இன்று நமக்குக் கிடைத்திருக்கிற உரிமைகள் யாவும் யாரோ இட்ட பிச்சை அல்ல. பல தலைவர்களின் இடைவிடாத தொடர் போராட்டங்களினால் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர்தான் தமிழகத்தில் ‘புலவர்’ என்று அறியப்படுகிற தோழர் கலியபெருமாள்.
சாதி ஆதிக்கத்தையும், நிலப்பிரபுத்துவ பண்ணையார்களின் அடாவடித் தனத்தையும் எதிர்த்து உழைக்கும் மக்களை தமிழ்த்தேசியம் என்ற ஒற்றை புள்ளியில் இணைத்த மாபெரும் போராளி புலவர் கலியபெருமாள்.
இதற்காக அவரும் அவர் குடும்பம் மொத்தமும் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாதவை. ஆனால், அதை எதையும் எப்போதும் அவர் சொல்லிக்கொண்டதில்லை.
“என்னை பொறுத்தமட்டில் எனது வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும் சித்திரவதைகளையும் எதிர் கொண்டுள்ளேன்.
எனது அரசியல் பணிகளுக்கு எனது குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை எல்லாம் சந்தித்துள்ளது. ஒரு புரட்சியாளர் என்ற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன்.
மரணம் என்பது சாதாரணமானது தான். இந்த மரணம் இறுதியாக என்னை அணைக்கும் நாள் வரை தமிழினத்தின் விடுதலைக்காக தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவதையே எனது இலட்சியமாக நான் பிரகடனப்படுத்துகிறேன்” என்றார்.
ஒரு வழக்கில் புலவர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பொழுது கருணை மனு போட தோழர்கள் வற்புறுத்திய போது “அடிப்படை சமூக மாற்றத்திற்கான போராளியாக உருவெடுக்க முடிந்த என்னால், என் உயிரைக் காக்க கருணை மனு கொடுக்கும் அளவுக்கு தாழ்ந்து போக முடியவில்லை” என்று மறுத்து விட்டார்.
பின் வெளிப்புற அழுத்தத்தின் காரணமாக அப்போதைய தமிழக அரசு அவரை விடுதலை செய்தது.
அவரின் இறுதி வேண்டுகோள் என்பது “முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைத்து சமூகத்திலிருந்தும் சமூகக் கொடுமைகளைக் களைய தோள் கொடுக்கின்றனர்.
ஆனால் பெரும் எண்ணிக்கையில் போராளிகளாக தியாகம் செய்பவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்து வருகிறார்கள்.
எனவே இந்த இரு சமூகத்தின் ஒற்றுமை என்பது நடப்பு அரசியலுக்கும் சரி, எதிர்கால புரட்சிகர அரசியலுக்கும் சரி மிக மிக அவசியமானது.
சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள முற்போக்கு சிந்தனையாளர்களும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தங்களது பங்களிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று இறுதிவரை தமிழ்தேசிய விடுதலைக்காகவே வாழ்ந்தவர் தோழர் புலவர் கலியபெருமாள். செம்மார்ந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.
- நன்றி: மே 17 இயக்கம் இயக்கம்