இளமையோடு இருக்க காலையில் தண்ணீர் அருந்துங்கள்!

ஒவ்வொரு மனிதரிடமும் தனித்துவமாகச் சில பழக்க வழக்கங்கள் இருக்கும். அவற்றில் மிகச்சில மட்டுமே மரபுரீதியாகத் தொற்றியதாக இருக்கும்.

மற்றபடி பெற்றோர், குடும்ப உறவுகள், நட்பு வட்டத்தில் உள்ளவர்கள், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், புகழ்பெற்ற பிரபலங்களிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் சிலவற்றைப் பின்தொடர்வது அவர்களுக்கு எண்ணற்ற பயன்களைத் தரும்.

அந்த கற்பித்தலும் கற்றலும் நேரடியாக நிகழ வேண்டுமென்பதில்லை. நாம் செவி வழியாகக் கேள்விப்படும் தகவல்களோ, பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களின் வழியே நம்மை அடையும் விஷயங்களோ, சமூகவலைதளங்களில் பகிரப்படுபவற்றில் நூறு சதவிகிதம் சரியானவையோ அப்படியொரு விளைவை ஏற்படுத்தக்கூடும்.

‘நான் இளமையாக இருக்க, காலையில் எழுந்ததும் தண்ணீர் அருந்துவது ஒரு காரணமாக இருக்கலாம்’ என்று நடிகர் ரவி மோகன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்ததை அப்படித்தான் நோக்குகிறேன்.

செய்தியாளர்களின் கேள்விக்குச் சாதாரணமாக அவர் அளித்த பதிலில் இந்த தகவல் வெளிப்பட்டுள்ளது.

ஆனால், அவரை ஆதர்சமாகக் கருதுபவர்களுக்கு அதுவொரு அரிய தகவல். ‘இதைத்தான் இவர் பாலோ பண்றாரா’ என்று அவரது ரசிகர்கள் அல்லாதவர்கள் கூட அப்பழக்கத்தைத் தொடரக்கூடும். பிரபலமாக இருப்பதனால் கிடைக்கும் நன்மை அது.

காலையில் பருக வேண்டும்!

பெரிதாக நோய் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதால் பெரிதாகக் கெட்ட விளைவுகள் ஏற்படாது; மாறாக, அது அவரது ஆரோக்கியத்தை நீட்டிக்கும் என்றே மருத்துவ உலகம் சொல்கிறது.

இரவில் படுக்கச் செல்வதற்குச் சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக உணவு உண்ணும் பழக்கம் இருந்தால் போதும்; தூங்குவதற்கு முன்பாகச் சிறிதளவு தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக உருவாகும்.

அதனால், உறக்கத்தின் நடுவே தாகமெடுத்து கண் விழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதேநேரத்தில், தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற உந்துதல் தானாக வரும். குளிர்காலத்தைத் தவிர்த்து மற்ற காலங்களில் இப்படித் தாகமெடுப்பது பொதுவான இயல்பு.

அதனால், பல் தேய்த்துவிட்டோ அல்லது தேய்க்காமலோ சிலர் தண்ணீர் அருந்துவார்கள்.

பாத்திரத்தில் இருக்கும் நீரை அண்ணாந்து குடிப்பது சரியான வழக்கமல்ல என்று கருதுவோர் டம்ளர் அல்லது செம்பில் உதடுகள் படர நீரைச் சுவைக்கலாம். நீரானது மெல்ல உணவுக் குழாயில் படர்வதை உணரும் அளவுக்குப் பருக வேண்டும்.

சுமார் ஒரு லிட்டர் வரை தண்ணீர் குடித்தபிறகு, சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்திருந்தால் போதும்; தியானிக்க வேண்டுமென்கிற எந்தக் கட்டாயமும் இல்லை.

அதன்பிறகு, ‘வருது வருது விலகு விலகு’ என்று பாடல் பாடாத குறையாக ‘டாய்லெட்’ நோக்கி ஓட வேண்டியிருக்கும். அங்கும் கூட தினசரி, வார இதழ் படிப்பது, மொபைல் நோண்டுவது என்கிற தேவைகள் ஏற்படாது.

‘போனமா வந்தமான்னு இருக்கணும்’ என்று மனதுக்குப் பிடித்தவர்கள் ‘கறாராக’ச் சொல்வதுபோல அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டியிருக்கும்.

பல பேருக்கு இந்த ஒரு விஷயம்தான், ஒரு நாளின் தொடக்கத்தில் மிகப்பெரிய சவாலாகத் தெரியும். அது நிகழ்ந்தபிறகு மற்றதெல்லாம் ‘ஜுஜுபி’ என்றாகிவிடும்.

