டி.எஸ்.பாலையா: என்றுமே மகத்தான கலைஞன்தான்!

தமிழ் சினிமாவில் அந்த நடிகரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது, தமிழகத்து மிகசிறந்த நடிகர்கள் வரிசையில் அவருக்கு எந்நாளும் இடம் உண்டு, சிவாஜி கணேசனுக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் நிகரான இடம் அது.
அந்த அற்புத நடிகர் ராமசந்திரன் நடித்த முதல் படமான சதிலீலாவதியிலே நடித்தார், எம்.எஸ் சுப்புலட்சுமியுடன் மீரா படத்தில் நடித்தார்.
அதாவது 1940-களிலே அறிமுகம் ஆகியிருந்தார், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார். அவர்தான் திருநெல்வேலி சுப்பிரமணியன் பாலைய்யா. ஆம், நாகர்கோவில் – என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற பலரைக் கொடுத்தாலும் நெல்லைக் கொடுத்த கலைச்சொத்து டி.எஸ்.பாலையா.
நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் டி.எஸ்.பாலையா.
1940-களில் நடிக்க வந்து தடுமாறினாலும், 1950-க்கு பின் வெற்றிப் படிகளில் ஏறினார். வித்தியாசமான நடிப்பு அவருடையது. உணர்ச்சி வேகமோ, இல்லை ஆக்ரோஷமோ, சிவாஜி, எம்.ஆர்.ராதா போல இருக்காது. மாறாக உணர்வில் ஒன்றி, அமைதியாக, ஆனால் அழுத்தமாக பதியும் நடிப்பினைக் கொடுத்தார்.
பின்னாளைய மனோரமா, ரகுவரன் போன்றோர் அந்த ரகம். ஆழமான, ஆனால் அமைதியான நதி நடப்பது போன்ற நடிப்பு அது.
நடிகர்களில் முதலில் பகுத்தறிவு பேசியது அவர்தான். ‘வேலைக்காரி’ படத்தில் அவர் தொடங்கிய பகுத்தறிவுப் பாத்திரத்தை பின்பு யார் யாரெல்லாமோ பேசினார்கள்.
‘மதுரை வீரன்’ அவருக்கு தனி இடம் பெற்றுகொடுத்தது, “வெள்ளிகிழமை என தெரியாமல் வாளை உருவிவிட்டேன்” என்ற அவரின் வசனமும் அந்த உடல்மொழியும் கிளாசிக்.
தொடர்ந்து வெற்றிப் படிகளில் ஏறினார். நகைச்சுவையும் வில்லத்தனமும் ஒருசேர செய்யும் பாத்திரங்களில் அவரும் எம்.ஆர்.ராதாவும் பின்னி எடுத்தார்கள்.
எம்.ஆர்.ராதா எனும் ஜாம்பவான் முன் தன் அமைதியான நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் மூலம் தனித்து நின்றார் பாலையா.
அதன்பிறகு, பீம்சிங் படங்கள் பாலையாவுக்கு அழியா குணசித்திர வேடங்களைக் கொடுத்தன‌. ‘பாலும் பழமும்’, ‘பாகப் பிரிவினை’ போன்ற படங்களில் குடும்பப் பெரியவராக வந்து பண்பட்ட நடிப்பினைக் கொடுத்த பாலையா, அக்காலப் பெரிசுகளை கண்ணிலே காட்டி நின்றார்.
பாகப் பிரிவினையில் சொத்தினைப் பிரிக்கும் பொழுது அவர் கலங்கும் அந்தக் காட்சி பாசப் போராட்டத்தைக் கண்முன் கொண்டு வந்த ஒப்பற்றக் காட்சி.
தாய் தந்தையர் படத்தைக் காட்டி, பாலையா தம்பியிடம் பேசும் அந்தக் காட்சிக்குக் கலங்காதோர் இருக்கமுடியாது.
‘பாவ மன்னிப்பு’ அவரின் மறக்கமுடியா படங்களில் ஒன்று. சிறிய வேடமென்றாலும் தனித்து நின்றார்.
தனக்கு காமெடி அட்டகாசமாக வரும் என அவர்காட்டிய படம் ’காதலிக்க நேரமில்லை’.
நாகேஷூடன் அவர் இணைந்து செய்த அந்தக் காமெடி என்றுமே தமிழக சினிமாவில் நம்பர்-1. எந்தக் காமெடி காட்சியும் அதை நெருங்க முடியாது. அந்தப் படத்தை கவனித்தால் தெரியும். மிக நுண்ணிய காமெடிகளை எல்லாம் அசால்ட்டாக செய்திருப்பார்.
