பேராசிரியர் அன்பழகன் மறைந்த அன்று: அடர்ந்த நினைவுகள்!

மீள்பதிவு:

மார்ச் 7-ம் தேதி.

காலை எட்டுமணியளவில் சென்னை ஆஸ்பிரன் தோட்டத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனின் வீடு. கூட்டம் அப்போதுதான் வரத் துவங்கியிருந்தது.

வீட்டு வாசலில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் நலிந்த பேராசிரியரின் உடல். உடன் அவருடைய உறவினர்களும், தி.மு.க.வினரும். வெளியே ஊடகங்கள் மொய்த்திருந்தன.

சில தடவைகள் இதே வீட்டுக்குப் பத்திரிகையாளனாக அவரைச் சந்திக்க வந்திருக்கிறேன். ஒப்புக்குப் பேசுகிறவர் இல்லை அவர்.

சந்தித்த நேரங்களில் வெளிப்படையாகவே பேசுவது அவருடைய இயல்பாக இருந்தது.

தன்னிடம் பேசுகிறவரின் உணர்வையும், கருத்தையும் எடை போட்டு அதற்கேற்பப் பேசுவது அவருடைய இயல்பு.

வாசிப்பில் தேர்ச்சி உள்ளவர் என்பது அவரிடம் சில புத்தகங்களைக் கொடுத்துவிட்டு வந்த சில நாட்களில் தெரியும். போனில் பேசும்போது புத்தகத்தைப் படித்து நினைவில் தங்கியிருப்பது புலப்படும்.

ஆரவாரமில்லாமல் – தனக்குப் பிடித்தமானவர்களுடன் பழகி, பிடித்தவற்றை மனம் ஒன்றிச் செய்து, அதிகார தோரணையில்லாமல் வாழ்ந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கமாக இருந்தது.

வெறுமனே கட்சி அல்லது அதிகாரப் பொறுப்பு சம்பந்தப்பட்ட நபராக மட்டும் அவர் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. புத்தர், ராமானுஜர், வள்ளலார், நாராயண குரு என்று சமயம் சார்ந்து எதிர்க்குரல் எழுப்பியவர்கள் மீது கரிசனமான பார்வை அவரிடம் இருந்தது.

“இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கிற வெளிச்சம் காலமும், சமூகமும் கொடுத்திருக்கிற வெளிச்சம். இதனால் நாம் இன்றைக்கு ஒரு பார்வையோடு இருக்கிறோம்.

இதை வைத்து நமக்கு முன்னால் இருந்த ராமானுஜரை, வள்ளலாரை, பாரதியைப் பார்க்க முடியாது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் எதை எதை எதிர்த்து அன்றைக்கு அவர்களால் குரல் கொடுக்க முடிந்திருக்கிறது என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும்.

விடுபட்டதாக நாம் இன்றைக்கு நினைப்பவற்றை அவர்களுடன் பொருத்திப் பார்த்துப் புறந்தள்ளக் கூடாது.

அப்படித்தான் அவர்களைப் பார்க்கிறேன்” – என்று விரிவான புலமையுடன் பேசிக் கொண்டிருந்தபோது, சராசரியான ஒரு அரசியல்வாதியோடு பேசிக் கொண்டிருப்பது போலத் தோன்றவில்லை.

கடந்த நாற்பது ஆண்டுகளில் வெவ்வேறு கால கட்டங்களில் நடந்திருக்கிற தி.மு.க மாநாடுகளுக்குப் போயிருக்கிற அனுபவத்தில்- எந்த மாநாட்டிலும் தனித்து ஒலிக்கும் குரல் அன்பழகனுடையது.

தமிழரின் தொன்மம், தமிழ் மொழியின் செழுமை பற்றிப் பேசிவிட்டு, அப்படி வளமான மரபுடன் இருந்த தமிழன் எதையெதை தற்போது இழந்திருக்கிறான் என்றும் திராவிட இயக்க உணர்வு நீதிக்கட்சி காலத்திலிருந்து எதனால் உருவாகி வளர்ந்ததைப் பற்றியும், பெரியார், அண்ணாவின் செயல்பாடுகள் பற்றியும் விளக்கிவிட்டு, இன்றுள்ள தலைமுறை அந்த உணர்விலிருந்து எப்படி விலகிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவே அவருடைய பேச்சின் மையம் இருக்கும்.

வெறும் அன்றாட அரசியலை மையப்படுத்தியதாக மட்டும் அமையாது அவருடைய பேச்சு. வேறு சில சந்தர்ப்பங்களில் அரசியல் கூட்டங்களில் ‘தமிழனின் மந்த கதி’ பற்றி அடிக்கடி வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.

அவருடைய தோழரான நாவலர் நெடுஞ்செழியனின் பேச்சுடன் ஒப்பிடும்போது, நாவலரின் பேச்சில் கிண்டலும், எகத்தாளமும், மொழித்தேர்ச்சியும் தெரியும்.

