உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்!

உங்கள் மதிற்சுவருக்கு
அப்பால் இருக்கிற அழகுகளை
உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்;
அருகே சென்று
அவ்வழகின் உண்மைத் தன்மையை
பரிசோதிக்க எண்ணாதீர்கள்;
அது வானவில்லை
கையில் பிடித்துப் பார்ப்பது போன்றது;
நீங்கள் தூரத்திலிருந்து பார்த்த
சூரியகாந்தி வயலில்
கோடைப் பாம்பொன்று
நெளிந்து கொண்டிருக்கலாம்;
நீங்கள் தூரத்திலிருந்து பார்த்த
செம்பருத்தியின் நிழலில்
சருகுகள் கொட்டிக் கிடக்கலாம்;
நீங்கள் தூரத்திலுருந்து
மகிழ்ந்த நதிக்கரையில்
ஓர் இடுகாடு இருக்கலாம்;
நீங்கள் தூரத்திலிருந்து ரசித்த
மரத்தின் கிளையில்
ஓர் எலும்புக்கூடு தொங்கலாம்;
தூரத்துப் பசுமை
உங்கள் தோட்டத்துப் புல்லைவிட
உலர்ந்ததாக இருக்கலாம்;
இன்ஸ்டாவிலும் அப்படித்தான்
ஓர் அழகி தன் ரீல்ஸுக்கு
எதிர்பார்ப்பது ஒரு லைக்தான்
மதிற்சுவர் தாண்டுவதை அல்ல!
– கவிஞர் கரிகாலன்
#கவிஞர்_கரிகாலன் #kavignar_karikalan 
You might also like