ஓவியர், சிற்பி, வில் வித்தைப் பயிற்சியாளர், தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர், கராத்தே பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஷிஹான் ஹுசைனி பல திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.
விஜய்யின் ‘பத்ரி’ படம் ஹுசைனிக்கு தனித்த அடையாளத்தைக் கொடுத்தது. 2022-ல் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.
சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார்.
இந்த நிலையில், ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக நோயின் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்ததால், தான் உயிரிழந்த மூன்று நாட்களுக்கு பிறகு, தனது உடலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்ய விரும்புவதாக வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டார்.
இந்த நிலையில் தான், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஷிஹான் ஹூசைனி இன்று (25.03.2025) அதிகாலை உயிரிழந்தார்.
ஹூசைனியின் மறைவு, அவரிடம் பயிற்சி பெற்று வந்த மாணவர்களையும் அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், நடிகர் விஜய் ஆகியோருக்கும் தன் கடைசி கோரிக்கையை முகநூல் வழியாக பகிர்ந்திருந்தார்.
துணை முதலமைச்சருக்கு விடுத்த கோரிக்கையில், “தமிழக வில்வித்தை வீரர்கள் பயிற்சி பெற சொந்தமாக ஒரு மைதானம் இல்லை எனவும் கடந்த பல ஆண்டுகளாக, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் அவர்கள் பயிற்சி பெற்று வருவதால், வில்வித்தை வீரர்கள் தொடர்ந்து பயிற்சி பெற துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உதயநிதி ஸ்டாலினுக்கு நான் விடுக்கும் கடைசி கோரிக்கை” என்று தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார் ஷிஹான் ஹுசைனி.
கூடவே தமிழக வில்வித்தை வீரர்களுக்கு உதவ வேண்டும் என, தன் முன்னாள் சீடர்களான ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், நடிகர் விஜய்க்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மற்றவர்களுக்கு கோரிக்கை வைத்ததுடன் நிற்காமல், தன் சொத்துகளையும் வில்வித்தை வீரர்களுக்காக உயில் எழுதி வைத்துள்ளார் ஷிஹான் ஹுசைனி.
அந்த உயிலை நடைமுறைப்படுத்துவதற்கான குழுவையும் அமைத்திருந்தார்.
ஷிஹான் ஹுசைனியின் சிகிச்சைக்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 5 லட்ச ரூபாய் நிதியையும், தனது பிரிய சிஷ்யைகளான காம்னா மற்றும் மஹிமாவின் பயிற்சி செலவுகளுக்காக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெசண்ட் நகரில் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் என திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.