புதிய முதலமைச்சர் ரேகாவின் ’பயோடேட்டா’ !
நாட்டின் தலைநகரான டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 3-வது முறையாக இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. அந்த கட்சி 67 தொகுதிகளில் காப்புத்தொகையை இழந்தது.
8-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், முதலமைச்சர் யார் என்பது உடனடியாக அறிவிக்கப்படவில்லை. வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்ததால், இந்த தாமதம் ஏற்பட்டது. அவர் தாயகம் திரும்பியதும், புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
மோடி இந்தியா திரும்பிய நிலையில், டெல்லியில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 48 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது. இறுதியில் 50 வயதான ரேகா குப்தா முதலமைச்சராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்ததற்கான கடிதத்துடன் ஆளுநர் சக்சேனாவை ரேகா குப்தா நேற்று இரவு சந்தித்தார்.
ஆட்சி அமைக்க ரேகா உரிமை கோரினார். அதை சக்சேனா ஏற்றுக் கொண்டதையடுத்து இன்று புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.
யார் இந்த ரேகா ?
டெல்லியின் புதிய ‘ராணி’ ரேகா குப்தா, அரியானா மாநிலத்தில் 1974 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தை ஸ்டேட் வங்கி அதிகாரி. ரேகாவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே, அவர்கள் குடும்பம், டெல்லிக்கு குடிபுகுந்தது.
ஆரம்பக்கல்வி தொடங்கி கல்லூரி கல்வி வரை டெல்லியிலேயே படித்த ரேகா, டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாலிமார் பார்க் சட்டமன்ற தொகுதியில் 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரிடம் தோற்றவர், ஆம் ஆத்மியின் பந்தனா குமாரி. சட்டப்பேரவைத் தேர்தலில் ரேகா போட்டியிட்டது, இதுவே முதன்முறை.
மூன்று முறை கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தெற்கு டெல்லி நகராட்சியின் மேயராகவும் பணியாற்றி உள்ளார்.
ரேகா, டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சர் ஆவார். இதற்கு முன் சுஷ்மா சுவராஜ், (பாஜக), ஷீலா தீட்ஷித் (காங்கிரஸ்), அதிஷி (ஆம் ஆத்மி) ஆகியோர் டெல்லியை ஆண்டுள்ள மகளிர்.
முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதும் ரேகா, ”நாடு முழுவதும் உள்ள பெண்கள் பெருமிதம் கொள்ளும் தருணம் இது. டெல்லியை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வேன்” என சபதம் எடுத்தார்.
– பாப்பாங்குளம் பாரதி.