மகிழ்ச்சி இங்கதான் இருக்கு…!

மார்ச் 20 – சர்வதேச மகிழ்ச்சி தினம்

மகிழ்ச்சி என்பது மனித உணர்வுகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. எந்நேரமும் இன்பமுற்று இருப்பதைவிட இந்த உலகில் வேறென்ன வரம் இருந்துவிடப் போகிறது.

அந்த வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இன்பம் தருவது எது’ என்று நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், ‘இதுதான் மகிழ்ச்சி’ என்று எதையும் நம்மால் வரையறுக்க முடிவதில்லை.

மகிழ்ச்சி எங்கே?

எது மகிழ்ச்சி? இயல்பைத் தொலைக்காமல், ஒவ்வொரு கணமும் முன்னேற்றத்தின் படிகளில் ஏறியவாறே, வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசித்து அனுபவிக்க முடிந்தால் அதுவே மகிழ்ச்சி.

ஒரு மனிதன் தன்னளவில் அந்த மகிழ்ச்சியை உணர வேண்டும். அந்த மகிழ்ச்சி அவரிடத்தில் மிகச்சரியாக வெளிப்பட வேண்டும்.

அவரைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியை உணர்ந்து வெளிப்படுத்துகிற வகையில் செயல்பட வேண்டும்.

’என்ன வாழ்க்கைடா இது’ என்று உற்சாகமாகச் சொல்லும்போது, அந்த மகிழ்ச்சி எதிரில் இருப்பவரையும் தொற்ற வாய்ப்புகள் அதிகம்.

அதுவே, ‘என்ன வாழ்க்கைடா இது’ என்று காற்று இறங்கிய பலூனாக சலித்துக் கொள்ளும்போது, அது சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் சோர்வடையச் செய்யும்.

அப்படியானால், ‘நேர்மறையாக எண்ணுவதும் செயல்படுவதும்தான் மகிழ்ச்சிக்கான அடிப்படையா?’ இந்தக் கேள்விக்கான பதிலை வரையறுப்பது கடினம்.

ஆனால், நேர்மறையாகச் சிந்திப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதும், மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நேர்மறையாகச் சிந்திப்பதும் காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது.

‘கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா’ என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடிப்பதைக் காட்டிலும், கோழியையும் முட்டையையும் பயன்படுத்தத் தயாராக இருப்பவர்களே இங்கு அதிகம்.

அப்படிப் பார்த்தால், நேர்மறைச் சிந்தனையையும் மகிழ்ச்சியான மனநிலையையும் நாடுவதே எளிதானதாக இருக்க முடியும்.

பெறும் வழிமுறை!

மகிழ்ச்சி என்பது இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தியுறும்போது கிடைக்கும். இல்லாதவற்றைக் கைக்கொள்ளத் தேவையான முயற்சிகளில் மகிழ்ச்சிகரமாக ஈடுபடத் துணை நிற்கும். வெற்றிகரமாக அந்த நிலையை அடைகிறபோது, இன்னும் அதிகமான மகிழ்ச்சி கிடைக்கும்.

ஒன்றிலிருந்து இரண்டு, நான்கு, எட்டு என்று அது பல்கிப் பெருகும்போது, இந்த உலகமே கண்களுக்கு அழகாகத் தெரியும்.

அதேநேரத்தில், இல்லாதவற்றை மட்டுமே எண்ணி அதிருப்தி அடைந்து கொண்டிருந்தால் என்ன நிகழும்? அப்போதும், அவற்றை கைக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். அதற்கான வேட்கை நம்முள் பெருகக்கூடும்.

ஆனால், அந்த செயல்முறையில் அமைதி இருக்காது. பயமும் பதற்றமும் இன்னபிற உணர்வுகளும் சேர்ந்து, அந்தச் செயல்பாட்டைக் குலைப்பதற்குத் தேவையான அத்தனை வாய்ப்புகளையும் வழியெங்கும் பரப்பி வைக்கும்.

இரண்டு வழிகளிலும் ஒருவர் நினைத்ததை அடையலாம். ஆனால், முதலாவது மிக மிக எளிமையானது. பொருள் உட்பட எதைத் தேடினாலும், வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து, லயித்துக் கடக்கச் செய்வது. இரண்டாவது மிகக் கடினமானது.

நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்து, அதிலிருக்கும் நல்லன கண்டு பெருமிதம் கொள்வது மிக முக்கியமானது.

இயல்புகளோடு ஏற்றுக்கொள்வது, மதிப்பிடுவது, பாராட்டிக் கொள்வது, நம்பிக்கையூட்டுவது, புதுப்பித்துக்கொள்வது, ஆற்றலூட்டிக் கொள்வது என்று ‘நமக்கு நாமே’ செயலாற்றிக்கொள்வதன் மூலமாக மகிழ்ச்சியைக் கண்டறிய முடியும்.

