நூல் அறிமுகம்:
பெண்களை அடிமைப்படுத்திக் கொள்வது என்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். சிலப்பதிகாரத்தில் கூட மாதவியை அப்படித்தான் கோவலன் கைக்கொண்டான். இப்பொழுதும் கூட அந்த பழக்கம் வேறுவிதமாக மாறிக் கொண்டிருக்கிறது.
அழகான இளம் பெண்களை, குழந்தைகளை எப்படியோ கவர்ந்து, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கவர்ந்து பாம்பே கல்கத்தா சிகப்பு விளக்குப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கவர்ந்து சென்று அடிமை கொள்வது வேறு. வறுமையின் காரணமாக தங்களைத் தாங்களே பெண்கள் விற்றுக்கொண்டு இருந்த அவலநிலை தமிழகத்தில் இருந்ததாக ஒரு கல்வெட்டில் கண்டு அதை சரித்திரப் புதினம் ஆக்கியிருக்கிறார் விக்கிரமன் அவர்கள்.
கடந்த காலத்தின் சமூக வாழ்க்கையை, நெறிமுறைகளை, ஆட்சி அமைப்பை, நிர்வாகத் திறனை, நிதிப் பங்கீட்டினை, நீதி பரிபாலனத்தை அறிய, சரித்திர நாவல், சரித்திர சிறுகதை, சரித்திரக் கட்டுரைகள் போன்ற படைப்புகள் தான் சரியான வாசலாகும்.
அந்தக் கால மனிதர்களை, அவர்களின் வாழ்வியலை, மக்களின் துயரை, அவர்தம் அவல நிலையை, மகிழ்வின் ஆர்ப்பரிப்பை, மாந்தர்களின் சந்தோஷ திருவிழாவினை வரலாற்றுப் புதினங்கள் மூலம் அறிய முடியும்.
எப்படி என்றால், பல சரித்திரக் கதாசிரியர்கள் எல்லாம் சரித்திரப் புதினம் எழுத முற்படுகிற பொழுது, அந்தக் கால மன்னர்களைச் சுற்றியே தங்கள் கதையினை – போக்கினைக் கொண்டு செலுத்துவார்கள்.
தங்களின் வசீகரமான, ஆற்றொழுக்கான நடையால் இதனை நகாசு செய்து தந்திருப்பார்கள். இது ஒரு தந்திரம்.
ஆனால், சரித்திரக் கதையின் பீஷ்மர் எனப்படும் விக்கிரமன் அவர்கள், தனது ஒவ்வொரு வரலாற்றுப் புதினத்திலும் மன்னரைச் சுற்றிய நிகழ்வுகளாக கதைக்களனைப் படைத்துத் தந்தாலும், அவரது எழுத்தின் வீரியமிக்க வீர நடையில் அந்த காலக்கட்டத்து மக்களின் அனைத்து வாழ்வியல் சம்பவங்களையும் நுணுகி நுணுகிப் பார்த்து, அதனையும் தனது வார்த்தைகளுக்கு ஊடாகப் பதிவு செய்திருப்பார். அதுதான் அவரது தனித்திறன்; தனித்தன்மை; தனிச் சிறப்பும்.
இந்த ‘மங்கலத் தேவன் மகள்’ நாவலிலும் அதனை அவர் செய்யத் தவறவே இல்லை!
குலோத்துங்கச் சோழன் காலத்து ஆட்சி மாண்பையும், அவரது காலக்கட்டத்தில் வறுமையின் காரணமாக பெண்கள் தங்களைத் தாங்களே விற்றுக்கொண்டு, தங்கள் இல்லாமையை இல்லாமல் ஆக்கிக்கொண்டதை விக்கிரமன் அவர்கள் விவரிக்கும்போது நமக்கு கண்ணீர் வருகிறது.
இந்த வரலாற்று நாவலில் கண் சிமிட்டுகிற பாத்திரங்களாக உலா வருகின்ற குலோத்துங்கச் சோழன், கோப்பெருஞ்சிங்கன், தெலுங்கு நாட்டு சிற்றரசன், குலோத்துங்கனின் மகள் அனைவரும் வாசிப்பவர்களை எல்லாம் நேசிக்க வைக்கின்றனர்.
