ஓராயிரம் ‘பிச்சைக்காரன்’கள் வேண்டும் சசி சார்..!

‘நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா’. இன்றும் இந்தப் பாடல் சிலரது ‘காலர் ட்யூன்’களாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

காரணம், அப்பாடல் இடம்பெற்ற ‘பிச்சைக்காரன்’ படம் சம்பந்தப்பட்டவர்களிடத்தில் ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது.

இயக்குநர் சசி இயக்கிய அப்படம், ‘ரிப்பீட் மோடில்’ பார்ப்பதற்கு ஏற்ற உள்ளடக்கத்தைக் கொண்டது. இத்தனைக்கும் அதிலுள்ள சில காட்சிகள் ‘எவர்க்ரீன்’ திரைப்படத்திற்கான ‘பீல்குட்’ அந்தஸ்தைக் கொண்டிருக்காது.

கிளாசிக் திரைப்படத்திற்கான ‘செம்மையான உருவாக்க இலக்கணங்கள்’ அதில் அதிகம் இருக்காது. கமர்ஷியல் திரைப்படத்திற்கான உள்ளடக்கத்தை மட்டுமே நிறைத்திருந்தாலும், அதனை ‘கிளாசிக்’ ஆக உணரச் செய்ய முடியுமென்பதை அப்படம் நிறைத்திருக்கும்.

காரணம், என்றென்றைக்கும் ரசிகர்களை ஈர்க்கிற ‘அம்மா சென்டிமெண்டை’ சமகால வாழ்வியலோடு பொருந்தும் வகையில் சொன்னதே.

பிச்சை எடுப்பது தீர்வாகுமா?!

விபத்தில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்ற தாயைக் காப்பதற்காக, ஒரு பிரார்த்தனையைச் செய்யத் தயாராகிறார் ஒரு இளம் செல்வந்தர்.

தனது அடையாளங்களைத் துறந்து 48 நாட்கள் தெரியாத இடமொன்றில் பிச்சைக்காரர் ஆக வாழ்கிறார். அந்தக் கணங்களை அவர் எப்படி எதிர்கொண்டார்?

அதில் அவர் சந்தித்த சவால்கள், பிரச்சனைகள், இனிமைகள் என்னென்ன? ஒரு மண்டலம் தான் கட்டிக்காத்த விரதத்தை முடித்ததும், அந்தச் செல்வந்தரின் தாய் உயிர் பிழைத்தாரா?

இதுவே ‘பிச்சைக்காரன்’ படத்தின் கதை.

இந்தக் கதையில், அந்தச் செல்வந்தர் தனது தாயைக் காப்பாற்றப் பல மருத்துவச் சிகிச்சைகளை நாடுவார். அவை பலனளிக்காதபோது, ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலைக்குச் சென்றுவிடுவார்.

அதன்பிறகே, அவரைச் சந்திக்கும் சாமியார் ஒருவர் மேற்கண்ட பரிகாரத்தைச் சொல்வார்.

‘ஒருவேளை அது தீர்வாக அமைந்தால்..’ என்று யோசிக்கும் நாயகன், அதனைத் தவறவிட்டு பின்னாட்களில் வருத்தப்படக்கூடாது என்று நினைப்பார். இதுதான், அதன்பிறகே, அவர் பிச்சைக்காரனாக மாறுவார்.

இந்த விஷயங்களைத் தெளிவுறச் சொன்ன காரணத்தால், இத்திரைப்படத்தில் வரும் லாஜிக் மீறல்கள் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்பவே இல்லை.

முழுக்க, அந்த தாய் – மகன் உறவு மீதுதான் அவர்கள் எண்ணம் நிலைத்திருந்தது. ‘பிச்சைக்காரன்’ படத்தின் பலமே அதுதான்.

இப்படத்தில் பிச்சையெடுப்பவர்களின் தினசரி வாழ்வு, மனித உறுப்பு திருட்டு, செல்வாக்குமிக்கவர்களிடம் கனிவு காட்டும் அதிகார வர்க்கம் என்று பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கும்.

அவையனைத்தும் மையக்கதையில் இருந்து சற்றே விலகி நின்றாலும், காட்சிகளின் ஓட்டத்தைத் தடை செய்யாது.

இன்று ‘பிச்சைக்காரன்’ படத்தைப் பார்க்கிற 2கே கிட்ஸ்கள் பலருக்கு, ‘பிச்சையெடுத்தா எப்படி படுக்கையில கிடக்கிற ஒரு நோயாளியை குணப்படுத்த முடியும்’ என்று தோன்றலாம்.

அப்படிக் கேள்வியெழுப்புகிற பலர் ‘குழு பிரார்த்தனை’களில் ஈடுபாடு கொண்டவர்களாக, கஷ்ட காலங்களில் கடவுள் தன்மையை நம்புகிறவர்களாக இருப்பார்கள்.

