கால மாற்றத்தால் சாதியமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்!

நூல் அறிமுகம்: ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ சாதியினாற் சுட்ட வடு!

நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு என்பவை குறித்த பார்வையையும் அவை விஸ்தரித்திருக்கின்றன.

நீண்டகாலம் கழித்துத் தமிழ் தலித் தன்வரலாற்று வரிசையில் கச்சிதமான வருகையாக திருக்குமரனின் இந்நூல் அமைந்திருக்கிறது.

சாதியமைப்பில் பல்வேறு மாற்றங்கள் நடந்திருக்கும் சமகாலச் சூழலில் அதன் இருப்பு எத்தகைய வடிவங்களில் தங்கிக் கிடக்கிறது என்பதை 2000த்திற்குப் பிறகு வாழ நேர்ந்த தலித் இளைஞர் ஒருவரின் சுய அனுபவத்தின் வழியே நுட்பமாகக் காட்டுகிறது இந்நூல்.

தலித்துகள்மீது முன்புபோலச் சாதியை எளிதாகப் பிரயோகித்துவிட முடியாத அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் சாதி எவ்வாறு வெவ்வேறு வடிவங்களில் இயங்கத் தொடங்கியிருக்கிறது என்பதையும் இந்நூல் விரித்திருக்கிறது.

தஞ்சை வட்டாரப் பின்னணியிலிருந்து தலித் வாழ்வின் வலி மிகுந்த அனுபவங்களைச் சித்திரமாக்கியிருக்கிறது இந்தத் தன்வரலாறு.

தலித் வாழ்க்கை என்றால் இழிவைச் சுமப்பது அல்லது கிண்டல் செய்து கடப்பது என்றிருந்த நிலையில் எதிர்ப்பை முன்வைக்கும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வது இந்நூலின் தனித்துவம். தலித் வாழ்வின் வலிகளை மட்டுமின்றிக் காதல், தோழமை முதலான வண்ணங்களையும் கொண்ட நூல் இது.

தலித்தாகப் பிறந்த ஒருவர் கல்வி, வேலைவாய்ப்பு, பணி உலகம், நட்புலகம், காதல், அரசியல் என எந்த ஒரு தளத்திலும் சாதி என்னும் இழிவைச் சுமந்துகொண்டே வாழ வேண்டியிருக்கிறது.

அவர்கள் எந்த உயரத்துக்குச் சென்றாலும், அவர்களுடைய வளர்ச்சிகளும் சாதனைகளும் இந்தச் சுமையிலிருந்து அவர்களை முழுவதுமாக விடுவித்துவிடுவதில்லை.

இத்தகைய அனுபவங்களை, அவை தரும் ஆழமான காயங்களை அவற்றின் ரத்தக் கவிச்சியோடு எழுதியிருக்கிறார் திருக்குமரன் கணேசன்.

பாசாங்கற்ற மொழியில் தன் அனுபவங்களைக் கூறிச்செல்லும் கணேசனின் எழுத்து பொதுச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிச் சிறிதேனும் வெட்கப்படவும் சுய பரிசோதனை மேற்கொள்ளவும் வைக்கக்கூடிய வலிமை படைத்தது.

மொத்தத்தில் சாதிய ஒடுக்குமுறையையும், அது தரும் வலியையும் தமிழில் பேசும் முக்கியமான நூல்களின் வரிசையில் இடம்பெறத்தக்க ஒன்று ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’.

நன்றி: அருஞ்சொல்

நூல்: கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்!
(சாதியினாற் சுட்ட வடு)
ஆசிரியர்: திருக்குமரன் கணேசன்
காலச்சுவடு பதிப்பகம்

விலை: ரூ.166/-

You might also like