போதைப்பொருள் புழக்கத்திற்கு இப்படியும் ஒரு ‘சாம்பிள்’!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

கடந்த ஓராண்டிற்கு மேலாக சூழ்நிலைக் கருதிப் போக்குவரத்துக்குக் கால் டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பல தரப்பட்ட கால் டாக்ஸி டிரைவர்களுடன் தொடர்ந்து உரையாடும் சந்தர்ப்பங்களும் வாய்த்திருக்கின்றன.

இதுவரை சொந்த அனுபவத்தில் நான் சந்தித்த பெரும்பாலான கால் டாக்ஸி டிரைவர்களும் மிக சிலரைத் தவிர பலரும் மனம் விட்டுப் பேசி இருக்கிறார்கள்.

தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்து, பல டிரைவர்கள் அவரவர் வட்டார மொழி வழக்கோடு பேசுவதே தனி அழகு தான்.

எத்தனையோ, பிரச்சனைகளை ஒன்றை மணி நேரம் பயணத்திற்கு இடையே பேசி இருக்கிறார்கள். இதில் இந்திப் பேசும் வட மாநில டிரைவர்களும் அடக்கம்.

இந்தியை மட்டும் அறிந்த அவர்கள் தமிழும், ஆங்கிலமும் தெரியாத நிலையிலும், கூகுள் மேப்பை நம்பி சென்னை பெருநகர சாலைகளில் வாகனங்களை ஓட்டுகிறார்கள்.

அதில் ஒருவர் மொழிப் பேதத்தையெல்லாம் தூக்கிக் கடாசிய உற்சாகத்தோடு, ஏதோ நான் நேயர் விருப்பத்தைக் கேட்டதைப் போல அந்தக் கால இந்திப் பாடல்களைச் ஷோலே படத்தில் தர்மேந்திராவும், அமிதாப் பச்சனும் பாடுவது போல இனிமையான குரல் வளத்தோடு பாடிக் கொண்டே இருந்தார்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கால் டாக்ஸி டிரைவர்கள் சந்திக்கிற முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக போதைப்பொருள் நீடித்து வருகிறது.

டாஸ்மாக் பார்களிலிருந்து நிறை போதை உடன் காருக்குள் ஏறுகிறவர்களும் ஏறின ஜோரில் சிலம்புகிறவர்களும் அதிகரித்த அனுபவத்தைப் பலரும் சொன்னார்கள்.

போதை ஏறினாலே டிரைவர்களை ஒருமையில் அழைக்கும் அளவிற்குப் போய்விடுவதை நாசுக்காய் சொன்னார்கள்.

ஒரு சிலர் காரோடு கடத்தப்பட்டு கொல்லப்பட்டதையும் பரிதவிப்போடு பகிர்ந்து கொண்டார்கள்.

அப்படி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவி கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்கள்.

யாரோ எங்கிருந்தோ டெக்னிக்கலாக சில அப்ளிகேஷன்களை உருவாக்கி எப்படி தங்களுடைய உழைப்பு சுரண்டப்படுகிறது என்பது குறித்து வருத்தப்பட்டார்கள்.

எத்தனையோ போதை அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தாலும் தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு டிரைவர் சொன்ன அனுபவமும் சற்றே ‘பகீர் ரகம்’.

சென்னையில் நள்ளிரவைத் தாண்டி இரண்டு மணி அளவில் அந்தப் பெண் காரில் ஏறுகிறார்.

சுமார் 25 வயது இருக்கலாம் மிகவும் குறைந்த அளவு உடையே உடுத்தியிருக்கிறார். காரில் ஏறியதும் கொஞ்ச நேரத்தில் தன்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு ஊசியை எடுக்கிறார்.

ஏதோ ஒரு திரவ வடிவிலான போதை மருந்தையும் எடுத்து ஊசியின் மூலம் உள்ளிழுத்து தன்னுடைய தொடைப் பகுதியில் செலுத்திக் கொள்கிறார்.

முன்னாடி இருந்த கண்ணாடி மூலம் பெண்ணின் நடவடிக்கைகளை ஓரளவுக்குப் பார்த்த டிரைவருக்கு கடும் அதிர்ச்சி, பின்னால் திரும்பிப் பார்க்கிறார். கொஞ்ச நேரத்தில் கால்களை நேராக நீட்டி ஒரே மட்டையாகி விட்டிருக்கிறார் அந்த இளம் பெண்.