எந்தவொரு மாற்றத்தையும் நம்மில் இருந்து தொடங்கும்போது கிடைக்கும் விளைவுகள், மெல்லப் பிறரையும் தொற்றிப் பெரும்பயனாக மாறும். மாறாக, மற்றவர்கள் மீது திணிக்கும்போது அப்படிப்பட்ட விளைவுகள் நிச்சயம் கிடைப்பதில்லை.

பிறரிடத்தில் அன்பு செலுத்தும்போதும், அந்த பிரியத்துடன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போதும் மகிழ்ச்சி தானாகப் பிறக்கும். அது, நம் விருப்பங்களை அடையும்போது மனம் அடையும் உவகையை விடப் பல மடங்காக இருக்கும்.

இன்பம் யாவர்க்கும்..!

நமது உடலில் ஆக்சிடோசின், டோபமைன், செரடோனின், எண்டார்பின் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கும்போது மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். மனம், உடலின் ஆரோக்கியத்தைப் பேண இவையும் காரணிகளான உள்ளன.

உடற்பயிற்சி செய்வது, அடிக்கடி புன்னகைப்பது, சூரிய ஒளியில் நடமாடுவது, சரிவிகித உணவை உண்பது, தியானம் செய்வது, அன்பு பாராட்டுவது போன்றவற்றின் மூலமாக அந்த ஹார்மோன்களின் சுரப்பைத் தூண்டலாம்; அதன் வழியே இன்பத்தை எந்நாளும் சுரக்கச் செய்யலாம்.

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’, ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே’ என்று இவ்வுலக மக்கள் அனைவரும் இன்பமாக வாழ வேண்டும் என்று நினைத்த நிலம் இது. மண்ணில் அந்த எண்ணம் காலம்காலமாகப் படிந்து வேரூன்றிக் கிடக்கிறது.

அடுத்தவரிடம் அன்பு பாராட்டுகிற, உதவுகிற, இரக்கம் கொள்கிற, தம்மைப் போல அவரும் இன்பமுற இருக்க வேண்டுமென்கிற சிந்தனைதான் இந்த நிலத்தைப் பண்படுத்தி வந்திருக்கிறது.

ஆக, பிறருக்கு உதவும் மனம் இருந்தால், அதற்கேற்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால், மகிழ்ச்சிக்கான வித்து தானாக முளைக்கும்.

போலவே, நம்மைப் பெற்றவர்கள் முதல் நம்மில் மாற்றங்களை விதைத்த ஒவ்வொருவரையும் மனதாக நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்கும்போதும் தானாக மகிழ்ச்சி தொற்றும்.

அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடத்தில் நிறைவு காண்பது, சுற்றியுள்ள உறவுகளோடு இணக்கம் பாராட்டுவது, சமூகத்தில் மதிப்போடு உலா வருவது, பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல் மனவளத்திலும் முன்னேற்றம் காண்பது என்று மகிழ்ச்சியைப் பல அம்சங்கள் தந்து வருகின்றன.

‘படுத்தவுடன் தூக்கம் வந்துவிடுகிறது’ என்று சொல்ல முடிந்தால், அந்த நபர் மகிழ்ச்சியற்று இல்லை என்பதை உணரலாம். ஒரு நபர் எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதைச் சம்பந்தப்பட்டவரால் மட்டுமே உணர முடியும்.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதியன்று ‘சர்வதேச மகிழ்ச்சி தினத்தை’க் கொண்டாட வகை செய்தது ஐநா.

நாட்டின் மொத்த வருமான விகிதத்தை விட, மகிழ்ச்சி விகிதத்தைக் கணக்கிடுவதே சரியான வழிமுறையாக இருக்கும் என்று எழுபதுகளில் பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் அறிவித்தார்.

அதனைச் செயல்படுத்தும் முயற்சிகளில் வெற்றி கண்டார். அதன் எதிரொலிப்பாகவே, ‘மகிழ்ச்சி தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

மகிழ்ச்சிக்கான விளக்கங்கள், அளவுகோல்கள், அதனை அடைவதற்கான வழிகள், அதன் விளைவுகள் என்று எண்ணற்ற தலைப்புகளில் எத்தனையோ கருத்துகளை நாம் பெறலாம்.

ஆனால், ‘மகிழ்ச்சி எங்கு இருக்கிறது’ என்ற கேள்விக்கான பதிலை ஒவ்வொரு நொடியும் ‘இங்க இருக்கு’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறது நம் மனம். அந்த பாஷையைப் புரிந்துகொண்டு செயலாற்றினால் போதும். மகிழ்ச்சி என்றும் நம் வசம் இருக்கும்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like