‘நடிப்பதில் மகிழ்ச்சி’ என்றிருக்கும் நடிகர் சார்லி!

தமிழ் நகைச்சுவை நடிகர்களின் பட்டியல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு முன் தொடங்கி ‘டிராகன்’னில் வரும் விஜே சித்து, அர்ஷத்கான் தலைமுறைக்குப் பின்னும் தொடரக்கூடியது. அதில் தனித்துவமிக்கவராகத் திகழ்வதும், ரசிகர்களால் நினைவுகூரப்படுவதும் சாதாரண விஷயமல்ல. அப்படியொரு நிலையில் இருக்கத் தொடர்ந்து போராடி வருபவர் நடிகர் சார்லி. அது மட்டுமல்லாமல், இன்றும் இளமைத் துடிப்போடு இயங்கி வருபவர்.

‘தேடலும் முன்னேறும் ஆசையும் உள்ளவர்கள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்கள் இளமையாக இருப்பார்கள்’ என்பது சார்லியின் கருத்து. ஒரு பேட்டியில் அவரே குறிப்பிட்டது.

அது, அவருக்குச் சாலப் பொருந்தும். அதோடு சக மனிதர்களுக்கு இனிமையாகவும், யதார்த்தமாகவும் இருந்துவிட வேண்டுமென்ற அவரது விருப்பமே, இன்றும் ஒரு உயிர்ப்புமிக்க கலைஞனை நாம் கண்டு ரசிக்க வகை செய்திருக்கிறது. புதிதுபுதிதாகப் பல படைப்புகளில் மகிழ்ச்சியோடு பணியாற்ற ஆதாரமாக இருக்கிறது.

தேடலின் தொடக்கம்!

1960-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி விருதுநகரில் பிறந்தவர் சார்லி. இவரது இயற்பெயர் மனோகரன். தந்தை பெயர் தங்கசாமி. தாத்தாவின் பெயர் வேல்முருகன். அதன் சுருக்கமாக ’விடிஎம் சார்லி’ என்று தற்போது குறிப்பிடப்படுகிறார்.

சார்லியின் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். தொடக்கப்பள்ளியில் பயிலும் காலம் தொட்டு, இவரிடத்தில் நாடக ஆர்வம் உண்டு. மூன்றரை வயதில் ஒன்றாம் வகுப்பு படித்த இவர், பத்தொன்பது வயதில் இளங்கலை வேதியியல் படிப்பை நிறைவு செய்திருக்கிறார். அந்த வகையில் படிப்பிலும் ’சூட்டிப்பான மாணவனாக’ இருந்திருக்கிறார்.

மத்திய அரசின் பாடல்கள் மற்றும் நாடகப் பிரிவில் அரசுக் கலைஞராகப் பணியில் சேர்ந்தபோது இவரது வயது 20. இப்போது அந்தப் பிரிவு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில் இல்லை.

அந்தப் பணியில் சேர்வதற்காகச் சென்னைக்கு முதன்முறையாக வந்திருக்கிறார் சார்லி. அவர் கால் பதித்த ஆண்டு 1980. அந்த வகையில், சென்னையோடு அவருக்கு இருக்கிற பந்தம் 45 ஆண்டுகளாகத் தொடர்கிறது.

மத்திய அரசுப் பணியில் இருந்தபோது வெவ்வேறு மொழி நாடகங்களில், நாட்டிய நாடகங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தார் சார்லி.

ஒருநாள் அங்கிருக்கும் நூலகத்தில் நடைபெற்ற ‘ஹ்யூமர் கிளப்’ நிகழ்ச்சியைக் காணச் சென்றிருக்கிறார். அதில் பங்கேற்கவும் முயற்சித்திருக்கிறார். ஆனால், அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களால் மட்டுமே மேடையேற முடியும் என்று சொல்லி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில், உறுப்பினர்களோடு சேர்ந்து சார்லி எழுதிக் கொடுத்த நகைச்சுவை மேடையில் ஒலித்திருக்கிறது. உறுப்பினர் ஒருவர் தவறுதலாக அதையும் வாசித்திருக்கிறார்.

அந்த தவறு, அந்த நிகழ்வில் சார்லி பங்கேற்கக் காரணமாகியிருக்கிறது. தொழில்முறை கலைஞராக இருக்கும் ஒருவருக்கு அந்த வாய்ப்பு போதாதா? தனிநடிப்பை வெளிப்படுத்தி வந்திருந்தவர்களை வசீகரித்திருக்கிறார். அதிலொருவராக இருந்தவர், கலாகேந்திரா திரைப்பட நிறுவனத் தயாரிப்பாளரான கோவிந்தராஜன்.

