இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பைக் கிரிக்கெட் போட்டி வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை, பாகிஸ்தான் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.
19-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நடைபெறும் துவக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், 2017-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரங்கேறும் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதன்படி போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.60 கோடியாகும்.
இது கடந்த போட்டியைவிட 53 சதவீதம் அதிகமாகும்.
சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் அணி ரூ.19 ½ கோடியைப் பரிசுத் தொகையாக அள்ளிச் செல்ல உள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.9½ கோடி பரிசாகக் கிடைக்கும். அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ.4.86 கோடி வழங்கப்பட உள்ளது.
5 மற்றும் 6-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 கோடியும், 7 மற்றும் 8-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.1.2 கோடியும் பரிசாக வழங்கப்படும். அதோடு லீக் சுற்றின்போது விளையாடும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.30 லட்சம் அளிக்கப்படும்.
அத்துடன் கூடுதலாக ஒவ்வொரு அணிக்கும் ரூ.1.08 கோடி போட்டிக் கட்டணமாக அளிக்கப்படும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.