’தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை விடக் கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம்’ என்று திரைப்படங்களில், நாடகங்களில், பொதுமேடைகளில் கிண்டலடிக்கிற காலமொன்று உண்டு. அந்த அளவுக்குப் பலர் தங்களுக்குத் தெரிந்த தமிழ்நடையில் ‘கவிதை’ எழுதப் பிரியப்பட்டனர்.
அவர்களில் பலர் பருவ வயதில் தங்களைத் தொற்றிய ‘பிரியத்தால்’ கவிதை எழுத வந்தவர்கள் தான்.
நல்லதொரு சுற்றுலா தலத்தைக் காண வந்தவர்களாய் பலரும் கவிதையைக் கண்டுவிட்டுச் சென்றுவிட, மிகச்சிலர் மட்டும் அந்த இடத்தின் நினைவுகளைப் பதிய வைத்துக்கொண்டு கவிதை நிலத்திலேயே தங்கிவிடுகின்றனர்.
ஏற்கனவே கவிதை எழுதும் ஆவலோடு வந்து, அவ்விருப்பத்துக்கு ‘கும்பிடு’ போட்ட பலர் அக்கவிஞர்களின் ரசிகர்களாக மாறிவிடுவார்கள். காலம்காலமாக நிகழ்ந்துவரும் வழக்கம் இது.
ஆனால், இன்று சொற்பிழை இல்லாமல் தமிழ் எழுதுவதே பெரும்பாடு என்றாகிவிட்டது. தமிழ் என்றில்லை, ஆங்கிலத்திலும் கூடப் பிழையின்றி எழுத, பேச, உரையாடத் தெரிந்தவர்கள் சொற்பமாகி வருகின்றனர்.
வார்த்தைகளை வாசிக்கச் சோம்பல்பட்டு, காட்சிகளின் மயக்கத்தில் கிறங்கிக் கிடக்கின்றனர்.
மொபைல், இண்டர்நெட் உலகமும் அதற்குத் தக்க நொறுக்குத்தீனிகளைக் கொடுத்து, அவர்களுக்கான அமிர்தம் கிடைக்கவிடாமல் கெடுத்துக் கொண்டிருக்கிறது.
சங்ககாலம் தொடங்கி..!
ஆங்கிலம் உள்ளிட்ட இன்ன பிற உலக மொழிகளில் கவிதையின் பிறப்பு எப்போது நிகழ்ந்தது என்று வரையறை செய்து வைத்திருக்கின்றனர்.
தமிழில் அப்படிக் குறிப்பிட்ட காலத்தைக் காட்டுவது கடினம்.
ஏனென்றால், ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி’ என்ற சொற்பதம் நமக்கு வேறொன்றைக் கற்பித்திருக்கிறது.
நம்மவர்களின் தொன்மை எப்படிப்பட்டது என்பதனை இது விளக்கிவிடும். இதனை உச்சரிக்கும்போதே, நாவில் ஒரு நயம் தென்படும். அதுவே கவித்துவமானதுதான்.
கவிதை என்றால் என்ன? அதற்கு விளக்கம் சொல்வது கடினம். செய்யுள் வடிவத்தில் பல ஆண்டுகளாக ‘கவிதை’ நம்மோடு இருந்து வருகிறது.
தொல்காப்பியம், திருக்குறள் என்று ஆகப்பெரிய நூல்கள் தமிழில் படைக்கப்பட்டிருக்கின்றன.
புறவுலகில் நாம் காண்கிற பொருட்கள் சார்ந்து கவிதை படைப்பதே, அதனை எழுதிப் பழகுபவர்களின் தொடக்கமாக இருக்க முடியும்.
அது மெல்ல வளர்ந்து, வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களில் நாம் அடைகிற உணர்வெழுச்சியை, அதன்பின் நமக்குள் ஊற்றெடுக்கிற தெளிவை, அதன் வழியே நாம் கண்டடைய வேண்டிய வாழ்வின் அர்த்தத்தை நோக்கி பயணிக்கும்.