சார்லியை ‘நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள், எங்கிருக்கிறீர்கள்’ என்று விசாரித்த கோவிந்தராஜன், அடுத்த நாளே இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

‘அடுத்த படத்துல உன்னை பயன்படுத்திக்கறேன்’ என்று சார்லியிடம் பாலச்சந்தர் உறுதி தந்திருருக்கிறார். சொன்னபடியே, ‘பொய்க்கால்குதிரை’ படத்தில் கவிஞர் வாலி உடன் இடம்பெறும் ஒரு பாத்திரத்தில் சார்லியை நடிக்க வைத்திருக்கிறார்.

அதுவரை மனோகரன் என்ற பெயரைச் சுமந்தவருக்கு, ‘சார்லி சாப்ளின்’ நினைவாக ‘சார்லி’ என்று பெயர் சூட்டியவரும் பாலச்சந்தர் தான்.

ஒரு நாடகக் கலைஞராக இருந்த சார்லியின் தேடலைத் திரைத்துறை பக்கம் திருப்பி விட்டதில், அந்த படத்திற்குப் பெரும் பங்குண்டு.

குறிப்பிட்ட நாளில் கோவிந்தராஜனைச் சந்திக்காவிட்டாலோ, பாலச்சந்தரைப் பார்க்காவிட்டாலோ சார்லி என்ன ஆகியிருப்பார்? அப்போதும், அவர் நடிகர் ஆவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். காரணம், நடிப்பின் மீதிருந்த அவரது காதல்.

‘பொய்க்கால் குதிரை’ திரைப்படம் முழுமையாக நிறைவடைந்து 1982-ம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் ‘அமரன்’ பட இயக்குனர் கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் ‘வீதியெல்லாம் பூப்பந்தல்’ படத்தில் ரகுவரன், ஜெமினி கணேசன் மகள் ஜெயா உடன் நடித்திருக்கிறார் சார்லி. அந்த படம் பாதியில் நின்றுபோயிருக்கிறது.

43 ஆண்டுகள்!

முதல் படத்திற்குப் பிறகு ‘அண்ணே அண்ணே’, ‘பூவிலங்கு’ உட்படப் பல படங்களில் நடித்தார் சார்லி. சிவாஜி உடன் இணைந்து ‘நாம் இருவர்’ படத்தில் முகம் காட்டினார். ’புன்னகை மன்னன்’ படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்தார்.

நடிக்க வந்த சில ஆண்டுகளில் தனது ஆதர்ச நடிகர்களைச் சந்தித்ததையும், அவர்களுடன் இணைந்து நடித்த தருணங்களையும் இன்றும் இதயத்தில் சுமக்கிறார் சார்லி.

அந்த காலகட்டத்தில் இருந்த அத்தனை முன்னணி நடிகர்களின் படங்களிலும் இடம்பெற்றிருக்கிறார் சார்லி. தொண்ணூறுகளில் நுழைந்த விஜய், அஜித், பிரசாந்த் தலைமுறையுடனும் அவர் நடித்திருக்கிறார். 2010-ல் வந்த விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் தலைமுறையோடும் கைகோர்த்த பெருமை அவருக்கு உண்டு.

கொரோனாவுக்கு பிறகு விஸ்வரூபமெடுத்த ஓடிடி உலகிலும் சார்லியின் இருப்பு தொடர்கிறது. நாற்பத்தி மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடிப்புலகில் நீடிப்பதும், வாய்ப்புகள் வந்தடையும் இடைவெளியைச் சீரான மனநிலையோடு கடந்து செல்வதும், பெருமிதங்களைப் புறந்தள்ளிவிட்டு நிகழ்காலக் கணத்தில் மனதைக் குவிப்பதும் நடிப்பின் மீது அதீத காதல் இருந்தால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதரின் அசைவையும் கவனிக்கிறார் சார்லி. அவற்றைக் கிரகிப்பதோடு, அவர்களது உண்மையான இயல்புகளோடு மனதாரா நேசிக்கிறார். அதுவே அவரை ‘நடிகனாக’ நீடிக்கச் செய்கிறது என்பது அவரது கருத்து.

வெறுமனே நகைச்சுவை நடிகராக மட்டுமே சார்லியை நாம் நோக்க முடியாது.

‘தண்ணீர் சுடுவதென்ன’ என்று பத்மினியை ‘இமிடேட்’ செய்யும் விதமாகப் பாடுபவரைப் பார்த்து, முகபாவனையை மாற்றாமல் ‘நீ இருந்திருப்ப’ என்று பேசி ‘பூவே உனக்காக’ படத்தில் சிரிப்பூட்டியிருப்பார் சார்லி. அதன் இயக்குனர் விக்ரமன் இயக்கிய இன்னொரு படமான ‘உன்னை நினைத்து’வில் ‘ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்’ என்று ‘ஓவர் ஆக்டிங்’கை வெளிப்படுத்தியிருப்பார்.

குறிப்பிட்ட காட்சியின் ‘டைமிங்’ எத்தகையது என்று உணர்பவரால் மட்டுமே அப்படிக் காட்சியளிக்க முடியும்.

