அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம்!

டாக்டர் க. பழனித்துரை

சென்ற நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஒரு இளைஞர் குழு சென்னையில் நடந்த மாணவர் கருத்தரங்கில் பேச என்னை அழைத்திருந்தனர்.

நான் அங்கு சென்றவுடன், “நாங்கள் பேசுவோம் அதன் பின் நாங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்து உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்” எனக் கேட்டுக் கொண்டனர்.

அவர்கள் அந்த அரங்கில் கேட்ட கேள்விகளில் ஒன்று “நான் 17 வயது அடையும் வரை உனக்கு அரசியல் தேவை இல்லை, படித்து பிழைப்பைப் பார் என்று அனைவரும் கூறினர். 18 வயது நிரம்பியவுடன், நீ ஒரு வாக்காளன். உன் கடமையை வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்து நிறைவேற்று” என்கிறார்கள்.

வாக்கு என்றால் என்ன? எதற்காக நான் வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எந்த அடிப்படையில், வாக்களிக்க வேண்டும்? என்பதை எப்படி முடிவு செய்ய வேண்டும் என்பதற்கான எந்தப் புரிதலும் அற்று நான் வாக்குச்சாவடிக்குச் செல்கிறேன். இந்த அவல நிலையைப் போக்க என்ன வழி” என்ற கேள்வியை முன் வைத்தனர்.

“நம் நாட்டின் மக்களாட்சி வாக்கு என்ற ஒற்றைப் புள்ளியில் நகர்கிறது, அந்த வாக்கு என்ற அதிகாரத்தை வாங்குகின்றவரை வாக்காளன் மதிப்புமிக்கவன். அந்த வாக்கைச் செலுத்திய பின் ஐந்து ஆண்டும் அவன் அரசாங்கத்திற்கு ஒரு பயனாளி.

அந்த வாக்கினைச் செலுத்தும் மனிதர் ஒரு குடிமகள் அல்லது குடிமகன் என்ற உணர்வோ சிந்தனையோ நம் அரசியல்வாதிகளுக்கும் இல்லை, வாக்காளருக்கும் இல்லை. அந்த வாக்கைச் சுற்றித்தான் இந்திய அரசியல் கடந்த 77 ஆண்டு காலமும் நடைபெற்று வருகிறது.

எனவே நம் மக்களாட்சியை இந்த வாக்கு அரசியலுக்கு மேல் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பது பற்றிய ஒரு விளக்கம் தரமுடியுமா?” என்றும் கேட்டனர்.

“அரசியல் உண்மையற்று, நியாயம் அற்று, சித்தாந்தம் அற்று, அறமற்று, அதிகாரத்தைப் பிடித்து வலுத்தவன் வளர ஒரு வன்முறை அரசியல் ஊழலின் மேட்டின் மீது நின்று நடத்தப்படும் போது,

ஒரு குடிமகன் என்பவன் அந்தச் சூழலில் எப்படி வாக்காளனாக, நியாயமாக, நேர்மையாக, நாட்டுச் சிந்தனை கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதனையும் எங்களுக்கு விளக்க வேண்டும்” என்றனர்.

அதற்குப் பதிலளிக்கும்போது “மக்களாட்சி என்பது குடிமக்களுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு. அதை முறையாகப் பயன்படுத்த நாம் எடுக்க வேண்டிய ஆயுதம் நாம் நமக்காக உருவாக்கி வைத்திருக்கின்ற அரசமைப்புச் சாசனம். அது மக்கள் சாசனம். ஆனால், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை”. 

“அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் விடுதலை அடைந்தவுடன், விடுதலைக்கான ஓர் உளவியலை மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்க வேண்டும்.

சுதந்திரம் அடைந்த நாட்டில் மக்களாட்சி நடைபெறும்போது அதில் குடிமக்களாகிய நாம் என்ன பங்களிப்பினைச் செய்ய வேண்டும் என்ற புரிதலை உருவாக்கும் ஒரு அறிவியல் பூர்வமான பணி ஒன்று உள்ளது. அது செய்யப்படவில்லை.

