‘தியேட்டருக்குள் நுழைகையில் ஆயிரம் பிரச்சனைகள் மண்டைக்குள் உருண்டோடினாலும், வெளியே வரும்போது எல்லாமே மறந்துபோயிடும்’ என்று கியாரண்டி தரும் திரைப்படங்கள் மிக மிக அரிது!
1940-களில் சபாபதி தொடங்கி அறுபதுகளில் மிஸ்ஸியம்மா, சபாஷ் மீனா, பலே பாண்டியா என்று பல படங்கள் அதனை நிறைவேற்றி இருந்தாலும், ‘ரொமான்ஸ் காமெடி’ எனும் வகைப்பாட்டில் கனகச்சிதமான வடிவமாக விளங்குவது ‘காதலிக்க நேரமில்லை’ தான்.
ஒவ்வொரு முறையும் ரசிக்கத்தக்க காட்சியமைப்புகளுடனும் கமர்ஷியல் சினிமாவுக்கான கவர்ச்சியுடனும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு.
இப்போது வரை பல திரைப்படங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. அன்றைய தேதியில் மிக ஸ்டைலிஷாக உருவாக்கப்பட்ட ‘காதலிக்க நேரமில்லை’ (1964) இந்தக் கால இளையோராலும் கொண்டாடப்படுவதற்கு அதன் உள்ளடக்கமே காரணம்.
தமிழ்த் திரையுலகில் இயக்குனர்களுக்கென்று தனி அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்த ஸ்ரீதர் தன் வழக்கமான பாணியில் இருந்து மாறி முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கிய திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’.
நுழைவுச் சீட்டில் எழுதப்பட்ட கதை!
‘அந்த படத்தோட கதைய சொன்னாலே ஒரு மணி நேரம் ஆகுமே’ என்றிருந்த காலகட்டத்தில், தியேட்டர் கவுண்டரில் வாங்கிய டிக்கெட்டின் பின்பக்கத்தில் எழுதுமளவுக்கு மிகச்சுருக்கமான கதையைக் கொண்டிருந்தது ‘காதலிக்க நேரமில்லை’.
காதலியைத் திருமணம் செய்வதற்காக, நண்பனைத் தனது தந்தை வேடத்தில் நடிக்க வைத்து பெண்ணின் தந்தையை ஒருவர் ஏமாற்றுவதுதான் இப்படத்தின் கதை. கொஞ்சம் விரிவாகப் பார்த்தோமென்றால், கதாபாத்திரங்களின் பின்புலம் தெரியும்.
நீலகிரி சின்னமலையில் ஏலக்காய் எஸ்டேட் வைத்திருப்பவர் விஸ்வநாதன் (டி.எஸ்.பாலையா). இவருக்கு காஞ்சனா (காஞ்சனா), நிர்மலா (ராஜஸ்ரீ) என்று இரு மகள்கள், செல்லப்பா (நாகேஷ்) என்றொரு மகன்.
காஞ்சனாவும் நிர்மலாவும் மெட்ராஸில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கின்றனர். வாசு (முத்துராமன்) என்ற வாலிபரைக் காதலிக்கிறார் காஞ்சனா. இது நிர்மலாவுக்குத் தெரியாது.
சின்னமலையில் வாழும் செல்லப்பாவுக்கு சினிமா என்றால் உயிர். தானே கதை எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தைத் தனது தந்தை தயாரிப்பார் என்ற நப்பாசையில் இருக்கிறார்.
படிப்பு முடிந்து காஞ்சனாவும் நிர்மலாவும் சின்னமலைக்கு வருகின்றனர். வந்த இடத்தில், ஒரு வாலிபரோடு இருவருக்கும் மோதல் உருவாகிறது. அந்த வாலிபரின் பெயர் அசோக் (ரவிச்சந்திரன்).
ஒரு ஏழை ஆசிரியரின் மகனான அசோக், விஸ்வநாதன் எஸ்டேட்டில் மேனேஜராக பணியாற்றுகிறார். ஆனால், நிர்மலாவுடன் ஏற்பட்ட உரசலால் அவரது வேலை பறி போகிறது.