அதேபோன்று ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் வில்லனாக வரும் ஆனந்தராஜின் சட்டையைப் பிடித்து இழுக்கும் காட்சியில் பார்வையாளர்களைப் பதற வைத்திருந்தார். ‘ஐய்யய்யோ இப்படி வெள்ளந்தியா பேசி சிக்கிக்கிட்டானே’ என்று அழ வைத்திருந்தார்.

அப்படிப்பட்ட காட்சிகள் தான் ஒரு படத்தின் இயக்குனரை வெற்றியடையச் செய்யும். அதற்குச் சார்லி போன்ற நடிகர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

இன்னும் அவரது பங்களிப்பு பற்றிப் பேசினால், அவர் நடித்த எண்ணூத்தி சொச்சம் படங்களையும் துணைக்கு அழைக்க வேண்டியிருக்கும். அவர் தன் நடிப்பில் வெளிப்படுத்திய வேறுபட்ட உணர்வுகள் பற்றியும் விவாதிக்க வேண்டியிருக்கும்.

இலக்கிய முகம்!

‘காமெடி நடிகரை எதுக்கு இலக்கியக் கூட்டத்துக்கு வரவழைச்சிருக்கீங்க?’ இது போன்ற ‘நவீன தீண்டாமை’ கேள்விகளை இக்காலகட்டத்தில் அடிக்கடி கேட்க முடிகிறது. அதனை வெகுசில ஆண்டுகளுக்கு முன்பே எதிர்கொண்டவர் சார்லி. தீவிரமான இலக்கியக் கூட்டங்களில், புத்தகத் திருவிழாக்களில் அவரைச் சந்திப்பவர்கள் ஆச்சர்யம் அடைவார்கள். ஆத்மாநாம், ஞானக்கூத்தன் போன்ற கலைஞர்கள் எல்லாம் ஒருகாலத்தில் இவரது நண்பர்களாக இருந்தவர்கள் என்பது அவர்களில் பலருக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம்.

அது பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட சார்லி, ‘இலக்கிய வாசிப்பு மட்டுமல்லாமல் அது போன்ற இலக்கிய நண்பர்களின் நட்புதான் என்னை எதற்கும் பிரமிக்கவிடாமல் தடுத்தது. வீணான பெருமிதங்களில் மூழ்காமல் பார்த்துக் கொண்டது’ என்று சொல்கிறார்.

எண்பதுகளில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தில் அவர் ஈடுபட்டது பற்றித் தனியே பேச வேண்டியிருக்கும். பிறகு சினிமா வாய்ப்பு தேடித் திரிந்த காலம், திரையுலகில் அறிமுகமாகி வாய்ப்புகளில் திக்குமுக்காடிய நேரம், 2000-க்கு பிறகு பெரிதாகப் பணி வாய்ப்புகள் இல்லாமல் முடங்கிய காலம் என்று வெவ்வேறுவிதமான சூழல்களில் வாழ்ந்த அனுபவம் இவருக்குண்டு.

இப்படித் தான் சந்தித்த அனுபவங்களைச் சுயசரிதையாக இல்லாமல், ஒரு கருத்துப் பதிவாக சார்லி வெளிக்கொணரலாம். ஒன்றுக்கொன்று வேறுபட்ட பாத்திரங்களில் நடிப்பதற்காகக் காத்திருந்த நாட்களை, அப்போதைய மனநிலையை, சுற்றியிருந்தவர்களின் எதிர்வினையைப் பற்றி விலாவாரியாக எழுதலாம். அது வருங்காலக் கலைஞர்களுக்கு வழிகாட்டும் கையேடாக மாறக்கூடும்.

அபுனைவாக மட்டுமல்லாமல், புனைவாகவும் அவருக்குள் இருக்கும் அனுபவங்கள் விஸ்வரூபமெடுக்கக் கூடும். நடிக்கும் வேட்கையைக் காரணம் காட்டி அதற்கான சந்தர்ப்பங்களை அவர் முடக்கிவிடக் கூடாது. குறைந்தபட்சமாக, இந்த 65வது பிறந்தநாளில் தனது 45 ஆண்டு கால ‘சென்னை வாசம்’ பற்றியாவது தனியாக நூலொன்று உருவாக்க வேண்டும்.

தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு பற்றி ஆய்வுப்படிப்பை மேற்கொண்டவரால், மேற்சொன்னவற்றை எளிதாக நிறைவேற்ற முடியும். நடிப்போடும் எழுத்தோடும் நல்ல பரிச்சயமிக்க கலைஞராக விளங்கும் அவருக்கு, இது ஒரு கடமையும் கூட.. மிக முக்கியமாக, மனதளவில் மனோகரனாக வாழ்ந்துவரும் சார்லியை எதிர்காலத் தலைமுறை போற்றவும் பெருமிதப்படவும் அது வழிவகுக்கும்.

– மாபா

You might also like