அதை இன்றாவது பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் செய்ய வேண்டும். அது ஒரு மக்கள் இயக்கச் செயல்பாடாக நடைபெற வேண்டும்” எனக் கூறினேன்.

“நாடு சுதந்திரம் அடைந்தவுடன் காந்தியவாதிகளுக்கு காந்தி ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் மக்கள் கல்வி இயக்கம் (People Education Council of India) என்ற ஒன்றை ஆரம்பித்தனர்.

அதில் சுதந்திரம் அடைந்த நாட்டில் மக்கள் பொறுப்புமிக்க, அதிகாரம் மிக்க, உரிமைகள் பெற்ற குடிமக்களாக ஆகிவிட்டனர்.

அதற்கான அறிவையும், புரிதலையும், தெளிவையும் ஏற்படுத்தத்தான் அந்த மக்கள் கல்வி இயக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால், அது இயக்கமாக நடைபெறாமல் காந்தியின் மறைவிற்குப் பிறகு மங்கிவிட்டது.

அதை முன்னெடுக்க இன்று ஒரு புது இயக்கம் காணவேண்டும்” எனக் கூறி என் விளக்க உரையை நிறைவு செய்தேன்.

இந்தப் பின்னணியில் இந்தப் பணியைச் செய்ய “குடிமக்கள் தயாரிப்பு” என்ற நூலை உருவாக்கி வெளியிட்டேன்.

அதில் மிக முக்கியமாக நம் அரசமைப்புச் சாசனத்தை எப்படி மக்கள் சாசனமாக மாற்றி மக்கள் அறிவார்ந்த அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளைச் செய்வது என்பதையும் விளக்கியிருந்தேன்.

காரணம் அரசமைப்புச் சாசனம் என்பது மிகப் பெரிய ஆயுதம். மக்களுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், குடிமக்களாக தங்களை வளர்த்துக் கொள்வதற்கும் என்பதால்.

அதைப் பரிட்சார்த்தமாக ஒரு இடத்தில் நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று ஒரு கிராமப் பஞ்சாயத்தில் 2024ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஒரு நிகழ்வை நடத்தினோம்.

‘அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக மாற்றுவோம்’ என்ற தலைப்பில் கிராமப் பெண்களிடம் விவாதித்தோம்.

அதில் நாம் விவாதித்தது அரசமைப்புச் சாசனத்தின் முகவுரையைத்தான். அந்த பஞ்சாயத்தில் கிடைத்த அனுபவத்தை வைத்து தமிழக கிராமங்களிலும், நகரங்களிலும் முன்னெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

அந்த நேரத்தில்தான் “வாண்டுகள் பயணம்” என்ற பயிற்சிக் கையேட்டை என்னிடம் தந்தார் என் நண்பர் ஒருவர்.

அதைப் படித்தபோது நாம் செய்ய வேண்டிய வேலையை இன்னொரு பெரிய பட்டாளமே செய்து கொண்டிருந்ததை உணர முடிந்தது.

அது மட்டுமல்ல அந்த முன்னெடுப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த என்னை இந்தப் பயிற்சிக் கையேட்டை வெளியிடும் விழாவில் பங்கேற்க அழைத்தனர்.

அந்த விழாவில் உயர்மன்ற நீதிபதி ஒருவரும் வந்திருந்தார். அந்த விழாவில் “வாண்டுகள் பயணம்” என்ற பயிற்சி நூலை வெளியிட்டுப் பேசினார். அப்பொழுது தன் உரையில் ஒரு கருத்தை முன் வைத்தார்.

