வழிந்தோடும் அளவுக்கு வேலை: ஜப்பானிய காண் – பான் முறை!

ஸ்ரீதரன் மதுசூதனன்

சமீபத்தில் படித்த ஒரு விஷயம் பிடித்திருந்தது: வழிந்தோடும் அளவுக்கு வேலையை எடுத்துக்கொண்டால் போதும்.

‘தனிநபர் காண்-பான்’ [Personal Kanban] என்னும் புத்தகத்தில் இருந்தது. ஜிம் பென்சன், டோனியன் பாரி எழுதி 2011இல் வந்த புத்தகம்.

காண்-பான் என்பது தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு ஜப்பானிய முறை. தனிநபர்களும் தங்கள் வேலைகளை நிர்வகிக்க பயன்படுத்தலாம்.

‘வழிந்தோடும் அளவுக்கு வேலை’ என்பது எளிமையானது, ஆனால், ஆழ்ந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. நம் வேலைச் சுமையை நம் திறன் அல்லது நேரம் தீர்மானிக்கக்கூடாது. நீரோட்டம் போல, வேலை வழிந்தோடும் நிலை தான் தீர்மானிக்க வேண்டும்.

சாலைப் போக்குவரத்தில் இது இன்னும் தெளிவாகத் தெரியும். வியர்வை கொட்டும் காலை நேர நெரிசலில் எந்த ஊரிலும் நாம் இதைப் பார்க்கலாம்.

அனைத்து வாகனங்களும் விதிகளைப் பின்பற்றினாலும், நாம் சாலையின் திறன் அளவுக்கு வாகனங்களால் பாதையை நிரப்பிவிடுவதால், போக்குவரத்து வழிந்தோடாமல் நெரிசல் ஏற்படுகிறது.

இதைத்தான் ‘தனிநபர் காண்-பான்’ சொல்கிறது. செய்யும் வேலையின் அளவை (Work in Progress – WIP) உங்கள் நேரத்தைக்கொண்டு தீர்மானிக்காதீர்கள்.

வழிந்தோட இடம் இருக்கும் அளவுக்குக் குறைவாகவே எடுங்கள். எத்தனை வேலைகளைத் தொடுகிறீர்கள் என்பது இல்லை; எத்தனை வேலைகளை முடிக்கிறீர்கள் என்பதில் இருக்கிறது வெற்றியின் ரகசியம்.

இதில், புரியாமல்போகும் சிக்கல் அதிகம் இல்லை. ஆனால், மனிதரின் கர்வம், குறைவான வேலைகளைத் தொடுவதை ஒப்புக்கொள்ளாது.

இன்னும் அதிகம் இருக்கட்டும், சமாளித்துவிடுவோம் என்று சவால் விட்டுக்கொள்ளும்.

ஆகவே, நாம் எடுத்த வேலைகள் வழிந்தோடி முடிவதைத்தான் உற்றுக் கவனிக்க வேண்டும். எப்போதும், எப்போதும்.

நன்றி: பேஸ்புக் பதிவு

You might also like