‘வேலை வேண்டும்’ என்ற கோஷத்துடன், விஸ்வநாதன் வீட்டுக்கு முன்பாகப் போராட்டம் நடத்துகிறார் அசோக்.
அப்போது, நிர்மலாவோடு ஏற்பட்ட மோதல் கனிந்து காதலாகிறது.
நிர்மலாவை கல்யாணம் செய்ய விரும்பும் அசோக், அதற்காகத் தனது நண்பன் வாசுவை சின்னமலைக்கு அழைக்கிறார்.
அவருக்கு வயதானவர் போல வேடமிட்டு, தனது தந்தை என்று விஸ்வநாதனிடம் அறிமுகப்படுத்துகிறார்.
விஸ்வநாதனை ஏமாற்றி நிர்மலாவை அசோக் திருமணம் செய்தாரா, வந்திருப்பது வாசு தான் என்று காஞ்சனாவுக்கு தெரிந்ததா, செல்லப்பாவின் சினிமா எடுக்கும் ஆசை என்னவானது,
வாசுவும் அசோக்கும் தன்னை ஏமாற்றுவதை விஸ்வநாதன் தெரிந்துகொண்டாரா என்ற கேள்விகளுக்குச் சிரிக்க சிரிக்கத் தன் திரைக்கதையில் பதிலளித்திருப்பார் ஸ்ரீதர்.
டி.எஸ்.பாலையா என்றொரு அசுரன்!
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலமாகத்தான் காஞ்சனாவும் ரவிச்சந்திரனும் திரையுலகில் அறிமுகமானார்கள். அந்த காலகட்டத்தில் முத்துராமனும் ராஜஸ்ரீயும் முன்னணி கலைஞர்களாகத் திகழ்ந்தனர்.
ஆனாலும், இப்படத்தின் உண்மையான நாயகனாக விளங்கியதென்னவோ டி.எஸ்.பாலையாதான்.
தமிழ் திரையுலகில் எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, ரங்காராவ், எஸ்.வி.சகஸ்ரநாமம் உட்படப் பலர் குணசித்திர வேடங்களில் அசத்திய சூழலில், ஒவ்வொரு படத்திலும் வேறுபட்ட உடல்மொழியோடும் தனித்துவமான இயல்போடும் நடித்தவர் பாலையா.
வில்லத்தனம், சோகம், எள்ளல் என்று எந்த உணர்வையும் மிகலாவகமாக வெளிப்படுத்தியவர்.
‘மிமிக்ரி’ செய்ய முடியாத அளவுக்கு அவரது பாணி அமைந்திருக்கும்.
செல்வச் செழிப்பினால் விளைந்த தெனாவெட்டு, அதேநேரத்தில் அறியாமையும் அப்பாவித்தனமும் கலந்த இயல்பு, இவை இரண்டுக்கும் நடுவே தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளிடம் அடங்கிப்போகும் பண்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ‘விஸ்வநாதன்’ பாத்திரத்துக்கு அசாத்தியமான வடிவம் தந்திருப்பார்.
என்னவென்று புரியாமல் திணறிவிட்டு, அருகிலுள்ளவர் சொன்னதும் ‘ஓ! அதுவா சரி சரி’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்வதுபோல பேசும் பாலையாவைப் பார்த்து சிரிக்காதவரே இருக்க முடியாது.
‘நீ போனா போராட்டம் வேற மாதிரி ஆயிடும், நானே போறேன்’ என்று ராஜஸ்ரீயிடம் சொல்லும்போதும் சரி, போனில் பேசிக் கொண்டிருக்கும் முத்துராமன் சிரித்ததும் பகபகவென்று சிரித்துவிட்டு ‘ஆமா எதுக்கு சிரிச்சீங்க’ என்று கேட்கும்போதும் சரி, எக்காலத்துக்குப் பொருந்திப்போகும் இயல்போடு இருக்கும் அவரது நடிப்பு.
‘அசோகரு உங்க மகருங்களா’ என்று கேட்பது, அப்பாத்திரம் எந்த அளவுக்கு திணறித் தவிக்கிறது என்பதை சட்டென்று சொல்லிவிடும்.
அதனாலோ என்னவோ, இந்த நடிப்பு அசுரனுக்கு டைட்டிலில் முதலிடம் தந்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர்.
