புரிந்துகொள்ளப்பட வேண்டிய இந்திய வரலாறு!

நூல் அறிமுகம்: அகம், புறம், அந்தப்புரம் (இந்திய சமஸ்தானங்களின் வரலாறு)

இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது.

மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம்.

ஹைதராபாத், பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர், புதுக்கோட்டை, பாட்டியாலா, நபா, கபுர்தலா, இந்தூர், ஜோத்பூர், தோல்பூர், பரத்பூர், அல்வார், பஹவல்பூர், ஜுனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.

அதனால்தான், யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

முகலாயர்கள், செங்கிஸ்கான், யூதர்கள் ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு இது.

சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள்.

சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமான ராஜா, ராணிகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்களே. அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் அப்படி சுவாரசியமானதாகத்தான் இருந்ததா?

இல்லவே இல்லை, கதைகளைவிட மகாராஜா, மகாராணிகளின் நிஜ வாழ்க்கை பல மடங்கு சுவாரசியமானவை என்று ஆதாரங்களுடன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.

ஒவ்வொரு சமஸ்தானத்துக்குப் பின்னும், ஒவ்வொரு மகாராஜாவின் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து கிடக்கும் தகவல்களை, நுணுக்கமான விஷயங்களை அழகாக ஒரு கதைபோலச் சொல்லிச் செல்கிறது – அகம், புறம், அந்தப்புரம்.

கோமான்களின் வாழ்க்கை, ஆடம்பரக் கோமாளிகளின் வாழ்க்கையை மட்டும் அலங்காரத்துடன் சொல்லாமல், காலத்துக்கும் குருதி சிந்தி உழைக்கும் குடிமக்களின் வாழ்க்கையையும் அதற்குரிய அவலத்துடன் பதிவு செய்திருப்பது இந்தப் புத்தகத்துக்குரிய சிறப்பு.

அரண்மனைக்குள்ளும் அந்தப்புரத்துக்குள்ளும் மட்டுமே சுற்றிவராமல், அதைத்தாண்டி வெளியில் பல அரிய வரலாறுகளையும், காலனியாதிக்க இந்தியா குறித்த சரித்திரத்தையும் ஒருங்கே சேர்த்துச் சொல்லும் இந்தப் புத்தகம், நிச்சயம் ஒரு வரலாற்றுப் பெட்டகம்.

இத்தனைப் பெரிய புத்தகமா, இதைப் படித்து முடிக்க இயலுமா என்ற மலைப்பு முதலில் தோன்றலாம். ஆனால், படிக்க ஆரம்பித்த பின், எந்தவொரு இடத்திலும் சலிப்போ, அலுப்போ தோன்றாமல், ஆசிரியரின் எழுத்துகள் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றன.

நவரச அனுபவங்களைத் தருகின்றன. எழுதும் விதத்தில் எழுதினால் சரித்திரத்தைவிட சுவாரசியமான விஷயம் எதுவுமே கிடையாது என்பதை இந்நூல் பறைசாற்றுகிறது.

புத்தகப் பிரியர்கள் ஒவ்வொருவருமே தங்கள் சேகரிப்பில் வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகங்களில் இந்த நூலும் ஒன்று.

ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் அவர்களது படைப்பில் மாஸ்டர் பீஸ் உண்டு. எழுத்தாளர் முகில் இதுவரை எழுதியுள்ள புத்தகங்களில், ‘அகம், புறம், அந்தப்புரம்’தான் அவருடைய மாஸ்டர் பீஸ்.

*****

நூல்: அகம், புறம், அந்தப்புரம் (இந்திய சமஸ்தானங்களின் வரலாறு)
ஆசிரியர்: முகில்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்: 1032
விலை: ₹ 2,222/-

You might also like