தெற்கேயிருந்து ஒரு கணீர் குரல்!

அது 2018-ம் ஆண்டு. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வந்த அந்த உதவி இயக்குநர் ஒரு படத்தை இயக்கி இருந்தார். படத்தைப் பார்த்த சில விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் படம் நன்றாக உள்ளது. ஆனால், ஸ்டார் வேல்யூ இல்லை என்று படத்தை வாங்கி திரையிடத் தயங்கினார்கள். இருப்பினும் படத்தைத் தயாரித்தவர் பிரபல டைரக்டர் என்பதால் படத்தைத் திரையிட ஒப்புக்கொண்டனர்.

படம் வெளியாகி முதல் ஷோ பார்த்து வெளிவந்த ரசிகர்களிடம் கருத்து கேட்க மைக்கை நீட்டிய ஊடகங்களிடம் எந்தவிதக் கருத்தும் சொல்லாமல் பல ரசிகர்கள் கடந்து சென்றார்கள்.

பத்திரிகைகள் பாராட்டி எழுதிய பின்பு படத்திற்குக் கூட்டம் வர ஆரம்பித்தது. நம் சமூகத்தில் இத்தனை ஜாதி வன்மம் உள்ளதா? இப்படி எல்லாம்கூட நம் தமிழ்நாட்டில் நடக்குமா என்று யோசிக்க வைத்த படமாக அந்தப் படம் இருந்தது. படம் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் பேச முடியாமல் போனதுதான் ஊடகங்கள் முன்பு அவர்கள் கருத்து சொல்லாததற்குக் காரணம் என்று புரிந்தது.

அந்தப் படத்தின் பெயர் ‘பரியேறும் பெருமாள்.’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ். படத்தின் தயாரிப்பாளர் டைரக்டர் பா. ரஞ்சித்.

இன்று முன்னணி இயக்குநராக இருக்கும் மாரி செல்வராஜ் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ‘தங்க மீன்கள்’, ‘கற்றது தமிழ்’ உட்பட சில படங்களில் ராமிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பா. ரஞ்சித்திடம் உதவியாளராக சேர்ந்தபின் சினிமா வெளிச்சத்தில் தெரிய ஆரம்பித்தார்.

நீதித்துறையில் இருக்கவே கூடாத விஷயம் ஜாதிய உணர்வு. நீதித்துறை உருவாக பட்டறையாக திகழும் சட்டக் கல்லூரிகளிலேயே ஜாதியின் விஷ நாக்குகள் எப்படி இருக்கின்றன என்பதை தோலுரித்து காட்டியது ‘பரியேறும் பெருமாள்’.

இப்படத்தில் வரும் கயல் ஆனந்தி கேரக்டர் உட்பட, தன் படத்தில் வரும் பல பெண் கேரக்டர்கள் தன் வாழ்வில் சந்தித்த பெண்கள்தான் என்ற தகவலை சில வருடங்களுக்கு முன்பு நமது மங்கையர் மலர் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார் மாரி செல்வராஜ்.

தமிழ்நாட்டில் 1991-96 ஆம் ஆண்டு காலகட்டத்தில் எளிய மக்கள் மீது காவல் துறையினரால் பல்வேறு அதிகார அத்துமீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 1995-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஒரு அதிகார வன்முறையை சமரசம் இல்லாமல் 2021-ம் ஆண்டு வெளியான ‘கர்ணன்’ படத்தில் பதிவு செய்திருந்தார் மாரி செல்வராஜ். படத்தைப் பார்த்த சிலர் படத்தில் மாரி சொன்னது குறைவுதான் உண்மையில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது என்று கருத்து தெரிவித்தார்கள்.

சென்ற ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. முன்னாள் சபாநாயகர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை விஷயங்களின் அடிப்படையில் இப்படம் உருவானது. வடிவேலு என்ற கலைஞனுக்குள் இருந்த திறமையை இப்படம் காட்டியது.

நீலம் என்பது நிறம் மட்டுமல்ல அம்பேத்கர் வழிப் புரட்சி என்று தனது படங்களில் சொல்லி வருபவர் மாரி செல்வராஜ். அடக்கு முறைக்கு எதிராக குரல் தரும் படைப்புகள் எல்லாம் உலக சினிமாவாக கொண்டாடப்படுகின்றன. மாரி செல்வராஜ் படங்களும் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகின்றன. உலக சினிமா தரத்தில் தன் படைப்புகளைத் தருகிறார் மாரி.

ஜாதிய, அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக சினிமா என்ற சாட்டையை சுழற்றும் மாரி செல்வராஜ் இதுபோன்ற பல படைப்புகளைத் தர வேண்டும் என இந்த பிறந்தநாளில் (மார்ச் 7) வாழ்த்துவோம்.

– ராகவ்குமார்

– நன்றி : கல்கி இதழ்

#Mari_Selvaraj #ஜாதி #பரியேறும்_பெருமாள் #இயக்குநர்_மாரி_செல்வராஜ் #பா_ரஞ்சித் #சட்ட_கல்லூரி #வடிவேலு #மாமன்னன் #அம்பேத்கர் #கர்ணன் #pariyerum_perumal #director_mari_selvaraj #pa_ranjith #vadivedu #law_college #maamannan #ambedkar #karnan #caste #மாரி_செல்வராஜ்

You might also like