இளமைத் துள்ளல்!
ஒரு இளம் நடிகரும் நடிகையும் அறிமுகமாகும்போது, அவர்களை ஜோடியாக காட்டுவதுதான் பெரும்பாலும் வழக்கம்.
‘காதலிக்க நேரமில்லை’யில் முத்துராமனோடு காஞ்சனாவை ஜோடி சேர்த்திருப்பார் ஸ்ரீதர். அப்போது, முன்னணியில் இருந்த ராஜஸ்ரீக்கு புதுமுகம் ரவிச்சந்திரனை நாயகனாக்கியிருப்பார்.
காரணம், ராஜஸ்ரீ ஏற்று நடித்த பாத்திரத்துக்குத்தான் திரைக்கதையில் காதல் காட்சிகள் அதிகம்.
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் சோகமே உருவானவராகக் காட்டிய ஸ்ரீதர், இப்படத்தில் முத்துராமனின் நடிப்பை நகைச்சுவையில் தோய்த்தெடுத்திருப்பார்.
எந்தப் படமானாலும் பாத்திரத்துக்கேற்ற பாந்தமான நடிப்பை வெளிப்படுத்துவது முத்துராமன் ஸ்டைல். தனியாகச் சுட்டிக்காட்ட மறந்துபோகும் அளவுக்கு, கதையோடும் கதாபாத்திரத்தோடும் பொருந்தியிருக்கும் அவரது நடிப்பு.
அவருக்கென்று தனித்த ரசிகர் வட்டம் இருந்தாலும், அது விரிவடையாமல் போனதற்கு அதிகளவில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததும் ஒரு காரணம்.
‘ஒரே படத்தில் ஓஹோவென்று புகழ்’ கனவுகளோடு திரியும் நடிப்புக் கலைஞர்களுக்கு, ‘காதலிக்க நேரமில்லை’யில் ரவிச்சந்திரன் ஏற்ற பாத்திரம் பொறாமையை உருவாக்கும்.
இயல்பாக இல்லாவிட்டாலும், இப்படத்தில் அவரது நடிப்பு அக்கால இளைஞர், இளைஞிகளால் கொண்டாடப்பட்டது.
மெலிதான நகைச்சுவை கலந்த காதல் படங்களில் நாயகியின் அழகும் கவர்ச்சியும் முக்கியப் பங்கு வகிக்கும்.
அதற்கேற்றாற்போல சிருங்காரம் ததும்பி வழியுமளவுக்கு ராஜஸ்ரீ வந்தார் என்றால், அதனைக் கொஞ்சமாகத் தன் பாத்திரத்தில் காஞ்சனா நிரப்பியிருந்தார் எனலாம்.
கோபப்படும் காட்சிகளிலும் கூட, கவர்ச்சி கண்ணைக் கவரும் அளவுக்கு இருவரும் நடமாடியிருப்பதைக் காண முடியும்.
வழக்கமாக ஸ்ரீதர் படங்களில் இருந்து வேறுபட்டு, இதில் காஞ்சனா, ராஜஸ்ரீ, ரவிச்சந்திரன் ஆகியோரிடம் மிகை நடிப்பைக் காணலாம்.
நகைச்சுவையை மேலும் அதிகப்படுத்த அது உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்படத்தில் சச்சுவின் அழகைப் பார்ப்பவர்கள், இவர் ஏன் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்காமல் போனார் என்று ஏங்குவார்கள்.
‘வீரத்திருமகன்’, ‘அன்னை’ படங்களில் நாயகியாக நடித்துவிட்டு, இப்படத்தில் நகைச்சுவை வேடமேற்றதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்.
பாலையாவுடன் வரும் காட்சிகளில் சிரிப்பு மூட்டும் வி.எஸ்.ராகவன், அவரது மனைவியாக வரும் ராதாபாய், ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’ புகழ் வீராசாமி ஆகியோரோடு சச்சுவின் தந்தையாக வரும் பிரபாகரும் இப்படத்தில் கலக்கியிருப்பார்.
