பொழுதைப் பொன்மாலையாக்கிய கவிஞர்!

சினிமாவில் கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடலான ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது’ பாடல் ஒலிப்பதிவான நாள் இன்று (மார்ச் 10, 1980). பாடல் பதிவாகி நாற்பத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘நிழல்கள்’ படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல் இது. இதுபற்றி கவிஞர் பிருந்தா சாரதி தனது முகநூலில் எழுதிய பதிவு.
“கவிஞர் வைரமுத்து பாடலாசிரியராக மலர்ந்த நாற்பத்தியோரு ஆண்டு இன்று என்பதை இந்து தமிழ் திசை மூலம் அறிந்தேன். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் காதுகளையும் இதயத்தையும் இனிப்பாக்கி வருவது என்பது ஒரு சரித்திர சாதனை.
அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, சிந்து பைரவி, கடலோரக் கவிதைகள், மனிதன், ரோஜா, பம்பாய், ரிதம், உயிரே… என எத்தனைப் படங்களில் கதையோடு கலந்த பாடல்களை எழுதி, படம் பார்க்கும் அனுபவத்தைப் பரவசமாக்கியிருக்கிறார் வைரமுத்து.
பொங்கும் பூம்பனல், வானவில், ஒரு படப் பாடல்கள், இன்பமும் துன்பமும் போன்ற இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் தவறாமல் கேட்ட அவரது பாடல்கள் அனைத்தும் என்றும் என் நெஞ்சில் நிறைந்தவை.
“வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்”
என்ற வரிகள் மூலம் ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்ற தன் முதல் பாடலை எழுதி, பாட்டுப் பயணத்தைத் தொடங்கினார்.
வானம் நாளும் அவருக்குச் சேதி தந்துகொண்டே இருந்தது. இருக்கிறது. மாலைப் பொழுதில் ஓர் உதயம் நிகழ்ந்தது தமிழ்த் திரைப் பாடல் உலகில்.
“இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை”
“பூவை அள்ளிப்
பூவை கையில் கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்”
“மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்”
“விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே”
“வானம் என் விதானம்
இந்த பூமி சந்நிதானம்”
“வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்”
“நீ மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டாள்
ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவைக் கட்டிக் கொண்டால்
பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்”
“கட்டுத்தறிக் காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே”
“பூங்கதவே தாழ்திறவாய்”
“அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா
அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா?”
“ஓர் பார்வை பார்த்தே
உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா?”
“சின்னப் பொண்ணு சேல
செம்பருத்தி போல”
“ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை”
“ஆத்துக்குள்ள நேத்து உன்னை நினைச்சேன்
வெக்கம் நிறம் போக மஞ்சக் குளிச்சேன்”
“கையில் உள்ள எட்டனாவை
பத்துமுறை எண்ணுவான் கஞ்சராஜா
தேன்நிலவு போனாலும்
தனியாய் தானே போவானே”
“சில ஆறுகள் மீறுதடா
வரலாறுகள் மாறுதடா
இனி பால் வரும் என்பதும்
தேன் வரும் என்பதும்
ஜோசியமானதடா
மனிதா மனிதா
இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்”
“ஆத்தா அழுத கண்ணீர்
ஆறாகப் பெருகி வந்து
தொட்டில் நனைக்கும் வரை
கண்ணே நீ கண்ணுறங்கு…”
இப்படி நூற்றுக்கணக்கான வரிகளை என் நினைவிலிருந்து சொல்லிக் கொண்டே இருப்பேன். கலைஞர் வார்த்தைகளில் சொன்னால் ஒவ்வொரு வரியும் ஐவரி.
எத்தனை சூழ்நிலைகள்? எத்தனை உணர்ச்சிகள்? எத்தனை வகை மாதிரிகள்? அத்தனைக்கும் புதிய கற்பனைகள், புதிய சொற் சேர்க்கைகள், புதிய பார்வைகள் மூலம் திரைப் பாடல்களுக்குப் புதிய முகம் கொடுத்தார் வைரமுத்து.
கவியரசர் கண்ணதாசனுக்குக் கிடைத்ததைப்போல் இப்படிக் பல சூழல்களுக்குப் பாடல் எழுதும் வாய்ப்பைக் கவிஞர் வைரமுத்துவுக்கும் காலம் வழங்கியது. கிடைத்த வாய்ப்பு ஒவ்வொன்றிலும் சிக்ஸர் அடித்தார் கவிஞர்.
“முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தொலைந்ததினால்
அழுகிறதோ அது மழையோ?”
– என்றும்
“எனது கதையை எழுத மறுக்கும் என் பேனா?”
– என்றும்
“ஓடும் நீரில் காதல் கடிதம் எழுதிவிட்டது யாரு?”
– என்றும்
“மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்
விரகம் இரவை சோதிக்கும்
விடியும் வரையில் கனவுகள் நீடிக்கும்
ஆசை எனும் புயல் வீசிவிட்டதடி
ஆணிவேர் வரையில் ஆடிவிட்டதடி
காப்பாய் தேவி….”