இத்திரைப்படத்தின் ஓரிடத்தில் ‘முழுசா நம்புறதுதான் நம்பிக்கையோட பலமே’ என்றொரு வசனம் வரும். அதுவே, நாயகன் மேற்கொள்கிற பிரார்த்தனையை, பரிகாரத்தை அல்லது ஒரு செயலை நியாயப்படுத்தப் போதுமானதாக இருக்கும்.

இக்கதையில் பல இடங்களில் ‘மிகை சித்தரிப்பு’ உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில், அவை எதுவும் துருத்தலாகத் தென்படாது என்பதுதான் ‘பிச்சைக்காரன்’ படத்தின் சிறப்பு.

போலவே, பிச்சை எடுப்பதை ஒரு வேலையாக, தொழிலாக மேற்கொள்பவர்களைத் தனியே இப்படம் அடையாளம் காட்டும். பிச்சையெடுப்பதை வாழ்வுமுறையாகக் கொண்டவர்களையும் தனித்துக் காட்ட இப்படம் உதவும் என்பதையும் மறுக்க முடியாது.

ரசிகர்களை என்றும் ஈர்க்கும்!

ஒரு திரைப்படத்தில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாகச் சுமார் பத்து காட்சிகள் இருந்துவிட்டால் போதும்; மீதமுள்ள இடத்தைப் பாடல்கள், சண்டைக்காட்சிகள், நகைச்சுவை போன்றவை எடுத்துக்கொண்டு, அதனை ஹிட் ஆக்கிவிடும்.

‘பிச்சைக்காரன்’ படத்தில் அப்படி நிறைய காட்சிகள் உண்டு.

ஒரு அழகிய இளம்பெண்ணுடன் வரும் நபர் பிச்சையெடுக்கிறார் என்று அறிந்ததும், போக்குவரத்து காவலர் ஒருவர் ‘எனக்கு இத்தனை வயசாகியும் இன்னும் கல்யாணம் ஆகலடா’ என்ற ரேஞ்ச்சில் ‘வயிற்றெரிச்சலை’ வெளிப்படுத்துவார்.

விஜய் ஆண்டனி, சாத்னா டைடஸ் உடன் தயாளன் எனும் நடிகர் தோன்றும் அக்காட்சி, இன்றும் பலரது நினைவில் இருக்கும்.

நாயகன் பிச்சையெடுக்கும் தொழில் செய்கிறார் என்று தெரிந்ததும் வெதும்பும் நாயகி, அதற்கான காரணத்தைத் தற்செயலாக அறிந்துகொள்வார்.

அதன்பிறகு, அவரிடத்தில் நிகழ்கிற மாற்றங்கள் திரைக்கதையில் அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கும்.

பங்காளிச் சண்டையில், மறைந்த சகோதரரின் மனைவியும் மகனும் நடுத்தெருவுக்கு வர வேண்டுமேன்று ‘வன்மம்’ சுமந்தவாறே இக்கதையில் ஒரு தொழிலதிபர் பாத்திரம் உலவும்.

‘அவன் எதுக்கு பிச்சையெடுக்கிறான்’ என்று கேள்வி எழுப்பியவாறே காருக்குள் சென்று, ‘எதுக்கு பிச்சை எடுத்தா என்ன, அவன் பிச்சை எடுக்கிற நிலைமைக்கு வந்துட்டானே’ என்று குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார். அந்தக் காரே அங்குமிங்கும் அசைந்தாடும். இந்தக் காட்சியும் படத்தில் ரசிக்கப்பட்ட ஒன்று.

அந்தத் தொழிலதிபர் தரும் அடிகளை, அமில வார்த்தைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், ஒருகட்டத்தில் அந்த ஓட்டுநர் அவரை வெளுத்தெடுப்பார்.

‘உன்கிட்ட வாங்குன கடனுக்காகத்தான் இவ்ளோ நாளா கைய கட்டி வாயைப் பொத்திகிட்டு வேலை பார்த்துட்டு இருந்தேன்’ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுச் செல்வார். அந்தக் காட்சிக்கு தியேட்டரே குலுங்கியது.

இது போக, ‘இப்படியெல்லாம் மூஞ்சை வச்சிருந்தா எப்படி பிச்சை போடுவாங்க’ என்று விஜய் ஆண்டனியை மூர்த்தி கிண்டலடிக்கும் காட்சியில் சிரிப்புச் சத்தம் ‘ஹோ’வென எழும்.

நாயகனை அடித்து துவைத்து ஒரு அறையில் அடைத்து வைப்பார் ஒரு வில்லன். அவரது அடியாள் ஒருவர் நாயகனைத் தப்பிக்க விடுவார். ‘நீ எனக்கு இனிமே ரைட்டு இல்ல லெப்ட்டு’ என்று வில்லன் அவரை அவமானப்படுத்தியது அதற்கான காரணமாக இருக்கும்.

இப்படி முழுக்க ‘நாயக துதி’ பாடாமல் வேறு பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இதில் பல காட்சிகள் உண்டு.