காலையிலேயே தண்ணீர் குடிப்பதால் உடலிலுள்ள கழிவுகள் எளிதாக வெளியேறும். முக்கியமாக, மேல் வயிறு காலியாக இருக்கும். இதனால், பசி ஏற்படும்.

நம்மில் பலர் ‘பசி இல்ல’ என்று சொல்லி, காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து ‘ப்ரஞ்ச்’ என்ற பெயரில் உணவு உண்ணுகிறோம். இந்த வழக்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

முறையற்ற உணவுப்பழக்கம், தாமதமான தூக்கம், சுற்றுச்சூழல் மாறுபாடுகள், பணியிடத்தில் மன அழுத்தம் என்று பல பிரச்சனைகளால் சிக்கித் தவிப்பவர்களுக்கு உடலில் சூடு அதிகரிப்பது ஒரு முக்கியப் பிரச்சனையாகத் தென்படும்.

அதற்கு இளநீர், முளைகட்டிய வெந்தயம் உட்படப் பல உணவுப்பொருட்களைச் சிலர் பரிந்துரைப்பார்கள்.

சிலர் தமக்குத் தெரிந்த மருத்துவமுறைகளை வலியுறுத்துவார்கள். அவற்றைவிட, காலையில் தண்ணீர் குடிப்பது எளிதாகச் சூட்டைத் தணிக்கும்.

தொடர்ந்து நீர் அருந்தும் பழக்கம் அந்நாள் முழுவதும் தொடரச் செய்யவும் இது வழி வகுக்கும். அதனால் ‘டீஹைட்ரேஷன்’ பிரச்சனை உருவாகாது.

இது போக வயிற்றில் கொழுப்புகள் படியாமல் இருக்க, சருமத்தைப் பொலிவானதாக ஆக்க, நோய் எதிர்ப்புச் சக்தி பெருக, தலைமுடி வளர்ச்சி அதிகமாக, மூளை சுறுசுறுப்பாகச் செயல்பட என்ற பலவற்றுக்கு உதவுகிறது காலையில் நீர் அருந்தும் வழக்கம்.

வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை வெளியேறும் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் காலையிலும் சரி, அதன்பின்னும் சரி, கொஞ்சம் அதிகமாகவே தண்ணீர் குடிக்கலாம்.

குறைந்தபட்சமாக 3 லிட்டர் அல்லது 8 டம்ளர் நீர் குடிக்க வேண்டும் என்கிற கணக்கு ஒவ்வொரு மனிதரின் உடல்நிலைக்கும் ஏற்ப மாறும்.

உடல்நலம் சீராகி, ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, நமது தினசரி செயல்பாட்டில் அசாத்திய மாற்றம் தென்படும்.

தண்ணீரில் எலுமிச்சம்பழத்தை போட்டு வைப்பது, நன்னாரி வேர் இடுவது, இஞ்சிச்சாற்றைக் கலந்து குடிப்பது உட்படச் சில வழக்கங்களைச் சிலர் பின்பற்றுவார்கள்.

தகுந்த நபர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கும்பட்சத்தில், அவை பலன் தரக்கூடும்.

தனிப்பட்ட நன்மைகள்!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது என்பது அவரவர் விருப்பம்.

ஆனால், அதனைச் செய்தால் நமக்கு நன்மை கிடைக்கும் எனும்போது பின்பற்றாமல் இருக்க முடியுமா?

எனது பதின்ம வயதில் ஒரு பத்திரிகையில் இது பற்றிய தகவலைப் படித்தேன். நடிகர் சிவகுமார் அவர்கள் இதனைச் சொன்னதாக, அந்த துணுக்கில் சொல்லப்பட்டிருந்தது.

காலையில் எழுந்ததும் வயிறு முட்டத் தண்ணீர் குடித்தால், காலைக் கடன்களை முடித்துவிட்டு பிற வேலைகளில் எளிதாகக் கவனம் செலுத்த முடியும் என்ற தொனியில் சிவகுமாரின் கருத்து இடம்பெற்றிருந்தது.

‘ஓ அதனாலதான் அவர் இளமைப் பொலிவோடு இருக்காரா’ என்று அந்த நாள் முதல் அவ்வழக்கத்தினைக் கடைப்பிடிக்கத் தொடங்கினேன்.

அதுநாள்வரை, அதிகாலையில் எழுந்து பயணம் மேற்கொண்டால் வாந்தி வரும் பாதிப்பு எனக்கிருந்தது. காலையில் தண்ணீர் குடிக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டபிறகு, அது மெல்ல நின்றுபோனதை உணர முடிந்தது.