போதை உச்சத்திற்கு ஏறிய நிலையில் மூச்சு விடுகிற சடலத்தைப் போல அப்படியே கிடக்கிறார்.

டிரைவர் கத்திக் கூப்பிட்டும் தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தில் சிறிது தண்ணீரை தெளித்தும் கூட அந்தப் பெண் விழித்துக் கூட பார்க்கவில்லை என்ன செய்வது?

தவித்துப் போனார் அந்த டிரைவர். வேறு வழி இல்லாமல் அருகில் இருந்த மகளிர் காவல் நிலையத்திற்கு டாக்ஸியோடு சென்று இருக்கிறார் அந்த டிரைவர்.

அந்த நள்ளிரவில் காவல் நிலையத்திலிருந்த அலுவலர்களிடமும், அதிகாரியிடமும் நடந்ததைச் சொல்ல, அவர்கள் வெளியே வந்து காரில் போதையில் உறைந்திருந்த அந்தப் பெண்ணை தட்டி எழுப்ப முயற்சித்திருக்கிறார்கள்.

முடியவில்லை. அந்தப் பெண் எந்த சத்தத்தையும் உள்வாங்கும் நிலையே இல்லை…. இரண்டு பெண் காவலர்கள் அந்தப் பெண்ணை கைத் தாங்கலாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். காவல் நிலையத்திற்குள் அந்த இளம் பெண்ணை படுக்க வைத்திருக்கிறார்கள்.

அவரை அழைத்துச் சென்ற டிரைவருக்கு ஒரே குழப்பம் தன்னுடைய காரில் இப்படிப்பட்ட போதை ஏறிய அனுபவத்தை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்த அந்த டிரைவருக்குத் தோன்றியது இந்த ஐடியா தான்.

தன்னுடைய காரில் போதை ஏற்றிக்கொண்ட அந்தப் பெண்ணை எத்தனை மணிக்கு, எப்படிப்பட்ட நிலையில், காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார் என்பதை, காவல் நிலையத்திலேயே எழுதிக் கொடுக்கச் சொல்லி அங்குள்ள காவல்துறை அதிகாரியும் கையெழுத்துடன் வாங்கிச் சாட்சியத்துடன் அந்தக் காவல் நிலையத்தை விட்டு, அவர் நகர்ந்த போது காலை 3 மணி ஆகிவிட்டிருந்தது.

இந்த அனுபவத்தை என்னிடம் சொன்ன அந்த 30 வயதிற்கு உட்பட்ட டிரைவர் “அன்னைக்கு அந்த அனுபவத்தை கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல. ஆனா, அந்தப் பெண் ஐடி துறையில் நல்ல வேலையில… இருக்காங்கன்னு… மட்டும் தெரிஞ்சது.. குறைஞ்ச அளவுக்கு உடை உடுத்தியபடி போதையில் அவங்க… காரின் பின் சீட்டில் கிடந்த நிலையைப் பார்த்தப்போ…. அவங்க மேல பரிதாபப்பட்டேன். வெளியே அந்த நிலையில் விட்டிருந்தா அவங்களுக்கு.. என்ன வேணுமானாலும் நடந்திருக்கலாம்.

அதனாலதான், மகளிர் காவல் நிலையத்திற்குக் கூட்டிட்டுப் போய் அவங்கள சேப்டீயா ஒப்படிச்சிட்டு கடிதத்தையும் வாங்கிட்டு வந்தேன்.

மறுநாள் காலை 8 மணி இருக்கும்… அதே இளம் பெண் தான் போனில் லைனுக்கு வந்தார். போதைத் தழுதழுத்தக் குரலில் மன்னிப்புக் கேட்டார்.

பொறுப்புடன் நான் நடந்து கொண்டிருப்பதற்காக அவர் பாராட்டிய போது என்னால் ஒன்றும் பேச முடியவில்லை.

உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? என்று அவர் கேட்டபோது நான் அவரிடம் சொன்னேன். ‘அந்தப் போலீஸ் ஸ்டேஷன் வரவரைக்கும் எவ்வளவு கட்டணம் ஆகி இருக்குமோ அதை மட்டும் G payயில் அனுப்புங்க போதும்’.

இதை நேரில், விவரித்து சொன்னபோது அந்த இளைஞரின் குரல் அக்கணத்து ஆச்சரியம் போலிருந்தது.

  • மணா
You might also like