அதிமுக – பாஜக கூட்டணி: ப்ளஸ் என்ன, மைனஸ் என்ன?

அதிமுகவும் பாஜகவும் மறுபடியும் கூட்டணி வைத்துக் கொள்ளுமா என்று அண்மைக்காலமாக புகைந்து கொண்டிருந்த கேள்விக்கு ஒரு வழியாக டெல்லி சந்திப்புக்குப் பிறகு மங்கலான முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் அமித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியும்.

சந்திப்பு நிகழ்ந்த அன்று இரவே தனது சமூகவலைதளப் பக்கத்தில், கூட்டணியின் எதிர்காலம் குறித்து கணித்து, அமித்ஷா சொன்னமாதிரியே டெல்லியிலிருந்து கிளம்பி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய கையோடு எடப்பாடி பழனிசாமி பேசும் குரலே, சற்றே எடப்பாடியின் குரல்தானா என்று சந்தேகிக்கும் அளவுக்கு டெல்லியின் குரலாக உருமாறி ஒலித்திருக்கிறது.

கூட்டணி என்றும் நிலைத்த ஒன்றல்ல என்கிற ஆதி காலத்து கவுண்டமணி டைப்பிலான வசனத்தை உதிர்த்து, பச்சைக் கொடி காட்டி சற்றே மலர்ந்த முகத்துடன் பரவசப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

இருக்காதா பின்னே.. மாநிலத் தலைவரான அண்ணாமலை கொங்கு பாதையைப் பார்த்தபடி ‘ரெட்’ சிக்னல் கொடுக்க, தேசிய பாஜக தலைவரோ ‘க்ரீன் கார்டே’ கொடுத்திருக்கிறபோது, எடப்பாடி குளிர்ந்து போய்விட மாட்டாரா என்ன?

அரசியல் ‘க்ளைமேட்’ தான் ஓரிரு நாட்களிலேயே எப்படியெல்லாம் ரசாயன மாற்றம் பெற்றுவிடுகிறது. 

அடுத்து இனிமேல் அண்ணாமலை மற்றும் தமிழிசை வகையறாக்களின் கீர்த்தனைகள் எப்படி எல்லாம் மாறப் போகிறதோ தெரியவில்லை.

சரி, இதெல்லாம் இருக்கட்டும். அப்படியே பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைந்தால், என்ன நடக்கும்?

முதற்கட்டமாக அதிமுகவிலேயே உள்ள சர்ச்சைக்குரிய பல தலைகளுக்கு பின்னால், தொங்கு சதையைப் போல தொங்கும் ஊழல் வழக்குகள் தூசித் தட்டி எழுப்பும் வேகத்தில், மூக்கில் உணர்விருக்கிற அதிமுக கோஷ்டி தலைவர்கள் ஒவ்வொருவரும் தும்மாமல், ஒரே அணியில் சேர்ந்தாக வேண்டும்.

மீறி, அடம்பிடிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு சிறைச்சாலைக்கு போகும் வழிகள் தெளிவாக அடையாளம் காட்டப்படும். 

பாஜக கையில், இதற்கான சூத்திரக் கயிறுகள் இருக்கும்போது அதிமுக கூட்டணித் தலைவர்கள் ஒன்று சேரலாம்.

ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சிதறிக்கிடக்கிற அதிமுக தொண்டர்கள் எந்த அளவுக்கு ஒன்று சேர்ந்து ஒரே பலமாக மாறுவார்கள் என்று தெரியாது.

அத்துடன் விஜயின் தவெக, பாமக இன்னும் உதிரியாய்ப் பிரிந்து கிடக்கிற கட்சிகள் உட்பட ஒன்றுசேர்ந்து கூட்டணியின் வாக்கு வங்கிக்கு வலு சேர்க்கலாம்.

புதிய தமிழகம், தேமுதிக இன்னும் சில கட்சிகள் இந்தக் கூட்டணியில் வந்து சேர்வது அப்போதைய சூழல் சார்ந்த ஒன்று.

ஆனால், இதில் முக்கியமான ஒரு விஷயம் பாஜக மற்றும் அதிமுக தலைமையிலான இந்தக் கூட்டணி தேர்தல் கூட்டணியாக மட்டுமல்லாமல், தேர்தலுக்குப் பிறகும் கூட்டணி ஆட்சி அமைக்கும் கூட்டணியாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. 

ஏற்கனவே, பாஜகவும், தவெகவும் இதே கூட்டணி ஆட்சி மந்திரத்தை அடிக்கடி ஒலித்திருக்கின்றன.

இதோடு, கூட்டணியில் யார் யார் பங்கேற்கிறார்களோ அவர்களின் பங்களிப்பிற்கு ஏற்ப கூட்டணி ஆட்சியிலும் அவர்களுக்கு பங்கு கிடைக்கும் என்பதை அறிவித்துவிட்டால் போதும், கூட்டணி அமைப்பது இன்னும் சற்றே சுலபமான வேலையாகிவிடலாம்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்து தாங்களும் இலாகா ஏற்கும் அமைச்சராக வேண்டும் என்பதில், எத்தனைக் கட்சிகளின் எவ்வளவு ஆண்டுகால கனவு. அதை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு உருவாகும்போது, அந்த வாய்ப்பை சாமானியமாக இந்தக் கட்சிகள் நழுவவிட்டு விடுமா என்ன?

இன்னொரு விசயம், தற்போது பாஜகவின் தேசியத் தலைவரின் அறிவிப்பு. திமுக சிறிது காலத்திற்கு முன்பு முதல் கையெழுத்துப் போடுவதாக சொன்ன மது ஒழிப்பு விசயத்தை தற்போது கையில் எடுத்திருக்கிறது.

