மக்கள் தொகையில் சீனாவுக்கு போட்டியாக, இந்தியா புலிப்பாய்ச்சலில் ‘முன்னேறி’ கொண்டிருந்தபோது, 1970-களில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரப்படுத்தியது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டின. இதனால், மக்கள் தொகையும் கணிசமாக குறைந்தது. ஆனால் உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்கள், இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை.
குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தைக் கர்ம சிரத்தையுடன் நிறைவேற்றியது, 50 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்துக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
‘தமிழ்நாட்டில் மக்கள் தொகை மிகவும் கம்மி.. இதனால் உங்களிடம் இருந்து 8 எம்.பி. தொகுதிகளை பறிக்கப்போகிறோம்’ என மத்திய அரசு சூசகமாக உணர்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் விசுவரூபம் எடுத்துள்ள விவகாரத்தை, விரிவாகவே அலசலாம்.
நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளை மறு வரையறை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எப்படி மறுவரை செய்வார்கள்?
இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
ஒரு வாய்ப்பு:
மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை, மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்கலாம். இப்போது இந்தியாவில் உள்ள மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை -543. இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப, எம்.பி.க்கள் எண்ணிக்கையை அதிகரித்தால், மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 848 ஆக உயரும்.
அப்படி வரையறை செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் இப்போதுள்ள எம்.பி,க்கள் எண்ணிக்கை 39–ல் இருந்து 49 ஆக உயரும். 10 தொகுதி கூடுதலாக கிடைக்கும். சந்தோஷப்பட வேண்டிய சங்கதிதானே என்று தோணலாம். இல்லை.
மக்கள் தொகையைக் குறைப்பது குறித்து, கவலையே இல்லாத, உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு , 143 எம்.பி.க்கள் கிடைப்பார்கள். இப்போது அங்குள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை 80. நாட்டிலேயே அதிக எம்.பி.க்கள் அங்குதான் உள்ளனர்.
முதல் வாய்ப்பை பார்த்து விட்டோம். இன்னொரு வாய்ப்பு என்ன?
எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கையை மாற்றாமல் வரையறை செய்வது. நாட்டின் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 543 ஆகவே இருக்கும். ஆனால், தமிழகம் 8 தொகுதிகளை இழக்க வேண்டிவரும். இப்போதுள்ள 39, வெறும் 31 ஆக குறைந்து போகும்.
உத்தரப்பிரதேசத்துக்கு கூடுதலாக 11 இடங்கள் கிடைக்கும். அரசாங்கத் திட்டத்தை நிறைவேற்றிய நமக்கு- தண்டனை. உதாசீனம் செய்த உ.பி.க்கு பரிசுக் கோப்பை.
ஒழுங்காக வேலை செய்த ஊழியனுக்கு சம்பளத்தைக் குறைப்பதும், சோம்பேறிக்கு ‘போனஸ்’ கொடுப்பதற்கும், ஒப்பானது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு.
அனைத்துக்கட்சி கூட்டம்
இது குறித்து விவாதிக்க அடுத்த மாதம் 5-ம் தேதி, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியின் சாராம்சம்:
‘’தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தென் மாநிலங்கள் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது – மத்திய அரசு, 2026-ம் ஆண்டு, மக்களவைத் தொகுதி எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது – இது பெரும்பாலும், மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் செய்யப்படுகிறது.
மக்கள் தொகை குறைவாக இருக்கிற காரணத்தால், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், தமிழகத்தில் எட்டு தொகுதிகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் – அதாவது தமிழகத்திற்கு, 31 தொகுதிகள் தான் இருக்கும்” என தமிழகத்தின் ஆதங்கத்தை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார், முதலமைச்சர் ஸ்டாலின்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தொகை குறைவாக உள்ள காரணத்தால், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல –தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியும் ஆகும்.
– பாப்பாங்குளம் பாரதி.