போலவே, காலைக்கடன்களை கழிப்பது முதல் இதர வேலைகள் எல்லாம் பெரிதாகத் தாமதமாகாது. அந்த நாட்களில் முறையற்ற உணவுப்பழக்கம், இரவில் வெகுநேரம் விழித்திருத்தல், தேவையற்ற மன அழுத்தம் என்று பல பிரச்சனைகள் இருந்தன.

அதனை மீறி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அவ்வழக்கமே துணை நின்றதாக நம்புகிறேன்.

ஒருகட்டத்தில் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துவதால் உடலில் சில பக்கவிளைவுகள் ஏற்பட, பருகும் நீரின் அளவைக் குறைத்துவிட்டேன்.

‘பசித்தால் சாப்பிடுவது’ போன்று, தாகமெடுத்தால் தண்ணீர் பருகுவது என்ற நிலை இப்போதிருக்கிறது.

அதற்கேற்றவாறு, பெரும்பாலும் காலையில் தாகம் எடுக்கிற அளவுக்குப் பருவச்சூழலும் இருக்கிறது.

ஆதலால், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இதுவரை இல்லை என்றால், இனிமேல் அதனை கைக்கொள்வதில் எந்த அசௌகர்யமும் ஏற்படாது.

உணவு உண்ணும்போதும், அதன்பின்னரும் இரண்டு மணி நேரம் வரை தண்ணீர் குடிக்கக் கூடாது என்று தனக்குத் தெரிந்தவர்களிடம் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி வந்ததாக, சிறு வயதில் ஒரு பத்திரிகையில் வாசித்திருக்கிறேன். அடுத்த நாள் முதல் அதனைப் பின்பற்றி வருகிறேன்.

சில மாதங்களுக்கு முன்னர் நடிகை குட்டி பத்மினி தனது யூடியூப் சேனலில் பகிர்ந்த காணொலியொன்றில் இதே போன்றதொரு தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.

ஒரு படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர். கறாராகத் தன்னிடம் அதனைச் சொன்னதாகத் தெரிவித்திருக்கிறார்.

என்ன சொன்னாலும், இந்த வழக்கத்தைப் பின்பற்றுவதோ அல்லது பிறருக்குப் பரிந்துரைப்பதோ எளிதான விஷயமல்ல.

‘சாப்பிடும்போது விக்கிக்கிடாதா’, ‘சாப்பிட்டபிறகு வயிறு முட்ட தண்ணி குடிச்சாதான் நல்லது’ என்று விதவிதமாக, அதற்கெதிரான கருத்துகளை எதிர்கொள்ள வேண்டும்.

அவற்றை மீறி, அந்த வழக்கம் ஏதோ ஒரு வகையில் நன்மை பயப்பதை அனுபவத்தில் உணர முடிந்தது.

‘அவ்வழக்கத்தைத் தொடர முடியாது’ எனும் சூழல் நேரிடுகையில், அதற்குப் பதிலாக இன்னொன்றைக் கைக்கொள்வது தவறில்லை, அதனைக் கைவிடுவதும் தவறில்லை.

போலவே, காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு நன்மை அளிக்கும் ஒரு வழக்கம் தான். குழந்தைகளோ, பெரியவர்களோ, நடுத்தர வயதினரோ, எவருக்கும் இது பொருந்தும்.

ஆதலால், ‘நான் எழுந்ததும் டீ காபி தான் குடிப்பேன்’ என்று அடம்பிடிப்பவர்களிடம் மல்லுக்கட்டத் தேவையில்லை.

‘தாகம் இருக்கிறதா’ என்ற கேள்வியைக் கேட்டால் போதும்; அவர்கள் சொல்லும் பதிலை வைத்து, தண்ணீர் பாத்திரத்தைக் கையில் தந்துவிடலாம்.

‘தாகமில்லை’ என்று சொன்னாலும் கவலையில்லை; அடுத்த சில நிமிடங்களில் ‘இதோ வந்துட்டேன்’ என்று தாகம் தன்னை முன்னறிவிக்க, அந்த சொற்கள் போதுமானதாக இருக்கும்.

அதன்பிறகு, ‘நானும் இங்கதானே இருக்கேன்’ என்று பசி தலையை உயர்த்தும்.

பசியும் தாகமும் வரும்போது, அவற்றைத் தீர்க்கும் அளவுக்குப் புரிதல் இருந்தாலே ஆரோக்கியம் தானாகக் கைகூடி வந்துவிடாதா?

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like