அசோக் என்பவன் பணக்காரனின் மகன் என்றதும் “அவரு அசோகரு” என குனியும் காட்சி ஒன்று போதும்.
‘தில்லானா மோகனம்பாள்’ படத்தின் தவில் வித்துவானை மறக்க முடியுமா? இல்லை ‘திருவிளையாடல்’ ஹேமநாத பாகவதரை மறக்க முடியுமா? நிச்சயம் அந்தக் காலங்கள் தமிழ் சினிமாவின் பொற்காலங்கள்.
சிவாஜி என்ற வைரம் இருந்தாலும், இதர முத்தும் பவளமும் வைடூரியமும் இன்னபிற ரத்தினங்களும் அழகாக ஜொலித்தன‌. அந்த வைடூரியத்தில் ஒருவர்தான் பாலையா.
அவரிடம் நாம் அதிசயித்தது ஒன்றுதான். டி.ஆர்.சுந்தரம் காலத்தில் நடிக்க வந்தவர், பீம்சிங் காலம், ஸ்ரீதர் காலம், அடுத்து பாலசந்தர் காலத்திலும் கலக்கினார்.
பாலையாவின் ஆகச்சிறந்த படங்கள் 1960-களில் வந்தன. ‘பாமா விஜயம்’ போன்ற படங்கள் அப்பொழுதுதான் வந்தன. மிகச் சிறந்த நடிப்பினை அதில் கொடுத்திருந்தார்.
பாலையாவை நாமெல்லாம் அதிகம் பார்த்தது முதிர்ந்த வேடங்களிலே. ஆனால், அவர் சிறு வயதிலேயே முதுமை பாத்திரம் ஏற்றிருந்தார். அவ்வகையில் ரங்கராவ் என்பவருக்கும் பாலையாவுக்கும் ஒரே ராசி.
பாலையா முதல் படத்தில் நடிக்கும்போது 25 வயது. 40 வயதில் 70, 80 வயதுக்கான கதாபாத்திரங்களை ஏற்றிருந்தார். இதனால் முதியவராகத் தெரிந்தார். அவரின் உடல்வாகும் குரலும் அதற்கு ஒத்துழைத்தன‌. அந்த அற்புத நடிகன் சாகும் பொழுது வயது 57.
முதியவராக நடித்தும் முதுமையை எட்டாமலே மறைந்தான் அந்தக் கலைஞன்.
வில்லத்தனம், கொடூரம், நயவஞ்சகம், நகைச்சுவை, பக்தி, பெருமிதம், பாசம், குடும்ப உணர்வு, கோபம், அழுகை, கண்ணீர் என எல்லா வேடத்திலும் மிக அழகான உடல்மொழியோடு நடித்த அந்த பாலையாவை மறக்க முடியாது.
எம்.ஜி.ஆரை ஆரம்ப காலத்தில் இருந்து அறிந்தவர் பாலையா. எம்ஜிஆர் சினிமாவின் முதல் படத்தில் நடித்ததிலிருந்து அவரின் எல்லாமும் பாலையா ஒருவருக்கே தெரியும்.
காங்கிரஸ் மேல் பற்று கொண்டிருந்த பாலையாவுக்கு ஒரு வருத்தம் இருந்தது. காமராஜர் தோற்றதை அவர் ரசிக்கவில்லை. காமராஜரைத் தோற்கடித்த திமுகவைச் சேர்ந்த அந்த சீனிவாசனிடமே கடுமையாகப் பேசியவர் பாலையா. இதெல்லாம் பாலையாவின் சினிமாவைத் தாண்டிய விஷயங்கள்.
என்.எஸ்.கிருஷ்ணன், கே.வி.மகாதேவன் இருவரும் நாகர்கோவில் அடையாளங்கள், அவர்களுக்கு இன்றும் சில நினைவுச் சின்னங்கள் உண்டு. சந்திரபாபு எனும் மகாக் கலைஞனுக்கு தூத்துகுடியில் சில நினைவுத் தூண்களாவது உண்டு.
ஆனால், நெல்லையில் பாலையாவுக்கு அப்படி ஏதுமில்லை. எவ்வாறாயினும் நெல்லையின் கலைமுத்து பாலையா என்பதில் மாற்றமில்லை. எல்லாத் தரப்பு ரசிகர்களுக்கும் அவரைப் பிடித்திருந்தது. இன்றும் அவரை மனமார ரசிப்பவர் உண்டு, எந்நாளும் உண்டு.
தனது மிகச் சிறப்பான நடிப்பாலும் உடல் மொழியாலும் மிக நுட்பமான வார்த்தைகளில் உணர்ச்சிகளைக் கொட்டிய மகா கலைஞன் பாலையா.
You might also like