மவுலி, கிரேஸி மோகன், ஒய்.ஜி.மகேந்திரனின் தொலைக்காட்சித் தொடர்கள் தவிர்த்து பெரியளவில் கவனம் பெறாமல் போனதற்கு இளமையிலேயே அவர் ஏற்று நடித்த வயதான பாத்திரங்களும் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும்.
இவர்கள் தவிர்த்து, இப்படத்தில் தனக்கான பங்கை உருவாக்கிக் கொண்டவர் நாகேஷ்.
சர்ர்ர்ர்ர்… காமெடி!
காதலிக்க நேரமில்லையின் அடையாளமாக விளங்குவது, நாகேஷ் பாலையாவிடம் தான் எடுக்கப்போகும் படத்தின் கதையைச் சொல்லும் காட்சி. ‘என்னது ஒரு பெண்ணு உள்ள கண்ணா’ என்று பாலையா அரண்டுபோவது காலத்தில் நிலை கொண்டுவிட்ட ஒரு திரை நகைச்சுவை.
இக்காட்சியில் நாகேஷ் சொல்லும் கதையைக் கேட்க பாலையா தயாராவதற்குள், முன்னவர் கதை சொல்லத் தொடங்கியிருப்பார்.
சருகுகள் நிரம்பிய இடத்தில் ஒரு காலடி படுவதை, ‘சர்ர்ர்ர்..’ என்று நாகேஷ் உச்சரிக்கும்போது, நகைச்சுவையையும் மீறி நம் மனதில் பயம் முளைக்கும்.
‘புதிய பறவை’, ‘ரத்தத் திலகம்’ உள்ளிட்ட பல ‘கிளாசிக்’ திரைப்படங்களைத் தந்த தாதா மிராசி, தனது படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு இப்படித்தான் கதை சொல்வாராம்.
‘புதிய பறவை’ கதையை சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் சொன்னதை, அவர் அப்படியே ஸ்ரீதரிடம் சொன்னாராம். அதையே தூண்டுதலாகக் கொண்டு இக்காட்சியை அமைத்திருந்தார் ஸ்ரீதர்.
போலவே, ‘பெட்ரோல் அலவன்ஸ் வாங்கிட்டு கம்பெனி கார்ல வரக்கூடாது’, ‘படத்துல பயன்படுத்துற காஸ்ட்யூமை வீட்டுக்கு எடுத்துட்டு போகக்கூடாது’, ‘ஏன் பரிதாபப்படுற, உன்னை கதாநாயகியா ஆக்குறேனே அதனாலயா’
என்பது உட்பட நாகேஷ் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் அக்காலத்திய சினிமா உலகோடு, சினிமா கனவுகளோடு திரிந்தவர்களின் வாழ்வோடு தொடர்புடையதாக அமைந்திருக்கும்.
உண்மையில், 1965-களில் நாகேஷ் கொடிகட்டிப் பறந்தார் என்றே சொல்லலாம். அந்த காலத்தில் வெளியான வெற்றிப் படங்களில் அவரது பங்களிப்பு கணிசமாக இருக்கும்.
முதன்முறையாக ஈஸ்ட்மென் வண்ணம்!
கருப்பு வெள்ளையில் இருந்து வண்ணத்துக்கு மாறினாலும், முழுக்க முழுக்க ஈஸ்ட்மென் வண்ணத்தில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’.
அதனை பார்வையாளர்கள் உணரும் வகையில் லொகேஷன்கள், செட் வடிவமைப்புகள், நடிப்புக் கலைஞர்களின் ஆடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
சித்ராலயாவின் லோகோ முதல் டைட்டில் காட்சியில் இடம்பெற்ற ஓவியங்களிலேயே இந்த அழகை உணரலாம். ஜெமினி ஸ்டூடியோ லேபரட்டரியில் இப்படத்தின் கலர் பிராசஸிங் நடந்துள்ளது.
காதலர்களின் அழகுபடுத்தல்கள், காத்திருத்தல், ஊர் சுற்றல், கடற்கரையில் பேசிக் கொண்டிருக்கும் காதலர்கள்,
அவர்களை நோக்கி வரும் சுண்டல் விற்கும் நபர் உட்பட டைட்டில் காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும்.
ஸ்ரீதரின் மெனக்கெடல்!