வரலாற்று அடிப்படையில் சிறுகதைகளோ, நாவலோ எழுதும்போது, உண்மைச் சம்பவ அடிப்படை இருந்தால், கடந்த காலச் சமூக வாழ்க்கை, நெறிமுறை, ஆட்சி ஆகியவற்றை எளிதில் அறிய முடியும்.
வரலாற்றுக் கதைகளில் பெரும்பாலும் அரச குடும்பத்தவர்களின் சொந்த வாழ்க்கையே சித்தரிக்கப்படுகின்றன; அந்தப்புர மகளிர், பட்டத்தரசி, இளவரசர், இளவரசி, அவர்கள் இதயத்தில் பூத்துப் பொலிந்த காதல்; பகைவர் மீது போர், ஒற்றர்கள் சூழ்ச்சி – என்று மன்னர்களைச் சுற்றியே சம்பவங்கள் கற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த காலச் சம்பவங்களைக் கருவாகக் கொண்டு கற்பனையும் சேர்த்து நாவல் புனையும் போது அரசர்களைத் தவிர அவர் ஆட்சிக் காலத்து மக்கள் வாழ்ந்த நிலை; அவர்கள் உணர்ச்சிகள் இவற்றையும் கருத்தில் கொண்டு எழுதினால் தொன்று நிகழ்ந்தனவற்றைப் படிப்போர் அறிய உதவியாக இருக்கும்.
அந்த வகையில் விக்கிரமன் அவர்கள் எழுதும் வரலாற்றுப் புதினங்களில் நாட்டு மக்களையும் கதைப் பாத்திரங்களாகச் செய்து கதையில் அவர்களுக்கு முக்கிய இடம் அளிக்கத் தவறுவதில்லை.
வரலாற்று நாவல் எழுதச் சம்பவங்களைத் தேடிக் கல்வெட்டுகள், சாசனங்கள், ஆராய்ச்சியாளர் எழுதிய நூல்கள் இவற்றைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கல்வெட்டுச் செய்தி ஒன்று விக்கிரமன் அவர்கள் மனத்தை ஈர்த்தது.
குலோத்துங்க சோழ மன்னரது ஆட்சிக் காலத்தில் பெண்கள் வறுமை நிலையால் தம்மை விற்றுக் கொண்ட செய்தி காணப்பட்டது.
அந்த அரசரது முப்பதாம் ஆட்சி ஆண்டில் வயிராதராயர் என்ற தலைவரும் அவர் மனைவியும் அடிமைகள் பலரை உடையவராயிருந்தனர் என்ற செய்தியும் கல்வெட்டிலிருந்து அறிய முடிந்த செய்தி.
அவர் மனத்தில் பல ஆண்டுகளாக இந்தச் செய்தி ஊறிக் கிடந்து ‘மாலைமதி’ மாத வெளியீட்டில், சரித்திர நாவல் ‘அவனுக்கே அவள் இதயம்’ என்ற பெயரில் நூல் வடிவமாக வெளிவந்தது.
குலோத்துங்க சோழர், கோப்பெருஞ்சிங்கன், காஞ்சி மீது படையெடுத்த தெலுங்கு நாட்டுச் சிற்றரசன், குலோத்துங்கன் மகள் எல்லாரும் வரலாற்றுப் பாத்திரங்கள். வயிராதராயர் என்ற பெயர் கொண்ட தலைவரும் நிஜமே.
அடிமைகளாகத் தங்களைத் தாங்களே பெண்கள் வறுமை காரணமாக விற்றுக் கொண்ட செய்தியும் உண்மை.
பெண்கள் பெயர், அவர்களது கற்பனை. இந்த நான்கு கோட்டிற்குள் நிகழ்ந்த சம்பவங்கள் மட்டுமே கற்பனை இந்தக் கதை எழுதியிருக்கிறார் விக்கிரமன் அவர்கள்.
எடுத்தவுடன் ஒரே மூச்சில் படித்துவிட முடிகிற புத்தகம் இது. சுவை மிகுந்தது.
******
நூல்: மங்கலதேவன் மகள்
கலைமாமணி விக்கிரமன்
யாழினி பதிப்பகம்
விலை: ரூ. 50/-
பக்கங்கள்: 80
நன்றி: கருணா மூர்த்தி முகநூல் பதிவு