ஆக, புறவுலகில் இருந்து அகவுலகம் நோக்கிப் பயணிப்பதே கவிஞர்களின் வழக்கமாக இருக்க முடியும்.
ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட ‘திருக்குறள்’ உலகப்பொதுமறையாகப் போற்றப்படுகிறது.
எளிமையும் இனிமையும் இணைந்த படைப்பாக அது இருக்கிறது. வாழ்வின் பொருளைத் தேடுகிறவர்களுக்கான விளக்காக அது விளங்குகிறது.
அப்படியானால், அதற்கும் எத்தனை நூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புறவுலகம் பற்றிப் பாடுவதற்குத் தமிழுலகம் எத்தனித்திருக்கும்? தொல்லியல் நிபுணர்கள் உட்படப் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டிய கேள்வி இது.
கவிநயமாகச் சொற்களைக் கோர்த்துப் படைக்கும் படைப்புகளே, மண்ணில் புதைத்த பொக்கிஷமாய் எந்நாளும் உயிர்ப்போடு இருக்கும் என்று என்றோ ஒருநாள் நம்பத் தொடங்கியிருக்கின்றனர் நம் முன்னோர். அவர்கள் புதைத்து வைத்தது இன்றும் நமக்குப் பலன் தந்து கொண்டிருக்கிறது.
இப்படிப் பலவாறாகப் புகழைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு, நாளும் புதிய திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழ் மொழி.
எது கவிதை?
இதற்கு ரொம்பவே சீரிய நோக்கில் பதில் ஆராய்ந்தால், நமக்கு கிடைக்கும் பதில்கள் பல்கிப் பெருகி ஒருகட்டத்தில் அயர்ச்சியுற வைக்கும்.
செய்யுள், மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்று கவிதைகளில் வகை பிரித்து நமக்குப் புகட்டிக் கொண்டிருக்கின்றனர் கவிஞர்கள், ஆசிரியர்கள்.
அவர்கள் சொல்வதையும் மீறி, ‘இதுதான் கவிதை’ என்று நமக்குள் ஒரு புரிதல் வளர்ந்து நிற்கிறது.
எளிய வார்த்தைகளைச் சாவியாகக் கொண்டு, புதிய உலகத்திற்கான கதவுகளைத் திறப்பவையே ‘கவிதை’களாக இருக்க முடியும்.
ஏனென்றால், கவிதைகளில் நேரடியாகச் சொல்லப்படாதவற்றை நாம் உணர்வதே அவற்றின் வெற்றியாகக் கருத முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், ஒவ்வொரு கவிதையும் ‘ஆலமர வித்தாக’ இருக்க வேண்டும். அவை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நமது மனதில் விழுதுகளாகக் கீழிறங்கி வேர்விட வேண்டும்.
’கவிதையனுபவம்’ என்பது அற்புதமான வார்த்தைகளில் ஒன்று. கவியரங்கங்களில் ஒலிப்பது ஒருவகை கவிதை என்றால், பதிப்பில் இருப்பதை வாசிக்க வாசிக்க மனதில் இன்பம் ஊறுவது இன்னொரு வகை.
கவிதை என்பது மென்மொழியைக் கண்டது. ஆனால், அதன் வழியே கொடூரங்களை, அலங்கோலங்களை, அருவெருப்புகளை, அவற்றின் அடிப்படைத்தன்மையோடு சட்டென்று கடத்திவிட முடியும்.
இது போன்று ‘எது கவிதை’ என்ற கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதில்கள் இருக்கும். எண்ணத் தொடங்கினால் அவை கோடியையும் தாண்டும்.
அப்படிப்பட்ட கவிதையின் பெருமையைப் போற்றும் வகையில், 1999-ம் ஆண்டு ‘உலக கவிதை தினம்’ கொண்டாட முடிவு செய்தது ஐநாவின் ஒரு அங்கமாக விளங்கும் யுனெஸ்கோ.
