1. முஸ்லீம்கள் விகிதாசார முறையில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று 1900-லிருந்து கிளர்ச்சி செய்திருக்கிறார்கள். இதை காங்கிரஸ் பெரும்பான்மை எதிர்த்தது. ஆனால், இந்த எதிர்ப்பு தோற்றுப் போய் வெள்ளையர்களும் மறுக்க முடியாமல் போய் முஸ்லீம்களுக்கு முதன்முதலில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டியதாயிற்று.
2. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இவர்களின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது இன்று நேற்று சங்கதியன்று. 1916, 17-லேயே பேசப்பட்ட விஷயம்.
3. 1916 வரை எதிரெதிர் கட்சியில் நின்று ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்த சர். பிட்டி ‘தியாகராயரும், டி.எம். நாயரும் தங்களின் சண்டையால் வேறொருவர் நலம் அடைவதைப் புரிந்த கொண்டு ஒன்றுபட்டு ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ கண்டார்கள்.
4. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் பிராமணர் அல்லாத இந்துக்கள், ஆதி திராவிடர்கள், முஸ்லீம்கள், கிறித்தவர்கள் ஆகியோருக்கு விகிதாசார இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரியது.
ஆக, தேர்தல் தொகுதி, வாக்குரிமை நிலையிலிருந்து வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு ஆகியவற்றிற்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கை பரவியது.
5. அதே காலகட்டத்தில் சென்னை மாகாணச் சங்கம் தொடங்கப்பட்டது. அதில் கேசவமேனன் தலைவர், பெரியார் துணைத் தலைவர், டாக்டர் வரதராஜுலு நாயுடு செயலாளர். அப்போதுதான் பிராமணர் அல்லாதாருக்கு 100-ல் 50 இடம் என்னும் ஒதுக்கீடு ஒப்புக் கொள்ளப்பட்டது.
பிறகு காங்கிரஸ் பணித்திட்டம் என்கிற பெயரில் பிராமணர் அல்லாதோருக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு என்று காங்கிரஸ் கமிட்டியே ஒப்புக் கொண்டது. ஆக, 1916-ல் காங்கிரஸ் கட்சி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொண்ட வரலாறு இது.
6. 1921-ல் காஞ்சிபுரத்தில் திரு.வி.கலியாண சுந்தர முதலியார் தலைமையில் காங்கிரஸ் மாநாடு. அதற்கு முதல் நாள் பிராமணரல்லாதார் மாநாடு ஒன்று கூட்டி வகுப்புவாரித் தீர்மானம் இயற்றி காங்கிரஸ் கமிட்டியில் வைத்தார் பெரியார்.
திடீரென்று காங்கிரஸ் அதை எதிர்த்தது. இந்தப் பிரச்சினையில்தான் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். வகுப்புவாரி உரிமைக்காகத் தான் அவர், காங்கிரசை விட்டு வெளியேறினார்.
7. பிராமணர் அல்லாதோர் நலனில் அக்கறை கொண்ட தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் அமைச்சரவை 1921-ல் இட ஒதுக்கீடு குறித்த வகுப்புவாரி ஆணையைப் பிரப்பித்தது. (G.O.NO. 613/16.9.1921)
அதன்படி பிராமணர் அல்லாதவருக்கு 44%, பிராமணருக்கு 16%, முஸ்லிம்களுக்கு 16% , கிறித்துவருக்கு 16%, தாழ்த்தப்பட்டோருக்கு 8% என்று அறிவிக்கப்பட்டது.
பிராமணர் எதிர்ப்பால் இந்த ஆணை சென்னை மாநிலத்தில் 1927 வரை நடைமுறைக்கு வரவில்லை. 1927-ல் டாக்டர் சுப்பராயன், முத்தையா முதலியார் அமைச்சரவை முதன்முதலில் இந்த வகுப்பு வாரி ஆணையை அமல் செய்தது. 1929-ல் எல்லாத் துறைகளிலும் வகுப்புரிமை நடைமுறைக்கு வந்தது. 1929-37 கால கட்டத்தில் தொடர்ந்து அமலானது.
8. இதற்கிடையில் சென்னை மாகாண அரசினரால் வேலையில் மட்டும் அளிக்கப்பட்ட வகுப்புவாரி ஒதுக்கீடு 1940 முதல் கல்வி வாய்ப்பிலும் செயல்படுத்தப்பட்டது.
1947-ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிற்பட்ட வகுப்பு (பிராமணர் அல்லாதார்)’ பிரிவுக்கு 14% தனி இட ஒதுக்கீடு வழங்கினார். (ஆணை தேதி 24.3.1947). இதன்படி முற்பட்டோர் 44%, பிற்பட்டோர் 14%, பிராமணர் 14%, தாழ்த்தப்பட்டோர் 14%, கிறித்துவர் 7%, முஸ்லிம் 7% வகுப்புரிமை பெற்றனர்.
9. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் திராவிடர் இயக்கம், காங்கிரஸ் இயக்கம் என்ற பேதமில்லாமல் இட ஒதுக்கீட்டுக்காகக் கிளர்ச்சி நடைபெற்றது. அதனால் இந்திய அரசியல் சட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவி வந்த இட ஒதுக்கீட்டுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
அதுவரை அரசியல் சட்டத்தின் 16 (4) பிரிவின் கீழ் வேலை வாய்ப்புக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருந்தது.
பெரியார் போராட்டத்தின் காரணமாக முதல் சட்டத் திருத்தத்தில் 15 (4) பிரிவு புதிதாகச் சேர்க்கப்பட்டது. இப்பிரிவு வேலை வாய்ப்பு மட்டுமின்றி கல்வியிலும் இட ஒதுக்கீடு என்பதைக் கொண்டு வந்தது.
10. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டோருக்கு 16%, பிற்படுத்தப்பட்டோருக்கு 25% இட ஒதுக்கீடு இருந்தது. இந்நிலை காமராஜர் ஆட்சிக்காலம் வரை நீடித்தது.
கருணாநிதி காலத்தில் அது முறையே 18% என்றும் 31% என்றும் உயர்ந்தது. பிறகு எம்.ஜி.ஆர். 31% லிருந்து பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தினார். 1% மலைவாழ் மக்களுக்கு என்கிற நிலையில் தமிழகத்தில் மொத்த இட ஒதுக்கீடு 69% ஆனது.
– கீதாச்சார்யன்.
புதிய பார்வை, ஜூலை – 1994 இதழ்.