பேராசிரியர் அன்பழகனின் பேச்சிலோ நகைச்சுவை குறுக்கிடாத சீரியஸான தன்மை இருக்கும்.

மொழி, இன உணர்விருக்கும். நிறையப் புள்ளிவிபரங்களில் பேச்சிற்கிடையில் பரவிக்கிடக்கும்.

தனக்கு முன்னால் இருக்கும் பார்வையாளர்களை மாணவர்களைப் போல எண்ணி, அவர்களை அடுத்த தளத்திற்குப் பேச்சின் வழியே அழைத்துச் செல்வதைப் போலிருக்கும்.

“திராவிட இயக்கத்தில் அப்போது இன உணர்வு பலருக்கு இருந்தது. ஒவ்வொருவருமே பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். எழுதியும்,பேசிக் கொண்டும் இருந்தார்கள். பலரை மொழிபெயர்த்துத் தமிழ்ச்சமூகத்திற்குக் கொடுத்தார்கள்.

தமிழ் மீது இயல்பான ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். அந்த மொழிக்கு இடையூறு வந்தால், போராடுவதற்குத் தயார்ப்படுத்தினார்கள்.

சிறைக்குப் போவதையோ, மறியலில் ஈடுபடுவதையோ கடமையாகச் செய்கிற உணர்வை அன்றைய இளைஞர்களிடம் வளர்த்தெடுத்தார்கள்.

திராவிடக் கருத்தியல் குறித்து வகுப்புகள் எடுத்தார்கள். கல்லூரிக் கூட்டங்களைப் பயன்படுத்தினார்கள். அதனால் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது.

திராவிட இயக்கம் ஆட்சியேறியது. அதிகாரப் பொறுப்புக்கு வந்தது. அதற்குப் பிறகு வந்த தலைமுறை அதிகார ருசியைப் பார்த்த அளவுக்கு, இன உணர்வு கொள்ளவில்லை.

நம் மொழி, நம் மரபு பற்றிச் சரிவர அறிந்து கொள்ளவில்லை. அதற்கு முற்படவில்லை என்கிற கவலை என்னைப் போன்றோருக்கு இருக்கிறது. அதைத்தான் கழகத்தில் பலரிடம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறேன்.

அண்ணாவிடம் விவாதித்திருக்கிறேன். கலைஞரிடமும் வெளிப்படையாக- நாங்கள் இருவரும் தனித்து இருக்கும் நேரங்களில் விவாதித்திருக்கிறேன்.

மாறனிடமும் பேசியிருக்கிறேன். அப்படிப் பேசுவதற்கான சுதந்திரம் எனக்கு இருந்த காரணத்தாலேயே தி.மு.க.வில் நீண்ட காலம் நிலைத்து இருந்திருக்கிறேன். பதவிக்காக நான் அலை பாய்ந்தது இல்லை.

அதற்காக யாரிடமும் நான் என்னிலை தாழ்ந்து மலினப்படுத்திக் கொள்ளவும் இல்லை” என்று உணர்வுபூர்வமாக இதே வீட்டில் அவர் பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் காலம் தாண்டியும் நினைவில் இருக்கின்றன.

தனிமனிதத் துதிகள் எந்த ஒரு இயக்கத்தையும் பாழ்படுத்திவிடும் என்பதை வலியுறுத்திக் கொண்டிருந்த அன்பழகன், அதே சமயம் தனிமனிதர்களின் அளப்பரிய பங்கையும் மறுக்கவில்லை.

கொள்கையில் தீவிரம் காட்டினாலும், வெறுப்பு அரசியலை அவர் விரும்பியதில்லை. தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கொள்ளவுமில்லை.

97 வயது வரை அவருடைய வாழ்க்கை ஒரு நேர்கோட்டின் தன்மையுடன் தான் இருந்திருக்கிறது.
இதே சென்னை வீட்டின் கீழ்த்தளத்தில் வார இதழ் ஒன்றிற்காகப் பல ஆண்டுகளுக்கு முன் அவரைச் சந்தித்தபோது, மிக விரிவாக நீண்ட பேட்டிக்கிடையில் நிறைவாக ஒன்றை உச்சாடனத்தைப் போலச் சொன்னார்.

“முதலில் நான் மனிதன். அதன் பிறகு அன்பழகன். மூன்றாவது பகுத்தறிவு வாதி. நான்காவது அண்ணாவின் தம்பி. ஐந்தாவது கலைஞரின் நண்பர். இந்த வரிசை எப்போதும் என்னிடம் இருக்கிறது சாவினால் மட்டுமே இந்த வரிசையைக் கலைக்க முடியும்”

இன்றைக்கு மறைந்திருக்கிற நிலையிலும், காலத்தின் அந்த அடுக்கு மாறவில்லை.

– மணா

You might also like