’கவித்துவ வெளிப்பாட்டின் மூலமாக மொழியின் பன்முகத்தன்மையை ஆதரிப்பது மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள மொழிகளைக் கேட்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதே இத்தினத்தைக் கொண்டாடுவதற்கான நோக்கம்’ என்றும் அறிவித்தது.
அதையடுத்து, 2000-வது ஆண்டு முதல் ’உலக கவிதை தினம்’ கொண்டாடப்படுகிறது.
வரலாறு, கலாசாரம், பழக்கவழக்கங்கள் என்று இந்த உலகிலுள்ள மக்கள், மண், இயற்கை என்று அனைத்தையும் பதிவு செய்கிற கவிதையைக் கொண்டாடுவது அடுத்த தலைமுறைக்கு அதன் பலன்களைக் கிடைக்கச் செய்யும்.
கவிதையே தெரியுமா?!
2003-ம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தில் ‘கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி’ என்ற பாடல் உண்டு. அதனை எழுதியவர் கவிஞர் அறிவுமதி.
ஒரு திரையிசைப் பாடலே அழகான கவிதையாக இருக்க முடியும் என்பதற்குத் தமிழ் திரையுலகம் பல உதாரணங்களைப் படைத்திருக்கிறது.
அப்படிப்பட்ட திரையுலகில் ‘கவித சார்’ என்று கவிதை எழுதுவதை ‘காமெடி’யும் செய்திருக்கின்றனர்.
‘உன்னருகே நானிருந்தால்’ எனும் திரைப்படத்தில் இயக்குநராக வரும் விவேக்கிடம் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஒரு சாதாரண நபராக பார்த்திபன் பேசுகிற நகைச்சுவை காட்சி ரொம்பவே பிரபலம்.
நடிகை ரம்பாவின் தீவிர ரசிகராக, அவரது நன்மதிப்பைப் பெறும் நோக்கில் படப்பிடிப்புக்கு இடையூறுகள் செய்வதாக, அதில் சில காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
அதிலொரு காட்சியில்,
‘ஒரு
ஸ்வீட் ஸ்டாலே
பணியாரம்
சாப்பிடுகிறதே!’
என்று பார்த்திபன் பேசுகிற வசனம் அமைந்திருக்கும்.
அதனை பார்த்திபன் சொல்லத் தொடங்கும்போதே, ‘ஒண்ணுக்கு கீழே ஒண்ணா’ என்று விவேக் கேட்பார். அதற்கு, அவர் ‘அதுதானே சார் கவிதை’ என்பார்.
மேற்சொன்ன வசனத்தில் ‘அடடே ஆச்சர்யக்குறி’ என்ற வார்த்தைகளைச் சேர்க்கிறபோது இன்னும் சிரிப்பு பெருகும்.
இப்படிக் கவிதை எழுதும் விதத்தைக் கிண்டலடிக்கிற அளவுக்கு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அது குறித்த அபிப்ராயங்கள் பெருகியிருந்திருக்கின்றன.
இதே போன்றதொரு திரைப்படக் காட்சியை ‘கஸின்ஸ்’ (la cugina) என்ற இத்தாலியத் திரைப்படத்திலும் காண முடியும்.
ஆக, உலகம் முழுக்கக் கவிதை என்பது குறித்த கிண்டல்களில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அதுவே, கவிதை குறித்த புரிதலையும் அதனை வாசிக்கிற வழக்கம் மக்களிடையே இருந்ததையும் நமக்குக் காட்டுகிறது.
இசை, ஓவியம் போன்று செம்மையான கலை வடிவமாகவும் அது போற்றப்பட்டு வருவதை உணர வைக்கிறது.
வாருங்கள். நமக்கு விருப்பமான கவிதைகளை வாசிப்போம். கவிதைத்தனம் தென்படுகிற வார்த்தைகளைத் தேடிக் கண்டறிந்து, இதுவரை பேசா கணங்கள் குறித்து கவிதை பேசுவோம்..!
- மாபா