பொய்யாய்ப் பழங்கனவாய் மெல்லப் போயினவே!

ஜனவரி 1994, ஈரோட்டில் எழுத்தாளர்களும், ஓவியர்களும் கலந்து உறவாட வைத்தார்கள் கண.குறிஞ்சியும், வழக்கறிஞர் சிதம்பரனும்.

ஈரோட்டு கலை இலக்கிய நிகழ்வில் எனது நெடுங்கவிதை நூலான ’சாம்பல் வார்த்தைகள்’ மிகப் பெரிய இலக்கிய விழாவில் வெளியிடப்பட்டது.

ஓவியர் கே.எம். ஆதிமூலம், விஜயா பதிப்பகம் வேலாயுதம், கோவை ஞானி, தமிழ்நாடன் போன்றவர்கள் வெளியீட்டு விழாவில் பங்கெடுத்தார்கள்.

இதனையொட்டி ஈரோட்டு ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி ஒன்றை ஓவியர் ஆதிமூலம் மூலமாகத் திறந்து வைக்கச் செய்தார் கண.குறிஞ்சி. (கண. குறிஞ்சியை நிழல் ப.தி.அரசு எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்) விழாவுக்கு சாரு.நிவேதிதாவும் வந்திருந்ததாக ஞாபகம்.

”சாம்பல் வார்த்தைகள்“ நூலின் பின் அட்டையில் “மூன்றாம் உலகிலிருந்து ஒரு தமிழ்க் குரல்” என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.

அதிரடி அழகியலோடு படைக்கப்பட்டிருந்த நெடுங்கவிதையில் நவீன கலை வெளிப்பாட்டில் எனது சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி இருந்தேன்.

காவல் நிலையங்களில் பத்மினி, சாவித்திரி போன்றவர்கள் கற்பழிக்கப்பட்டது பற்றியும், மரணத்தின் மூச்சுக் காற்றைப் பிடித்தபடி ஓடும் அகதிகள் பற்றியும்,

இந்தி உச்சரிப்போடு தமிழில் பொய் சொல்லும் விளம்பரங்கள் பற்றியும், விதைகள் அற்ற பழங்களை உருவாக்குவது பற்றியுமான என் பயங்களை காற்றில் உருமாற்றும் மேகங்களைப் போன்ற ஒரு புது வடிவத்தில் படைத்திருந்தேன்.

புத்தகத்தைப் படித்து ரசித்த நண்பர் கவிஞர் வைரமுத்து தன் வீட்டு மொட்டை மாடியில் எனக்கு விருந்தளித்துப் பாராட்டினார்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் இந்நூலைப் பாராட்டி எழுதிய கடிதத்தை இன்னமும் வைத்து இருக்கிறேன்.

’வித்தியாசம்’ பத்திரிகையில் இன்றைய முக்கிய விமர்சகர் எஸ்.சண்முகம் இக்கவிதையின் பின் நவீனத்துவ குணாம்சத்தை குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

விழா முடிந்து இரவு ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் நான், ஆதிமூலம், இந்தி மொழிபெயர்ப்பாளர் சௌரி, இரவு முழுவதும் தூங்காமலேயே பேசியபடி சென்னை வந்து சேர்ந்ததை இன்னமும் மறக்க முடியாத அனுபவம்.

இந்த விழாவில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான புகைப்படத்தை நண்பர் கிரிஷ் ராமதாஸ் முகநூலில் வெளியிட்டு என் நினைவலைகளைக் கிளறி விட்டுவிட்டார். அவருக்கு நன்றி.

புகைப்படத்தில் உள்ளவர்கள்: இடமிருந்து வலம்: கண. குறிஞ்சி, இந்திரன், கோவை ஞானி, ஆதிமூலம், தமிழ்நாடன், நஞ்சுண்டன், ஓவியர் ரஃபீக்.

பின் வரிசையில் நிற்பவர்கள்: கௌதம சித்தார்த்தன், தமிழோசை வசந்தகுமார், ஓவியர். கதிர்வேல், ஈரோடு கிருஷ்ணன், ‘நிழல்’ ப.தி. அரசு, இயக்குநர் தங்கர்பச்சான், தமிழோசை விஜயகுமார், கோவை ஓவியர் ஜீவானந்தம், ஓவியர் சுந்தரன், வேலிறைவன், ஓவியர் உலகநாதன், வழக்கறிஞர் சிதம்பரம் ஆகியோர்.

நன்றி: இந்திரன் ராஜேந்திரன் முகநூல் பதிவு

You might also like