தமிழகச் சட்டமன்றத்தில் மொழிப் பற்றி இவ்வளவு ஆழமான விவாதங்கள் நடந்திருக்கின்றன என்பது வியப்புதான்.
1968 ஜனவரி மாதம் 23-ம் தேதி. அறிஞர் அண்ணா அப்போதைய முதல்வர்.
தமிழகச் சட்டமன்றத்தில் மொழிப்பிரச்சினை பற்றிய விவாதம் நடக்கிறது. வெப்பம் தகித்த அந்த விவாதங்களிலிருந்து சில பகுதிகள்:
ஏ.பாலசுப்பிரமணியன் (மார்க்சிஸ்ட்): ஆங்கிலத்தை அகற்றி எல்லாத் துறைகளிலும் தமிழ் வந்துவிட வேண்டும். நீதி, நிர்வாகம், கல்வி என்ற மூன்று நாற்காலிகள் தான்.
அந்த மூன்று நாற்காலிகளிலும் தமிழை அமர்த்திட வேண்டும். இந்த மூன்று நாற்காலிகளிலும் தமிழைத் தவிர வேறு மொழிகள் உட்கார அனுமதிக்கக் கூடாது.
என். சங்கரய்யா : இன்று இந்தியாவிலுள்ள 14 மொழிகளும் ஆட்சி மொழிகள் ஆக வேண்டும்.
ம.பொ.சிவஞானம் : நான் முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இங்கே ஆங்கிலம் நீடிப்பதற்கு அவர்கள் இடம் கொடுக்கக் கூடாது.
ஐந்தாண்டுகளுக்குள் தமிழ் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இங்கே இடம் பெற வேண்டும்.
முதல்வர் அண்ணா : இந்தியாவின் தேசிய மொழிகள் அத்தனையும் ஆட்சி மொழிகளாக்கப்பட வேண்டும். அதுவரை ஆங்கிலம் என்பது மழை பெய்கிறபோது, குடை கிடைக்காவிட்டாலும், மேல் துணியால் போர்த்திக் கொள்வது போன்றதே..
அதே சமயம் பதினான்கு மொழிகளுக்காகவும் பாடுபட்டு அவற்றை வளரச்செய்து, திரு.பாலசுப்பிரமணியம், திரு.சங்கரய்யா சொன்னது போல இந்திய அரசு இந்திக்கு மட்டும் சலுகை காட்டுகிற அந்தத் திட்டத்தை மாற்றி எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் நிலைமை வரவேண்டும்’’ என்று சொன்ன அண்ணா இரு மொழித் திட்டத்திற்கான அரசாணை பிறப்பித்தபோது ஒரு தீர்மானத்தையும் கொண்டு வந்தார்.
“ஐந்தாண்டு காலத்திற்குள் தமிழே பயிற்று மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் அனைத்து மட்டத்திலும் நடைமுறைகளுக்குக் கொண்டு வரப்படும்’’
நன்றி : சு.வெங்கடேசன் எழுதிய ‘ஆட்சித்தமிழ்- ஓர் வரலாற்றுப் பார்வை’ நூலில் இருந்து ஒரு பகுதி.
– யூகி