‘கல்யாண பரிசு’ தொடங்கி ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ வரையிலான ஸ்ரீதரின் படங்கள் செறிவான கதைப்போக்கைக் கொண்டிருந்தன. அவற்றில் இருந்து விலகி, மிக லேசான ஒரு கதைக் களத்தை ‘காதலிக்க நேரமில்லை’யில் தேர்ந்தெடுத்திருந்தார் ஸ்ரீதர்.
சிவாஜி, ஜெமினி என்று தான் முன்னர் பணியாற்றிய பிரபல நட்சத்திரங்களோடு கைகோர்க்காமல் முத்துராமனையும் ரவிச்சந்திரனையும் நாயகர்கள் ஆக்கினார்.
தான் ரசித்த ஹாலிவுட் சினிமா அம்சங்களைப் பொருத்த இடங்களில் புகுத்தி வெற்றி கண்டார்.
நகைச்சுவையையும் காதலையும் மையப்படுத்தி ஏற்கனவே ‘தேனிலவு’ படத்தை எடுத்திருந்தார் ஸ்ரீதர். அப்படம் பெருவெற்றி பெறாதபோதும், அந்த பார்முலா மீது அவர் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.
வழக்கத்திற்கு மாறாக, இப்படத்தில் பல காட்சிகளில் அரை நிமிடத்திற்கு மேலும் கேமிரா நகர்வு நீண்டிருப்பதைக் காணலாம்.
படிப்பு முடிந்து காஞ்சனாவும் ராஜஸ்ரீயும் தங்கள் வீட்டுக்கு வரும் காட்சியில், அந்த வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தைக் கார் வரும் ‘பாயிண்ட் ஆஃப் வியூ’வில் ஹேண்டியாக காட்டியிருப்பார்.
டூயட் பாடல்களிலும் மேலிருந்து கீழாக நகர ‘கிரேன்’ பயன்படுத்திய காட்சிகளிலும் கூட, கேமிரா நகர்வு நிலையாக அமைந்திருக்காது.
‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’ பாடலில் கேமிரா நோக்கி தண்ணீர் தெளிக்கப்படுவது, ராகவன் பாலையாவைச் சந்தித்துவிட்டு செல்லும்போது ரவிச்சந்திரனும் முத்துராமனும் ப்ளைமவுத் காரில் வருவது படமாக்கப்பட்ட விதம், இப்போதைய திரைக் கலைஞர்களே வியக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.
இந்த விஷயத்தில் ஒளிப்பதிவு இயக்குனர் ஏ.வின்சென்டும் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரமும் ஸ்ரீதருக்கு கைகொடுத்திருந்தனர்.
ஈஸ்ட்மென் வண்ணத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், கலை இயக்குனர் கங்காவின் வடிவமைப்பில் இப்படத்தின் செட்கள் வண்ணமயமாக இருக்கும்.
டெண்ட் துணியில் கட்டப்பட்ட சிறு துண்டு ஓவியம் கூட ஜன்னலின் பின்புறத்தில் தோட்டம் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது அருமை.
அதேநேரத்தில், நடிப்பவர்கள் அணிந்திருக்கும் அடர்நிற ஆடைகள் தனித்து தெரியும் வண்ணம் வீடுகளின் சுவர் மெந்நிறத்தில் அமைக்கப்பட்டிருப்பது ஸ்ரீதரின் மெனக்கெடலை காட்டுகிறது.
கோபுவுக்கு அங்கீகாரம்!
யதார்த்தமான வசனங்களுக்காகவும் கவனிக்கப்பட்டன ஸ்ரீதரின் படைப்புகள். இப்படத்தில் காஞ்சனா எனும் பெயரை, சகோதரி வேடத்தில் நடித்த ராஜஸ்ரீ ‘காஞ்சன்’ என்று செல்லமாக அழைப்பது அந்தக் காலத்தில் கண்டிப்பாகப் புதுமைதான்.
ஸ்ரீதரின் நண்பரான கோபுவுக்கு, ஒரு வசனகர்த்தாவாக அங்கீகாரத்தையும் பெரும்புகழையும் தந்தது ‘காதலிக்க நேரமில்லை’.