இதுவே, கூட்டணியின் கோரிக்கையாகவும் செயல்பாடாகவும் அமைந்தால், ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானத்தைப் பெற்றுத் தரக்கூடிய மதுபான விற்பனையும் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையும் தடுக்கப்பட்டு போதையில்லா தமிழகம் என்கின்ற கருத்தியல் நடைமுறைப் படுத்தப்படும் பட்சத்தில், குடி போதையை விரும்பாத பெரும்பாலானோர் இதற்கு உடன்பட வாய்ப்பிருக்கிறது.

அதோடு, நிதிநிலை நெருக்கடி வந்தால், அதற்கேற்றபடியான செயல்திட்டத்தை மத்திய அரசும் ஒரு வேளை இணைந்து முன்னெடுக்கலாம். 

எப்படியோ பெண்கள் மத்தியில் பெருவாரியாக வரவேற்பு பெறும் செயல் திட்டங்களில் ஒன்றாக இது அமையலாம். 

தற்போது மாதிரி இல்லாமல், ஒரு வேளை மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால், மத்தியிலும் பாஜக ஆட்சி நீடிக்கும் பட்சத்தில், நிதி தருவதில் தற்போது நிலவும் சிக்கல்கள் எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பில்லை.

கூட்டணி ஆட்சி என்பதால், தனித்து ஒரு கட்சி மட்டும் பெரியண்ணன் மனோபாவத்தோடு ஆதிக்கம் செலுத்துவதும் ஊழல்களில் தனிப்பாதை போடுவதும் அவ்வளவு சுலபமாக அமையாது. 

இப்போது நிகழ்கிற மாதிரி அமலாக்கத்துறையின் சோதனைகள் திடீரென்று தீவிரமாவதும், போன வேகத்திலேயே பின்னடைவதும் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்றாக இருக்காது. 

தேசிய பாணியில் சொன்னால், எப்போதும் திராவிட மாடலையே 1967-லிருந்து பார்த்துப் பழகி அவற்றை துவைத்து காயப்போட்டுவிட்ட தமிழகத்துக் குடிமக்கள் கொஞ்சம் கண்ணேறி விழித்து 1967-க்கு முன்னிருந்த பார்வையையே சினிமாக்களில் திடீரென்று மின்னலடித்து கண் பார்வை போன மாதிரி அதிர்ஷ்டவசமாய் சில வேலைகள் கண்ணொளி கூட எதிர்பாராவிதமாய் வந்துவிடலாம். 

தற்போது, கார்ப்ரேட் யுகத்திலும் கலாச்சாரத்திலும் மூழ்கிக் கிடக்கும் கார்ப்ரேட் இளைஞர்கள், இளைஞிகள் ஹாய் என்று தேசிய மயமாய் கையசைக்கலாம்.

ஏற்கனவே, நெல்லிக்காய் மூட்டைகளைப் போல தமிழகம் முழுக்க வந்து குவிந்திருக்கிற வட இந்திய தொழிலாளர்களிடம் தேர்தல் நேரத்தில் உடைத்த சோடா போல், தேசிய உணர்வு பொங்கி பீறிட்டு சகட்டு மேனிக்கு வழிய நேரிடலாம்.

மும்மொழிக் கொள்கை என்ன.. அதற்கும் மேலான எம்மொழிக் கொள்கையும் வந்தால் எங்களுக்கென்ன என்று பலர் சப்ளாக்கட்டைகளுடன் பாடும் பஜனைகளை தமிழகத்திலேயே கேட்கும் வாய்ப்பு கிடைத்து அவரவர்கள் காதுகள் குறுகுறுத்துத் தீவிரமாகி நுனி கருகிக் கூடப் போகலாம். 

இப்படி எத்தனையோ ஆச்சரியங்களை எதோ நேஷனல் சர்க்கஸில் புகுந்த மாதிரி வாக்களார்கள் மலங்க மலங்க முழித்து தேசியப் பார்வை பார்க்க, இப்படி எல்லாம் வாய்ப்பு கிடைக்கும்போது வாக்காளப் பெருமக்களும் இதையெல்லாம் நழுவ விடுவார்களா என்ன? 

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இவர்களையெல்லாம் ஒருங்கிணைப்பது முக்கித் திணறும் பெருச்சாலிகளை ஒரு சணல் மூட்டையில் போட்டு அடைப்பது மாதிரி மிகவும் சிரமமான காரியம் தான். 

பல கட்சிகளின் கடந்த காலங்களை நினைவுபடுத்தியே அவற்றை எதிர்காலத்தில் கட்டாயமாக ஒன்றுபடுத்துவது நடக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கான தார்க் கோல் குச்சி பாஜகவிடம் இருக்கிறது.

திமுகவின் கடந்த கால ஆட்சியில் நடந்த தவறுகள், ரெய்டுகள், சட்டம் ஒழுங்கு மீறல்கள் என்று ஒவ்வொன்றுமே இனி பெரிது படுத்தப்படும். அதற்கேற்றபடி மீடியாக்களையும் வற்புறுத்தவும் வாய்ப்பிருக்கிறது. 

இப்போதைக்கு நிகழ்கால அரசியலை சற்றே கவனித்துப் பார்க்கிற ஒருவர் தலைசுற்றாமல் சொல்லக்கூடிய விசயம் இது ஒன்றுதான். “பந்தயம் துவங்கிவிட்டது, இனி இங்கு எப்படியும் நடக்கலாம்“.

– சங்கையா

You might also like