அரசமைப்புச் சாசனம் மக்களுக்கானது. ஆனால் அது நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்குமானதாகவே வைத்துள்ளோம் என்பதைச் சுட்டிக்காட்டி இந்த சாசனத்தை பள்ளிக் குழந்தைகள் மட்டுமல்ல கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

அந்த பயிற்சிக் கையேட்டைப் பற்றி விளக்கியபோது, இது ஒரு எளிமையான, அனைவரும் ஆவலுடன் கற்றுக்கொள்ளக்கூடிய அளவில் வடிவமைத்து எளிமைப்படுத்தி உரிமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலை பள்ளிகளில் துடிப்புள்ள, ஆர்வமுள்ள மாணவர்கள் சிலரிடம் எப்படி உபயோகப்படுத்தி மனித உரிமைக் கல்வியை அனைவருக்கும் எடுத்துச் செல்லலாம் என்பதை விளக்கினாலே, அந்த மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இதனை எடுத்துச் சென்று விடுவார்கள் என்று கூறி, இதில் குடிமக்கள் கடமைகளையும் ஒரு பகுதியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தன் உரையை நிறைவு செய்தார்.

“இன்று நமது அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரையை மட்டுமே பொதுமக்களிடம் எடுத்துச் சென்றாலே மிகப்பெரிய மாற்றம் நம் சமூகத்தில் வந்துவிடும்.

ஒரு முகமதியர் வீட்டில் குரான் இருக்கிறது, மசூதியின் படம் இருக்கிறது, ஒரு இந்துவின் வீட்டில் அவர் வணங்கும் இந்துக் கடவுளின் படமும் பகவத்கீதையும் இருக்கிறது, ஒரு கிருத்துவர் வீட்டில் புதிய ஏற்பாடும் சிலுவையும் அவர்களது பூஜை அறையில் இருக்கிறது.

ஆனால், அதே அறையில் அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரை மட்டும் படமாக்கப்பட்டு வைப்போமேயானால் நாம் ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கின்றபோது நாம் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன, நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் என்னென்ன என்பது விளங்கும்.

அது மட்டுமல்ல நாம் எதைச் செய்யவில்லை, நமக்கு எது கிடைக்கவில்லை என்பதனையும் நாம் புரிந்து கொண்டு நம்மை நாம் குடிமக்களாக அறிவார்ந்து செயல்பட தயார்படுத்திக் கொள்ளலாம்.

இந்த முன்னெடுப்பை தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பள்ளிகள் வழியாகக் கொண்டு செல்ல முயற்சி எடுக்கும் வான் முகில் அமைப்புக்கும், அதில் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து சமூகச் செயல்பாட்டாளர்களுக்கும், களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் என்னுடைய பாராட்டைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்தேன். 

உரிமைகள் சார்ந்து சிந்திப்பதையும் செயல்படுவதையும் தன் உயிர் மூச்சாகவே கருதி செயல்படும் மிகப்பெரும் ஆளுமை கே.ஹென்றி திபேன்.

ஒட்டுமொத்த உரிமைக் கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளின் வரலாற்றை விளக்கி இந்தக் கல்வியை ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம சபைகள் மூலமும், நகரங்களுக்கு ஏரியா சபை மூலமும் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தை விளக்கினார். 

ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தினை வடிவமைக்க எடுத்த பெருமுயற்சிகள் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் விளக்கியதுடன், இந்தக் கல்வியை மேலும் எடுத்துச் செல்ல அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்பதை விளக்கினார் இந்த திட்டச் செயலாக்கப் பணிகளைச் செய்த ஒருங்கிணைப்பாளர் பிரிட்டோ.

அரசமைப்புச் சாசன உரிமைக்கல்வி என்று இந்தத் திட்டத்திற்கு பெயரிட்டு இருந்தாலும், இதில் கடமைகளும் கூறப்பட்டுள்ளன.

உரிமைகளுடன் சார்ந்த பொறுப்புக்கள் கடமைகள் பற்றியும் இந்தத் திட்டத்தில் வலுவாகச் சேர்த்து செயல்படுவோம் இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“மக்களாகிய நாம்” என்ற இரண்டு தொகுதி பயிற்சிக் கையேடுகளும் “வாண்டுகள் பயணம்” என்ற மூன்றாவது கையேடும் அடித்தளத்தில் மக்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது மிக எளிதாக யாரும் புரிந்து கொள்ளலாம் என்பதை பாராட்டுரையில் சோக்கோ அறக்கட்டளையின் பொறுப்பாளர் வழக்கறிஞர் செல்வக் கோமதி எடுத்துரைத்தார்.

You might also like