என்னுடைய முதல் ஆசிரியர் என் அம்மாதான்!

அ.மார்க்ஸின் பள்ளிப்பிராய அனுபவம்

“என்னுடைய முதல் ஆசிரியர் என் அம்மாதான். எல்லோருக்குமே முதல் ஆசிரியர், பெற்றோர்தான் என்கிற பொருளில் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு முதன்முதலில் ‘அனா ஆவன்னா…’ சொல்லிக் கொடுத்தது என் அம்மாதான்.

அனா, ஆவன்னா மட்டுமல்ல… ஐந்தாம் வகுப்பு வரை அம்மாதான் எனக்கு ஆசிரியர்.

என் வீடுதான் என் பள்ளிக்கூடம். சக மாணவர்கள் யாரும் கிடையாது. அப்போது நாங்கள் ஒரத்தநாடு தாலுகாவில் பாப்பாநாடு – மதுக்கூர் சாலையில் உள்ள குத்தகைக்காடு எனும் ஒரு குக்கிராமத்தில் வசித்து வந்தோம்.

அப்பா நாடுகடத்தப்பட்டு, கையில் பைசா இல்லாமல் ஒரு திருட்டுக் கப்பலில் வந்து சேர்ந்தபோது, வயதான பெற்றோரால் செய்ய முடிந்தது அவருக்கு ஒரு திருமணம் மட்டுந்தான்.

என் அம்மா, தந்தையை இழந்திருந்த ஓர் ஏழைப் பெண். தஞ்சாவூர் கான்வென்ட் ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.

வயது பதினைந்து அல்லது பதினாறு இருக்கலாம். திருமணம் முடிந்து அப்பா வறுமையுடன் போராடிக்கொண்டிருந்த காலத்தில் பிறந்த மூத்த பிள்ளை நான்.

அம்மாவுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் வெறும் 17 தான். அந்தக் குக்கிராமத்தில் மூன்று மைல் சுற்றளவில் எந்தப் பள்ளியும் இல்லை. பஸ் போக்குவரத்து, தார்ச்சாலை ஏதும் கிடையாது.

ஒரு சோடா கம்பெனி வைத்து வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருந்த அப்பாவுக்குச் சுமையாக நாடுகடத்தப்பட்டு வந்த இரண்டு இளைஞர்கள் வேறு. அப்பாவால் செய்ய முயன்றது ஒன்றுதான்.

தனது ஆசிரிய நண்பர்களிடமிருந்து ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து தருவார்.

அம்மா, சமைத்து ஓய்ந்த தருணங்களில் வீட்டிலேயே சொல்லித் தருவார். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தருவது என்ன சாதாரண காரியமா? பெரியவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது கூட எளிது.

பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி முக்கியம். குழந்தைகள் உளவியலை அவர் அறிந்திருக்க வேண்டும்.

எந்தப் பயிற்சியும் இல்லாத சின்னப் பெண் அம்மா. மாணவர்களுக்கு இருக்கும் பயமும் எனக்கு இருக்காது. என்னைப் பிடித்து உட்கார வைப்பதே சிரமம். தினசரி ஓர் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் பாடம் கேட்டால் பெருசு.

அப்பா ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அடுத்தடுத்த வகுப்புப் பாடப் புத்தகங்களை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுப்பார்.

எப்போதாவது அம்மா பாடம் சொல்லிக் கொடுக்கும்போது வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். வெறும் ஐந்தாவது படிப்புடன் குழந்தைத் தொழிலாளியாகக் கடல் கடந்துசென்ற அவர், பள்ளி செல்லாமலே கற்றது நிறைய.

தனது 25-ஆவது வயதில் மலேயாக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ‘ஜனநாயகம்’ எனும் இதழின் ஆசிரியராக இருந்தவர்.

தனது குறுகிய ஆயுளில் எனக்கு பாரதியையும், ஜெயகாந்தனையும், சரத் சந்திரரையும், மார்க்சையும், டால்ஸ்டாயையும் அறிமுகம் செய்து ஆளாக்கியவர்.

ஆனால், அவருக்கும் பாடம் சொல்லிக்கொடுக்கத் தெரியாது. அன்புமயமான அவர் ஐந்து நிமிடங்களில் ஆத்திரம் அடைவார். அடித்தும் விடுவார். அவர் அடிப்பாரே என்கிற அச்சத்திலேயே அவர் கேட்பதற்கு முன்னாலேயே எனக்கு எல்லாமும் மறந்துவிடும்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு காட்சி இன்னும் நினைவில்.

ஒரு மனப்பாடப் பாட்டு. ‘இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி..’ என்கிற ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ எனத் தொடங்கும் ஔவையின் பாடல்.

