமிழ் நாடகத்தின் துவக்கப் புள்ளி தொடங்கி தற்போது நாடகம் அடைந்திருக்கும் நவீன வளர்ச்சி வரையிலான வரலாற்றுப் பதிவுகளை அந்தந்த காலகட்டச் சூழலுக்கு ஏற்ப, அந்த நாடகம் உருவாக்கப்பட்ட விதமும், அந்த நாடகத்தை உருவாக்கிய நாடகக் குழுவின் வரலாற்றையும் காலப் பகுப்பு முறையோடு வரிசைப்படுத்தி, வாய்ஸ் ஓவராகக் கொடுத்திருந்தார்கள்.
தமிழ் நாடக உலகின் தந்தையாகப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் துவங்கிய நாடகக் குழு முதல் சமீபத்திய குழு வரை எவரையும் விடாமல் காணொலி வாயிலாக புகழ் மாலை சூட்டி அறிமுகம் செய்தார்கள்.
அவ்வையாரின் “ஞானப்பழத்தைப் பிழிந்து…” என்ற பாடல் வரியுடன் துவங்கிய இந்தக் காணொளிக் காட்சிப் பதிவு தொடர்ந்து நாடக நிகழ்வு முடியும் வரை, ஒவ்வொரு ஜாம்பவான்களையும் அறிமுகம் செய்து வைத்து, அவர்களின் நாடகங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
முதலில், ‘நவராத்திரி’ படத்தில் சிவாஜி, சாவித்திரி நடித்த தெருக்கூத்து காட்சியின் பாடலை ஒலிக்கவிட்டு, அதற்கு அப்படியே நடித்துக் காட்டினார்கள் கோமல் குழுவினர். அரங்கம் முழுவதும் இருந்த மக்கள் திரள் அந்த நாடகத்தை அவ்வளவு ரசித்து ஆரவாரித்தது.
அதைத் தொடர்ந்து பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சங்கீத பைத்தியம்’ நாடகமும், பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், விடுதலைப் போராட்ட உணர்வை ஊட்டிய வாஞ்சிநாதன், வ.உ.சி போன்ற தலைவர்களை மையப்படுதிய நாடகமும் அடுத்தடுத்து நடத்தப்பட்டன.
தொடர்ந்து சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார், ராமன் எத்தனை ராமனடி, இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தும் விதமாக, மாலி எழுதிய நம்மவர்கள், சாணக்கிய சபதம், கே.பாலசந்தரின் மேஜர் சந்திரகாந்த், ஒய்.ஜி.மகேந்திரனின் ரகசியம் பரம ரகசியம்,
காத்தாடி ராமமூர்த்தியின் ஹனிமூன் கப்பிள்ஸ், கிரேசி மோகன் எழுதிய மாது பாலாஜியின் மீசையானாலும் மனைவி, எஸ்.வி.சேகரின் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி என பல நாடகங்களிலிருந்து முக்கியமான சில காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. ஒவ்வொரு நாடகமும் சுமார் ஐந்து நிமிடங்களுக்குள் நடித்துக் காட்டப்பட்டது.
ஒவ்வொரு நாடகத்திற்கு இடையிலும் நாடக ஜாம்பவான்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். எம்.கே.ராதாவின் தந்தையான எம்.கந்தசாமி, நவாப் ராஜமாணிக்கம், சாமிநாத சர்மா, விஸ்வநாத தாஸ்,
சக்தி கிருஷ்ணசாமி, பரீக்ஷா நாடகக் குழு ஞானி என நவீன காலம் வரை பலரின் நாடகப் பங்களிப்பு பற்றிய அற்புதமான அறிமுகங்கள் பார்வையாளர்களை மெய்மறந்து ரசிக்க வைத்தன.
நாடகத் துறையில் ஆண்கள் கோலோச்சிய காலத்தில், பெண்களை மட்டுமே வைத்து நாடகம் நடத்தி, மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்த கும்பகோணம் பாலாமணி அவர்களின் அளப்பறிய நாடகப் பங்களிப்பு குறித்தும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, டி.கே.எஸ் சகோதரர்கள் துவங்கி, பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி, பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,
நடிகவேள் எம்.ஆர். ராதா, என்.எஸ். கிருஷ்ணன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பூர்ணம் விஸ்வநாதன், வி.எஸ்.ராகவன், காத்தாடி ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், கிரேஸி மோகன், விசு, மௌலி, எஸ்.வி.சேகர் என்று நாடகத்தில் சாதித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர்களின் பட்டியல் சொல்லப்பட்ட போதெல்லாம் அரங்கம் ஆர்ப்பரித்தது.
‘டம்பாச்சாரி’ நாடகம் பார்க்கக் குவிந்த பொதுமக்களுக்காகவே சிறப்பு ரயில் விடப்பட்டது என்ற தகவல் பெரும் ஆச்சர்யத்தை கொடுத்தது.
ஒரு நாடகத்திற்காக முதியவர் வேடம் ஏற்கும்போது வார்த்தை உச்சரிப்பு மிகப்பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இரண்டு கடவாய்ப் பற்களையும் எடுத்துவிட்ட டி.கே.சண்முகத்தின் அர்ப்பணிப்புணர்வு உடலை ஒரு உலுக்கு உலுக்கியது.
நாடகத் தடைச் சட்டம் கொண்டுவந்தது, நடிப்பதற்கு முன்பு நாடகம் தணிக்கை செய்யப்பட்டது, தடையை மீறி நாடகம் நடித்துச் சிறை சென்றவர்கள் வரலாறு,
1945-ல் சிவாஜி நாடகத்தில் நடித்தபோது கணேசனாக இருந்த நடிகர் திலகத்திற்கு சிவாஜி என்ற அடைமொழியைக் கொடுத்த பெரியார் என ஒவ்வொன்றும் இன்றைய இளையதலைமுறை அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்.
அரங்கம் நிறைந்த நிகழ்வாக அமைந்த இந்த நாடக நிகழ்வு, மனம் நிறைந்த நிகழ்வாகவும் அமைந்ததை ஒவ்வொரு பார்வையாளரின் முகத்தில் தெரிந்துகொள்ள முடிந்தது.
– நா. மோகன்ராஜ்