மறைக்கப்பட்ட வரலாறுகளை மக்களிடம் கொண்டுசென்ற நந்தலாலா!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விடிய விடிய நடத்தும் கலை இரவு விழாக்களில் அண்ணன் திண்டுக்கல் லியோனி அவர்கள் தலைமையில் 30 ஆண்டுகளுக்கு முன், ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா – கண்ணதாசனா?’, ‘பழைய பாடலா புதிய பாடலா?’ போன்ற தலைப்புகளில் நடைபெற்ற பட்டிமன்றங்களில் கவிஞர் நந்தலாலாவின் பேச்சுகளைக் கேட்கத் தொடங்கினேன்.

நகைச்சுவை கலந்த சொற்சுவை மிக்க பேச்சும், கொள்கை சார்ந்த அவரது எழுத்துகளும் சிறப்பாக இருக்கும்.

ஒரு கட்டத்தில் அவருடன் சில மேடைகளில் இணைந்து பங்கேற்கும் வாய்ப்புகள் அமைந்தன. எப்போது சந்தித்தாலும் அன்புடன் நலம் விசாரிப்பார்.

பட்டிமன்றம், கருத்தரங்கம், கவிதை, கட்டுரை ஆகியவற்றடன் வரலாற்று ஆய்வுகளையும் மேற்கொண்டவர் நந்தலாலா.

நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி என் ஏறத்தாழ 700 பக்க புத்தகத்தில் சு.முருகானந்தம், தி.மா.சரவணன், பைம்பொழில் மீரான் ஆகியோருடன் கவிஞர் நந்தலாலாவின் பங்களிப்பும் இணைந்திருக்கும்.

மன்னர்கள் காலம் முதல் மக்களாட்சி காலம் வரையிலான தரவுகளுடனான ஆவணம் அது. ஊறும் வரலாறு என்ற அவருடைய படைப்பும் முக்கியமானது.

அவரிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்திருந்த நிலையில், காலம் அவரை அழைத்துக் கொண்டிருக்கிறது. போய்வாருங்கள்.. நாங்கள் வரும்வரை உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்.

நன்றி: கோவி லெனின் முகநூல் பதிவு

You might also like