பாடலைச் சரியாக ஒப்புவித்து விட்டேன். “இரண்டு சாதிகள் என்னென்ன?” அப்பா கேட்கிறார். “ஆண், பெண்” என நான் பதில் சொல்கிறேன். அப்பா விளக்கிச் சொல்லிவிட்டு மீண்டும் கேட்கிறார்.

பயத்தில் மறுபடியும் மறுபடியும் “ஆண், பெண்” என்றே சொல்கிறேன். அப்பா என்னை அடித்த தருணங்கள் மிகச் சில. அதில் இதுவும் ஒன்று. அப்பாவை விரட்டிவிட்டு அம்மா என்னை அணைத்துச் சென்றார்.

எனக்கு ஒன்பது வயதாகும்போது நாங்கள் பாப்பாநாட்டுக்கு இடம்பெயர்ந்தோம். அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் என்னைச் சேர்த்தார் அப்பா. தனிப் பயிற்சியில் படித்ததாக ஓர் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் சான்றிதழ் பெற்றுக் கொடுத்தார்.

ஒரு நுழைவுத் தேர்வு வைத்து என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்தார்கள். ஒரு மாதம் கழித்து மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து கடிதம் வந்தது.

இரண்டு வயது குறைவாக உள்ளது எனவும், ஓராண்டுதான் ‘ரிலாக்ஸ்’ செய்ய முடியும் எனவும் சொல்லி விட்டார்கள். ஆக, ஒன்பது வயதில் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.

ப்ரீகேஜி, நர்சரி எல்லாம் சேர்த்தால் கிட்டத்தட்ட ஏழாண்டு பள்ளிக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றேன். நான் பள்ளிச் சீருடை அணிந்ததே கிடையாது.

இன்று வரை ‘ரைம்ஸ்’ சொல்லிப் பழக்கமில்லை. ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு எழுதியதும் இல்லை. இப்படிச் சொல்கிறேனே ஒழிய, அது ஒருவகையில் இழப்புதான். மனிதர்கள் சமூகப் பிராணிகள்.

பள்ளிகளில் சம வயதுடைய குழந்தைகளோடு பயில்வதும் வளர்வதும்தான் முழுமையான வளர்ச்சிக்கு வழிகோலும். அதேபோல ஒவ்வொரு வகுப்பிற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது என்பதைக் கடைபிடிப்பதும் முக்கியம்.

அவசரப்பட்டு அதிக வயது மாணவர்களுடன் சேர்ப்பது என்பதெல்லாம் நல்லதல்ல.

பள்ளியில் எனக்கு வாய்த்த அந்த முதல் ஆசிரியர் யோகநாத ராவ். அந்த ஆண்டு அவர் ஓய்வுபெற இருந்தார். பள்ளி அனுபவம் இல்லாத நான் அந்தச் சூழலில் அந்நியமாகாமல் இருந்ததில் அவரது பங்கு முக்கியமானது.

அப்போது எல்லா ஆசிரியர்களின் மேசை மீதும் பிரம்புகள் இருக்கும். யோகநாதராவின் மேசையைத் தவிர. பதிலாக, வண்ண சாக்பீஸ்களும் நிறைய பேனாக்களும் இருக்கும்.

எல்லோருடைய புத்தகங்களையும் நோட்டுக்களையும் வாங்கி அவரே ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகாகப் பெயர் எழுதிக் கொடுப்பார்.

சொந்தக் காசில் வாங்கி வந்த வண்ண சாக்பீஸ்களால் அவர் கரும்பலகையில் எழுதுவதைப் பார்க்கையிலேயே படிப்பில் ஆசை வரும்.

நான் முதன்முதலாக பெற்றோர் துணை இல்லாமல் சக மாணவர்களுடன் பஸ் ஏறி பக்கத்து ஊருக்குச் சென்றது அவரைப் பார்க்கத்தான்.

அவர் ஓய்வுபெற்ற சில மாதங்களுக்குப் பின் ஒரத்தநாடு சுண்ணாம்புக்காரத் தெருவில் இருந்த அவர் வீட்டுக்குச் சென்று நாங்கள் வாங்கிவந்த பழங்களை அவரிடம் கொடுத்தபோது ஈசிசேரில் சாய்ந்திருந்த அவர் துண்டை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ஒரத்தநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் நான் படித்தபோது பத்தாம் வகுப்பில் என்ஜினீயரிங் பாடம் தேர்வு செய்திருந்தேன்.

என்ஜினீயரிங்கிற்குப் பொறுப்பாக இருந்த ‘இன்ஸ்ட்ரக்டர்’ ‘ஜி.எஸ்.’ என மாணவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சம்பந்தம் சார் எல்.எம்.ஈ. படித்தவர். பயிற்சியாளர் என்பதாகத்தான் அவரது பதவிக்குப் பெயர்.