அவரது வசனமெழுதும் பாணி பின்னாளில் பல கலைஞர்களுக்கு முன்மாதிரியாகவும் அமைந்தது என்றால் அது மிகையல்ல.
‘காதலிக்க நேரமில்லை’யில் பல காட்சிகள், கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாட்டுக்கு இடம்விட்டு நீளமாக அமைந்திருந்தன.
ஆனாலும், படத்தின் நகர்வுக்கு அவை எந்தவிதத்திலும் தடையாக இல்லாமல் இருந்ததற்கு படத்தொகுப்பாளர் என்.எம்.சங்கருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
நெஞ்சோடு உறவாடும் பாடல்கள்!
‘என்ன பார்வை உந்தன் பார்வை’, ‘அனுபவம் புதுமை’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘மலரென்ற முகமென்று சிரிக்கட்டும்’, ‘நாளாம் நாளாம் திருநாளாம்’, ‘நெஞ்சத்தை கொஞ்சம் அள்ளித்தா தா..’ என்று டூயட் பாடல்கள் ஒவ்வொன்றும் என்றும் இனிமை ரகம்.
அதே நேரத்தில் ‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’, ‘உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா’ பாடல்கள் பின்னாளைய நாயக ஆராதனைகளுக்கு பிள்ளையார் சுழி இட்டன.
இப்படத்தில் டி.எம்.சவுந்திரராஜன் குரல் இடம்பெறவே இல்லை என்பது நிச்சயம் ஆச்சர்யம்தான். பி.பி.ஸ்ரீனிவாஸும் பி.சுசீலாவும் முக்கால்வாசி பாடல்களைப் பாட, எல்.ஆர்.ஈஸ்வரி இரு பாடல்களுக்கும் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜேசுதாஸ் தலா ஒரு பாடலுக்கும் தங்கள் குரலைத் தந்துள்ளனர்.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணையின் உழைப்பு உச்சம் தொட்ட படைப்புகளில் ‘காதலிக்க நேரமில்லை’யும் ஒன்று.
இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
நகைச்சுவை தெறிக்கும் வசனங்களுக்கு இடம்விட்டு பல காட்சிகளில் பின்னணி இசை அமைந்திருக்காது.
பாலையாவின் பங்களா அழகை காட்டும்போதும், ராஜஸ்ரீயின் அழகில் மயங்கி அவரிடம் ரவிச்சந்திரன் வம்பு பண்ணும்போதும் இடம்பெற்றுள்ள பின்னணி இசை, அது போன்ற சூழல் திரைக்கதையின் பின்பாதியில் இடம்பெறாததைச் சொல்லிவிடும்.
‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ பதம்!
தியேட்டர்களும் திரைப்படங்களுமே முக்கிய பொழுதுபோக்கு என்றானபிறகு, நல்ல படைப்புகளை மீண்டும் மீண்டும் மக்கள் பார்த்துக் கொண்டாடினார்கள். ஆனாலும், நட்சத்திர நடிகர் நடிகையர் அதற்குக் காரணமாக இருந்தார்கள்.
அதிலிருந்து வேறுபட்டு நகைச்சுவைக்காகவும் புதுவிதமான திரை அனுபவத்துக்காகவும் கொண்டாடப்பட்டது ‘காதலிக்க நேரமில்லை’. உண்மையில் ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ என்ற பதத்துக்கு உண்மையிலேயே அர்த்தம் சேர்த்தது.
ஸ்ரீதர் இப்படத்தை தயாரித்தபோது, பிரபல விநியோகஸ்தர்கள் எவரும் வாங்கத் தயாராக இல்லையாம். அதனால், ஸ்ரீதரே நேரடியாக தமிழ்நாடெங்கும் வெளியிட்டிருக்கிறார். அதன்பின் வசூல் மழை பொழிந்தது தனி வரலாறு.
தெலுங்கில் ‘பிரேமிஞ்சி சூடு’, இந்தியில் ‘பியார் கியா ஜா’ என்ற பெயரில் இப்படத்தை ரீமேக் செய்தார் ஸ்ரீதர். அதன்பின் தெலுங்கிலும் கன்னடத்திலும் இப்படம் ரீமேக் ஆனது.