– என்றும்
“நான் தேடி வந்த ஒரு
கோடை நிலவு நீதானா
மனக் கண்ணில் நின்று
பல கவிதை தந்த மகள் நீதானா?”
– என்றும்
“முறிந்த கிளையில் மலர்கள் அரும்புமா?”
– என்றும்
மெட்டுக்குள் கவிதை மொட்டுகளை ஒரு பாடலாசிரியர் பூக்க வைத்திருக்க முடியுமா?
உண்மையைச் சொன்னால் நான் கவிஞன் ஆனதில் அப்பாடல் வரிகளுக்குப் பெரும் பங்குண்டு. அதற்கு நன்றியாகத்தான் நான் இயக்கிய ‘தித்திக்குதே’ திரைப்படத்தின் எல்லாப் பாடல்களையும் கவிஞரை எழுதவைத்தேன்.
“சில்லென்ற தீப்பொறி ஒன்று
சரசர சரவென பரபர பரவென
மனசுக்குள் பரவுது பார்த்தாயா? “
“மைனாவே மைனாவே
உன் கூட்டில் எனக்கொரு வீடு
வேண்டும் தருவாயா?”
முதலிய பாடல்களை எழுதி ஒரு ரசிகனைக் கௌரவித்தார்.
அசாதாரணமான கவிஞர் மட்டுமல்ல… ஈடு இணையில்லாத உழைப்பாளி அவர்.
நாசர் அவர்களின் ‘அவதாரம்’ முடிந்த சமயம் ‘கவிதை பாருங்கள்’ என்ற தன் தொலைக்காட்சித் தொடரில் இணை இயக்குநராகப் பணியாற்ற அழைத்தார்.
அவர் பாடல்களை மட்டுமல்ல அவர் கவிதைகளையும் என்னால் மனப்பாடமாகச் சொல்ல முடியும் அப்போது. அவரைச் சந்தித்தபோது சிலவற்றைக் கூறினேன். “எங்கயா இருந்த இவ்வளவு நாள்?” என்று கூறி மகிழ்வுடன் பணியில் சேர்த்துக் கொண்டார்.
கிடைத்தற்கரிய வாய்ப்பாக எண்ணி அதில் பணிவோடு பணியாற்றினேன்.
நான் ரசித்த கவிஞர் என்னைத் தன் கவிதைகளைக் காட்சிப்படுத்தும் தொடரில் பணியாற்ற அழைத்தது அவருக்குத் தெரியாமலேயே அவரை நான் ரசித்ததற்குக் கிடைத்ததற்குக் பரிசாக எண்ணினேன்.
அவரோடு பணியாற்றிய காலம் என் வசந்தகாலம். சிஸ்டமேடிக்காக அவர் பணியாற்றுவதைப் பார்த்து பிரமித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
காலை ஆறு மணிக்கு வரச் சொல்வார். நான் ஐந்து மணிக்கு அலுப்போடு எழுந்து ஆறு மணிக்குப் போவேன்.
அவர் அதற்கு முன்பே ஒரு பாடலை எழுதி முடித்து தொலைக்காட்சித் தொடர் வேலைக்காகக் காத்திருப்பார். பின் பாடல் பதிவுக் கூடம், இயக்குர்கள் சந்திப்பு என பிஸியாக இருந்துகொண்டே இருப்பார். கண்கள் தூக்கத்துக்குக் கெஞ்சுவது நமக்கே தெரியும்.
ஆனால் வைராக்கியத்தோடு வேலை செய்வார்.
“இளமை உன் தோள்களில்
இருக்கும்போதே
எது நிஜம் என்பதை எட்டிவிடு”
என்று எழுதியவராயிற்றே.
அவர் அடைந்த உயரங்கள் ஏதோ அதிர்ஷடத்தாலோ, யாரோ தந்த சலுகையின் மூலமோ கிடைத்தவை அல்ல.
கடலுக்கு நிகரான அவரது புலமைக்கும் மலைக்கு நிகரான அவரது உழைப்புக்கும் கிடைத்த மெய்வருத்தக் கூலியைத்தான் அவர் பெற்றார்.
“நெருப்புக் கவிஞனே
உன் இதயப் பைக்குள்தான்
எத்தனை எத்தனை கர்ப்பப் பைகள்?”
– என்று கலைஞரைப் போல் நானும் வியக்கிறேன்.
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகக் கவிதையிலும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பாடல்களிலுமாகத் தமிழ் இலக்கியத்தில் பங்காற்றிவரும் என் நெஞ்சில் நிறைந்த கவிஞரை இன்னுமோர் நூற்றாண்டு நலமும் வளமும் பெற்று வாழ்க என்றும் தொய்வின்றி உங்கள் பணி தொடரட்டும் என்றும் என் வயதை மீறி வாழ்த்துகிறேன்.”
#கவிஞர்_பிருந்தாசாரதி #கலைஞா் #கருணாநிதி #கவிஞா்_வைரமுத்து #இளையராஜா #Brindha_sarathy #kalaingar #karunanithi #vairamuthu #ilayaraja
You might also like