மற்ற பி.எட். படித்த ஆசிரியர்களுக்குச் சமமாக அவர் கருதப்படமாட்டார். தவிரவும் அவர் பண்டாரம் எனும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். உள்ளூர்க்காரரும் அல்லர். செம்பனார்கோவிலைச் சேர்ந்தவர். எனினும் பெரும்பாலான ஆசிரியர்கள் உள்ளூர் ஆதிக்க சாதியினர்.

சம்பந்தம் சார் என்ஜினீயரிங் பாடம் சொல்லிக்கொடுப்பதற்கு மட்டுமே கல்வித் தகுதி பெற்றிருந்தாலும் காம்போசிட் மேத்ஸ், ஆங்கில இலக்கணம் ஆகியவற்றைச் சொல்லித்தருவதில் தேர்ந்தவர்.

அவரிடம் பள்ளி இறுதித் தேர்வு மாணவர்கள் நிறைய டியூஷன் படிப்பார்கள். அதற்கு அவர் பெற்றுக்கொள்ளும் தொகை மிகக் குறைவு.

அதையும் கறாராகக் கேட்டு வாங்கமாட்டார். சார் நல்ல உயரம். சிவப்பு. எப்போதும் மடிப்பு கலையாத சட்டையை இன் பண்ணி இருப்பார்.

அத்தனை அழகு. மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததால் மற்ற ஆசிரியர்களுக்கு அவரைப் பிடிக்காது. நான் தினமும் பாப்பாநாட்டிலிருந்து பஸ்ஸில் செல்வேன்.

பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போது “கடைசி மூன்று மாதங்கள் ஒரத்தநாட்டிலேயே தங்கிப் படிக்கிறேன்” என்றேன். எங்கே தங்குவது? சார் வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம்.

சாருக்கு இரண்டு பிள்ளைகள். சார் மனைவியை நாங்கள் “அம்மா” என்றுதான் கூப்பிடுவோம். அவர் அதிகம் படிக்காதவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். ஏற்கெனவே மூன்று மாணவர்கள் அவர் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் பின்னாளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த பின்னையூர் சாமிநாதன்.

“நானும் தங்கிக் கொள்கிறேன்” என்றபோது சார் சற்றுத் தயங்கினார். “ஏற்கனவே எல்லோருக்கும் சமைப்பது அம்மாவுக்குக் கஷ்டமா இருக்குடா. ஒண்ணு செய். நீ மட்டும் ஓட்டலில் சாப்பிடு. வீட்டில் தங்கிக்கொள்” என்றார். “சரி” என்றேன்.

ரத்னா டாக்கீஸ் அருகில் வீடு. தினமும் காலை, மாலை டியூஷன். காலையில் சீக்கிரமாக எழுப்பிவிடுவார். போய், ஏரியில் குளித்து வருவோம். சாப்பிடும்போது மட்டும் நான் வெளியே ஓட்டலுக்குப் போய் விடுவேன். எனக்கு ஓட்டல் சாப்பாடு பிடிக்காது. கொஞ்சம்தான் சாப்பிடுவேன்.

ஒரு சைவச் சாப்பாட்டின் விலை அப்போது 50 காசு. ஒரு நாள் இரவு. எல்லோரையும் சாப்பிடக் கூப்பிட்டார் அம்மா. நான் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டேன்.

எதிரே வந்த சம்பந்தம் சார் சிரித்தார். “என்னடா! சாப்பிடப் போறியா?…” “ம்…?” “என்னடா சாப்பிடுவே நீ?” “ம்…” “சரி வா… இன்னிக்கு எங்களோட சாப்பிடலாம்” தயங்கிய என்னை தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றார்.

சாமிநாதன், தாமஸ், சார் பையன் மனோகர் எல்லோரும் உட்கார்ந்திருந்தனர். சார் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார். அம்மா அவசரமாக ஒரு தட்டை வைத்து எனக்கும் சோறு போட்டு குழம்பு ஊற்றினார்கள்.

எல்லோருடைய தட்டிலும் அவித்த முட்டை இருந்தது. நான் திடீர் விருந்தாளி. என்னை எதிர்பார்க்கவில்லை. அம்மா ஒரு கணம் திகைத்தார்கள்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த சம்பந்தம் சார், தன் தட்டிலிருந்த முட்டையை எடுத்து என் தட்டில் வைத்தார். “சாப்பிடுடா” என்றார். அந்த முட்டையின் வாசம் இன்னும் என் நாசியில்…

மணா எழுதிய ‘பள்ளிப் பிராயம்’ நூலிலிருந்து…

You might also like