மோகன் ராமன் இடம்பெற்ற ‘புதுச்சேரி கார் ரிஜிஸ்ட்ரேஷன்’ காட்சி, விஜய் ஆண்டனியைத் தேடி வந்து பக்ஸ் பேசும் காட்சி, சாத்னா டைட்டஸிடம் அவரது தாயாக நடித்தவர் பேசுகிற காட்சி போன்றவை அந்த வரிசையில் இடம்பெறுபவை.

‘பிச்சையெடுக்கிற காட்சிகள் நகைச்சுவையாக, ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உரியதாக, நெகிழ வைப்பதாக ஒருபக்கம் இருக்கட்டும்; இன்னொரு பக்கம் நாயகி உடன் இணைந்து நாயகன் சுவிட்சர்லாந்தில் ‘டூயட்’ பாடட்டும்’ என்கிற வேலையை இப்படத்தில் காண முடியாது.

கிளைமேக்ஸில் அம்மா சென்டிமெண்ட்டை பேசுனா போச்சு’ என்ற நினைப்புடன், ‘இதெல்லாம் தான் கமர்ஷியல் சினிமா அம்சங்கள்’ என்று தேவையற்ற குப்பைகளைத் திரைக்கதையில் திணிக்கிற வேலைகள் இதில் இடம்பெறவில்லை.

‘ஒரு திரைப்படத்தின் டார்கெட் ஆடியன்ஸ் யார்’ என்பதில் தெளிவுடன் இருந்தால் மட்டுமே ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’டில் இத்தகைய நேக்குபோக்குகளைப் பின்பற்ற முடியும்.

அந்த வகையில், ‘பிச்சைக்காரன்’ படத்தின் இயக்குநர் சசி எப்போதும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துபவர். 1998இல் ‘சொல்லாமலே’ படத்தில் அறிமுகமான இவர் இதுவரை எட்டு படங்களே இயக்கியிருக்கிறார்.

அதிலொன்று ‘சொல்லாமலே’ படத்தின் தெலுங்கு ரீமேக். அதுவே, தன் திரைப்படங்கள் எப்படி ரசிகர்களால் எதிர்கொள்ளப்பட வேண்டுமென்ற அவரது விருப்பத்தைக் காட்டுகிறது.

வாழ்நாள் முழுக்க சினிமாவோடு சேர்ந்தியங்க வேண்டுமென்ற ஆசையை வெளிப்படுத்துகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படத்தைப் பார்த்துவிட்டு விஆர் மாலில் இருந்து வெளியே வந்தபோது, இயக்குநர் ஸ்டேன்லி உடன் சசி சார் நின்று கொண்டிருந்தார்.

அவருக்கு ‘வணக்கம்’ தெரிவித்தபோது, ‘என்ன படம் பார்த்துட்டு வர்றீங்க’ என்று கேட்டார். சொன்னேன். ‘படம் எப்படியிருக்கு’ என்றார். அப்படத்தின் கிளைமேக்ஸ் என்னைத் திருப்திப்படுத்தவில்லை என்று சொன்னபோது, ‘ஏன்’ என்று கேட்டுக்கொண்டார்.

லிப்டில் ஏறியபிறகு ‘நூறு கோடி வானவில் படம் எப்போ வரும் சார்’ என்று கேட்டபோது, ‘சீக்கிரம் வந்துரும்’ என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார்.

‘எதிர்பார்த்துட்டு இருக்கோம் சார்’ என்று சொல்லிவிட்டு லிப்டை விட்டு வெளியே வந்தேன். அதன்பிறகே, ‘இன்னும் சில நிமிடங்கள் உரையாடியிருக்கலாமோ’ என்று மனதுக்குள் தோன்றியது.

யாரென்று தெரியாத ஒரு நபரை இயக்குநர் சசி அணுகியவிதமே மேலே சொன்னது. தியேட்டருக்கு வரும் தனது ரசிகர்களிடத்திலும், தன் படங்களின் வழியே அவர் அத்தகைய கனிவையே வெளிப்படுத்துகிறார். அதே நேரத்தில், தனித்துவமான திரையனுபவத்தைப் பரிசளிக்கிறார்.

அந்தக் கனிவைச் சுவைக்க வாய்ப்பு தரும் வகையில், ‘ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகைமையில் படங்கள் இயக்க வேண்டும்’ என்கிற உங்கள் (சசி சார்) கொள்கையில் இருந்து விலகி ஓராயிரம் ‘பிச்சைக்காரன்’களைக் கொடுக்க வேண்டும் நீங்கள்..!

ஏனென்றால், ரசிகர்களிடம் கனிவைக் கொட்டுகிற படைப்பாளிகள் இப்போது அருகிக் கொண்டிருக்கிறார்கள்!

– உதய் பாடகலிங்கம்

#பிச்சைக்காரன் #Pichaikkaran #இயக்குநர்_சசி #Director_Sasi #விஜய்_ஆண்டனி #Vijay_antony #சாத்னா_டைடஸ் #Satna_Titus #தயாளன் #Dayalan #மூர்த்தி #Moorthy #நூறு_கோடி_வானவில் #Nooru_Kodi_Vaanavil

You might also like