இன, நிற வேறுபாட்டைக் காரணம் காட்டி எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனை கீழ்த்தரமாக நினைப்பது தவறு. இப்படிக் கருதுவதற்கு எந்த விஞ்ஞானப்பூர்வமான காரணங்களும் இல்லை என்பதே உண்மை.
அப்படி இருக்கையில், இந்த உலகில் நிறத்தில் வேறுபாடு பார்ப்பது மனிதர்கள் மட்டுமே. இயற்கை எத்தனையோ விதமான நிறங்களில் காட்சி அளிக்கிறது.
அதனை நினைத்து நாம் ஒருபோதும் சிந்தித்தது இல்லை. ஆனால், ஏன் நாம் மனிதனின் நிறத்தை மட்டும் குறை சொல்கிறோம் என்பது புரியாத புதிர்.
வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய மனிதர்கள் மட்டுமே உலகில் கவர்ச்சிகரமானவர்கள், அழகானவர்கள், பிறரால் விரும்பக் கூடியவர்கள் என்று பலர் நினைக்கிறார்கள்.
இதனால் மற்றவர்களுக்கு அதாவது, கருப்பு நிறத்தில் உள்ளவர்களுக்கு அது அவர்களுடைய மனதை மிகவும் பாதிக்கிறது.
வெளியில் சொல்ல முடியாத வலிகள், கேலி கிண்டல்களுக்கு உள்ளாக்கப்படும்போது முழுமையாக உடைந்து விடுகிறார்கள். இதுதான் எதார்த்தம்.
வெளியில் என்னதான் மற்றவர்களோடு சிரித்து பேசினாலும் தாங்கள் கருப்பு நிறமாக இருக்கிறோமே என்பதை நினைத்து வருந்துகிறார்கள்.
அண்மையில் என்னுடைய சக மாணவி கல்லூரிக்கு வந்திருந்தாள். ஆனால், அவள் யாரிடமும் பேசவில்லை. மிகவும் அமைதியாக இருந்தாள்.
எல்லோரும் ஏன் இப்படி இருக்கிறாய்? என்ன நடந்தது? என்று கேட்டபோது அவள் முகத்தில் வானை முட்டும் அளவு சோகமும், கண்கள் முழுவதும் கண்ணீரும் நிரம்பி இருந்தது.
அமைதியாக இருந்து விட்டாள். பின்னர் எல்லோரும் ஆங்கில வகுப்புக்குச் சென்றோம். ஆசிரியர் பாடம் நடத்துகையில் அவளைப் படிக்கச் சொன்னார். ஆனால், அவள் மறுத்துவிட்டாள், ஆசிரியர் அமைதியாக இருந்தார்.
பாடவேளை முடிந்த பின்னர், தோழியைக் கூப்பிட்டு கேட்டபோது, மனதில் உள்ள தேக்கத்தைக் கொட்டித் தீர்த்தது மாதிரி கண்ணீர் கன்னம் வழியே பாய்ந்தோடியது.
அழுகைக்குப் பின்னர் மெல்ல பேச ஆரம்பித்தாள். தான் கருப்பு நிறமாக இருப்பதால், தன்னை எல்லோரும் ஒதுக்குவதாகவும் தன்னிடம் இயல்பாகப் பேசுவதில்லை என்றும் வருந்தினாள்.
சிலர் தன்னுடைய நிறத்தை கேலி செய்வதாகவும் தன்னுடைய நெருங்கிய உறவினர்களே தன்னுடைய வலியை உணர்ந்துகொள்ளாமல் இருப்பதால் அதிக வேதனையடைவதாகவும் தோழி நொந்துகொண்டாள்.
உள்ளுக்குள் குமைந்துகொண்டிருக்கும் இந்த வலி இன்று நேற்றல்ல, சிறு வயது முதலே அனுபவித்து வருவதாகவும், இதிலிருந்து மீள முயற்சி செய்தாலும் மற்றவர்களின் கேலியும் கிண்டலும் தன்னை மேலும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், நிறத்தில் கருப்பாக இருந்தாலும் களையான முகம்தான் அவளுக்கு.
ஆனால், என்ன சொல்லியும் அவளை சமாதானம் படுத்தமுடியவில்லை.
வலிக்கு ஆறுதல் சொல்ல முடியும். ஆனால், அந்த வலியை அனுபவிக்கும் மனிதனுக்கு மட்டுமே அதன் தாக்கம் தெரியும் என உணர்ந்து கொண்டேன்.
இந்த உலகில், நிற வேற்றுமை எப்போது மாறும் என்று தெரியவில்லை?
என்னதான் படித்தவர், வசதியானவர், திறமை வாய்ந்தவர் என்றிருந்தாலும் மனிதர்களைப் பற்றிய நிறமும் உடலமைப்பு குறித்த பார்வையும் நம் மனதில் உருவாக்கும் தோற்றத்தை மாற்றிகொள்ளாதவரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை என்பதே உண்மை.
– தனுஷா