இப்போதுவரை இக்கதை பல மொழிகளில் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகிறது.
‘காதலிக்க நேரமில்லை’ போன்ற ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை தர வேண்டுமென்ற முனைப்புடன் தமிழில் உருவான பல படைப்புகள் பெருவெற்றியைப் பெற்றிருக்கின்றன.
இப்படத்தில் முத்துராமன் கிழவன் வேடமிடுவது நடிகன், தேடினேன் வந்தது, உழைப்பாளி உள்ளிட்ட பல படங்களில் பிரதியெடுக்கப்பட்டிருக்கிறது.
‘சின்ன மாப்ளே’ படத்தில் ராதாரவியின் பாத்திரத்தில் லேசுபாசாக பாலையாவின் தாக்கம் தெரியும். ‘உன்னருகே நானிருந்தால்’ படத்தில் டைரக்டராக வரும் விவேக் அச்சு அசல் நாகேஷை பிரதிபலித்திருப்பார்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போனால் ‘காதலிக்க நேரமில்லை’ பலமுறை மீண்டும் எடுக்கப்பட்டதை உணர முடியும்.
அதுவே, இப்படத்தை ‘ரீமேக்’ செய்ய வேண்டுமென்ற விவாதத்துக்கும் முற்றுப்புள்ளியும் வைக்கிறது.
ஸ்ரீதரின் மகுடத்தில்..
ஒரு இயக்குனராக வெவ்வேறு கதைக்களங்களை, உணர்வுகளை மையப்படுத்தும் படங்களைத் தந்தவர் ஸ்ரீதர். ட்ரெண்டுக்கு தகுந்தவாறு பார்வையாளர்களின் இயல்பு மாறுவதற்கேற்ப தனது பாணியையும் மாற்றிக்கொண்டு வெற்றிகளைச் சுவைத்தவர்.
‘ஊட்டி வரை உறவு’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘தென்றலே என்னை தொடு’ என்று ‘ரொமான்ஸ் காமெடி’ வகையில் மேலும் சில வெற்றிப் படங்களைத் தந்தாலும் ‘காதலிக்க நேரமில்லை’ எவர்க்ரீன் படைப்பானது கண்டிப்பாக அவரே எதிர்பாராத ஒரு ஆச்சர்யமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
மாபெரும் வெற்றிகளைக் கண்டபோதும், சாதாரண மக்களின் மனதோடு உறவாட தனித்திறமை வேண்டும். அது தனக்கிருக்கிறதா என்று ‘தந்துவிட்டேன் என்னை’ படம் வரை தன்னுழைப்பைக் கொட்டியவர் ஸ்ரீதர்.
‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் அவரது வெற்றி மகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்!
படத்தின் பெயர்: காதலிக்க நேரமில்லை,
கதை, வசனம்: ஸ்ரீதர்-கோபு,
இசையமைப்பு: விஸ்வநாதன் ராமமூர்த்தி,
பாடல்கள்: கண்ணதாசன்,
கலை: கங்கா, உடை: பி.ராமகிருஷ்ணன், ஒப்பனை: நாஞ்சில் சிவராம், பெரியசாமி,
ஒளிப்பதிவு இயக்குனர்: வின்சென்ட்,
ஒளிப்பதிவு: பி.என்.சுந்தரம், ஒலிப்பதிவு: வி.பி.சி.மேனன், நரசிம்ம மூர்த்தி, முகுந்தன்,
பாடல்கள் ஒலிப்பதிவு: டி.எஸ்.ரங்கசாமி,
படத்தொகுப்பு: என்.எம்.சங்கர், ப்ராசஸிங்: ஜெமினி ஸ்டூடியோஸ் லேபரட்டரி,
தயாரிப்பு: சித்ராலயா, ஸ்டூடியோ: விஜயா – வாஹினி, இயக்கம்: ஸ்ரீதர்
நடிப்பு: டி.எஸ்.பாலையா, முத்துராமன், நாகேஷ், ராஜஸ்ரீ, சச்சு, ரவிச்சந்திரன், காஞ்சனா, வி.எஸ்.ராகவன், பிரபாகர், வீராசாமி, ராதாபாய்
– உதய் பாடகலிங்கம்